தலைமைத் தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் வேண்டும்: திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம்
தலைமைத் தேர்தல் ஆணையரை பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும் என திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் குறித்து...
சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும் என திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சனிக்கிழமை காலை (அக்.17) 11 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், திமுக அலுவலகத்தில் உள்ள முரசொலி மாறன் கூட்ட அரங்கத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Advertisement
Advertisement
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
* தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும்!
முதன் முதலில் எஸ்ஐஆர் தொடங்கப்பட்ட பிகார் மாநிலத்தில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, அங்குப் பெருமளவில் வாக்காளர்கள் திட்டமிட்டு நீக்கப்படும் செய்திகள் வந்தபோதே, 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதம் அதனைக் கண்டித்துக் குரல் எழுப்பியவர் திமுக தலைவர். மேலும், இதனைக் கண்டித்து பிகாரில் "Voter Adhikar Yatra" என்ற பெயரில் நடைபெற்ற வாக்காளர் அதிகாரப் பயணத்திலும் அன்றைய முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். துணைப் பொதுச் செயலாளரும் கழக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி உடன் இருந்தார்.
இதனையடுத்து, தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் "எஸ்ஐஆர் - சிறப்பு தீவிரத் திருத்தம்" என 27.10.2025 தேர்தல் ஆணையம் அறிவித்தவுடன் "சதி வலையைத் தமிழ்நாட்டிலும் விரிக்கத் தயாராகி விட்டது பாஜக." எனச் சுட்டிக்காட்டி போர்க்கொடி உயர்த்தியவர் மு.க. ஸ்டாலின் என்பதை இந்த கூட்டம் பெருமிதத்துடன் பதிவு செய்கிறது.
"பருவமழை மற்றும் பண்டிகைக் காலமான நவம்பர், டிசம்பரில் எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்வது சாத்தியமற்றது" என்பதோடு, "வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்; வாக்குத் திருட்டை முறியடிப்போம்" எனவும், "இந்த ஜனநாயக படுகொலையை எதிர்த்து தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும்" எனவும் நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளிலேயே மிகத் தீவிரமான ஆவேசக் குரல் எழுப்பியது திமுக தான். ஆளுங்கட்சியாக இருந்துகொண்டே, தேர்தல் ஆணையத்தை தட்டிக் கேட்ட அரசியல் கட்சித் தலைவரும், மாநிலத்தின் முதல்வரும் நம் தலைவரே ஆவார். நாடாளுமன்றத்திலும் நமது உறுப்பினர்கள் எஸ்ஐஆர் மூலம் வாக்குரிமையைப் பறிப்பதை எதிர்த்து தொடர்ந்து குரலெழுப்பி வந்தார்கள்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானம்
"தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம்" என இரண்டாவது கட்டமாக எஸ்ஐஆர்-ஐ தேர்தல் ஆணையம் அறிவித்த 6 நாள்களில், தமிழ்நாட்டில் 2.11.2025 ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, "பிகாரில் நடைபெற்ற எஸ்ஐஆர் குளறுபடிகளைக் களையாமல் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் எஸ்ஐஆர் கொண்டு வருவது மக்களின் வாக்குரிமையை பறிப்பதாகும்" எனவும், "தேர்தல் ஜனநாயகத்தைக் காப்பாற்றிடத் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்வது" எனவும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானம் நிறைவேற்றியதும் திமுகதான்!
வழக்கு தொடுத்ததோடல்லாமல், "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" என மாமல்லபுரத்தில் பிரமாண்டமான பயிற்சிக் கூட்டத்தைக் கழக நிர்வாகிகளுக்கு நடத்தி, தேர்தல் ஆணையத்தின் அத்துமீறல்களால் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமை பறிபோய் விடக் கூடாது எனத் தி.மு.க.வை முழு வீச்சில் களத்தில் இறக்கி விட்டுச் செயல்பட வைத்ததையும் யாரும் மறுக்கவோ முடியாது. மறைக்கவோ முடியாது.
"ஏன் எஸ்ஐஆர்-ஐ எதிர்க்கிறோம்?" என 9.11.2025 காணொலி மூலம் ஸ்டாலின் விரிவாக விளக்கி, இந்த ஜனநாயக விரோதச் செயலுக்கு எதிராக அனைவரையும் ஒருமுகமாகத் திரட்டி, களத்தில் நிற்க வைத்து, 11.11.2025 மாநிலம் முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது திமுக!
இதற்கிடையே, எஸ்ஐஆர் காரணமாகப் பெருமளவில் பாதிக்கப்பட்ட பிகார் மாநிலத்தில் 2025-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு, நவம்பர் 15 மிக ஆழமான ஒரு கருத்தினை ஸ்டாலின் பதிவிட்டார். காங்கிரஸ் கட்சியின் பிடிவாதத்தால் அங்கு கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் நிகழ்ந்த பிரச்னைகள், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணியை விட்டே வெளியேறித் தனியாகப் போட்டியிட்டது, பல தொகுதிகளில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் - இடதுசாரிகள் என ஒரே கூட்டணியைச் சேர்ந்தோர் ஒருவரை ஒருவர் எதிர்த்துக் களம் கண்டது ஆகியவற்றைக் குறிப்பாலுணர்த்தி, காங்கிரஸ் இவற்றைச் சரிசெய்துகொள்ள வேண்டுமென அதில் அறிவுறுத்தி இருந்தார்.
ஆனால், இவை எதுவுமே தேர்தல் ஆணையம் செய்த தவறுகளை நியாயப்படுத்தி விட முடியாது எனவும், தேர்தல் ஆணையத்தின் மீதான மதிப்பு இதுவரை இல்லாத அளவு சரிந்துபோய் உள்ளதாகவும் கழகத் தலைவர் அவர்கள் அதே பதிவில் மிகக் கடுமையாகத் தேர்தல் ஆணையத்தைச் சாடியிருந்ததை நினைவூட்டுவது தற்போதைய அரசியல் சூழலில் அவசியமாகிறது.
பிகாரில் நடந்தது தமிழ்நாட்டில் நடந்துவிடக் கூடாதெனக் கழகச் செயல்வீரர்கள் இயன்றவரை உழைத்தும், பல பேரின் வாக்குரிமை பறிபோனது. இவர்கள் போலி வாக்காளர்கள் அல்ல. பல ஆண்டுகளாக ஒரே முகவரியில் வசித்து வருபவர்களின் பெயர்களே வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருந்தது. மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் நிலைமை இன்னும் மோசமாக இருந்தது. இதுவே தேர்தல் முடிவுகளிலும் பிரதிபலித்தது.
எனவே, மற்ற இரு தேர்தல் ஆணையர்களின் எதிர்ப்பையும் மீறி, இத்தகைய அநீதியை முன்னின்று நடத்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவிநீக்கம் செய்யப்பட்டு, உரிய விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
* மாணவர் இயக்கங்களின் போராட்டங்களுக்குத் திமுக ஆதரவு
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்ற இரு தேர்தல் ஆணையர்களின் மாறுபட்ட கருத்துகளைப் புறந்தள்ளி, அவர்களுக்கு விவரங்களைத் தெரிவிக்காமலும் தன்னிச்சையாகவும் ஒத்திசைவு இல்லா முடிவுகளைப் பல நேர்வுகளில் எடுத்தது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு 23 செப்டம்பர் 2026 அன்று விரிவான புலனாய்வுக் கட்டுரையை முதற்பக்கத்தில் வெளியிட்டது. அதையடுத்து, தமிழ்நாட்டில் இருந்து முதல் கண்டன அறிக்கை மு.க. ஸ்டாலினிடம் இருந்துதான் வந்தது. அரசியல் சட்டத்தை மதிக்காமல் தனியாவர்த்தனம் செய்து, அதிகார வரம்பு மீறல் செய்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை உடனடியாகப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் உறுதிபட அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார். தொடர்ந்து தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் பரப்புரைகளிலும் இதுகுறித்து வெளிப்படையாகக் கண்டனத்தை வெளிப்படுத்தினார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் வெளியான கட்டுரையைத் தொடர்ந்து, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியும் பிற மாணவர் இயக்கங்களும் அக்டோபர் 10-ல் தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தனர். அவர்களின் போராட்டத்தை ஒடுக்க மத்திய அரசு தில்லி மாநிலத்தின் அனைத்து வாயில்களையும் பூட்டி வைத்ததையும், மாணவர்களின் மீது காவல்துறையின் அடக்குமுறையை ஏவி விட்டதையும் ஸ்டாலின் உடனடியாகக் கண்டித்தார்.
மேலும், அதே நாளில், முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால், பிணராயி விஜயன், மமதா பானர்ஜி, மாணிக் சர்க்கார் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கும், "இது என்ன அறிவிக்கப்படாத நெருக்கடிநிலையா" எனக் கண்டனம் தெரிவித்தார். சென்னையிலும், போராடிய மாணவர்களைத் த.வெ.க. அரசு கைது செய்து அடைத்து வைத்தபோது, ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில், முன்னாள் அமைச்சர் மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ. இராசா மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் மாணவர்களை விடுவிக்கக் கோரிப் போராட்டம் நடத்தினர். இதனையடுத்தே காவல்துறையினர் இளைஞர்களை விடுவித்தனர்.
அக்டோபர் 14-ல், கரப்பான்பூச்சி ஜனதா கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதற்கும் தனது கண்டனத்தை மு.க. ஸ்டாலின் பதிவு செய்தார். இதற்கு, அக்கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே, திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி., டெரெக் ஓபிரையன், உள்ளிட்ட பலரும் நன்றி தெரிவித்துப் பதிவிட்டனர். நேற்று கூட, சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
எனவே, எஸ்ஐஆர் ரத்து செய்யப்பட வேண்டுமென்பதிலும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டுமென்பதிலும் திமுக நிலைப்பாடு தெளிவானது; உறுதியானது; நிலையானது. இதற்காக ஜனநாயகச் சக்திகள் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு திமுக தனது முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. அதேவேளையில், ‘முதுகு குத்தி’யான காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து திமுக எந்த நடவடிக்கையிலும் பங்கேற்க இயலாது என்பதையும் ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளதை இக்கூட்டம் மீண்டும் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளது.
* இரட்டை வேடம் போடும் காங்கிரஸ் – த.வெ.க.வுக்குக் கண்டனம்
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் அதிகார வரம்பு மீறலுக்கு எதிராகவும், மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் எஸ்ஐஆர்-க்கும் எதிராகவும் மாணவர்கள், இளைஞர்கள் நடத்தும் போராட்டம் மாபெரும் எழுச்சியை இந்திய அளவில் ஏற்படுத்தியுள்ளது. காங்கிரசால் இத்தனை ஆண்டுகளாகச் செய்ய முடியாத ஒன்றை இளைஞர்கள் தன்னெழுச்சியாக நடத்திக் காட்டியுள்ளதைக் கண்டு அரண்டுபோயுள்ள காங்கிரஸ் கட்சி, முதலில் விலகி நின்று வேடிக்கை பார்த்ததை நாடறியும். பின்பு, அதற்குப் பெருகும் ஆதரவினால் வேறு வழியில்லாமல் அவர்களது போராட்டத்தில் இணைந்து ஆதரிப்பதாகத் தற்போது காட்டிக் கொள்ள வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. அடுத்தவர் உழைப்பைத் திருடித் தின்பதும், பிறர் முதுகில் சவாரி செய்துவிட்டு முதுகில் குத்துவதும் காங்கிரஸ் கட்சியின் பிறவிக் குணம் என்பதைக் கடந்தகால அரசியல் வரலாற்றை அறிந்தவர்கள் உணர்வார்கள். எனவே இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. ஆனால், இந்திய அளவில் எஸ்ஐஆர்-ஐ எதிர்ப்பதாக நாடகமாடும் காங்கிரஸ் கட்சி, கேரளம் மற்றும் தமிழ்நாடு குறித்துப் பேச மறுப்பது இரட்டை நிலைப்பாடு ஆகும். எஸ்ஐஆர்-இல் தவறுகள் நடந்திருக்கின்றன என்றால் அது எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும். மாநிலத்துக்கு ஒரு நிலைப்பாடு என மாற்றுவது இரட்டை வேடமே.
குறிப்பாகத் தமிழ்நாட்டில், அதிகமாக வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளில் எல்லாம் தவெக வெற்றி பெற்றுள்ளதை ’பிசினஸ் லைன்’ நாளேடு புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டிச் செய்தி வெளியிட்ட பின்னரும், தமிழ்நாட்டில் எல்லாம் சரியாக நடைபெற்றுள்ளது என அவர்கள் கூறி வருவது பச்சையான, அருவருப்பான சந்தர்ப்பவாதம் ஆகும். அதிலும், காங்கிரஸ் கட்சியில் இருந்துகொண்டே தவெகவிடம் சுரண்டித் தின்னும் ஒருசிலர், ‘கொடுத்த காசுக்கு மேல் கூவி’வருவதையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.
ஒருபுறம், தவெகவைச் சேர்ந்த முன்னணித் தலைவர்கள் "எஸ்ஐஆர்-ஐ எதிர்க்கிறோம் என்றும், எஸ்ஐஆர் இல்லாமல் இருந்திருந்தால் 170 தொகுதிகளை வென்றிருப்போம்" என்றும் பேசி வருகின்றனர். நேற்று முன்தினம் தவெகவுடன் ஒரே மேடையில் நின்று போராட்டம் நடத்திய ஜனநாயக சக்திகள், அக்கட்சித் தலைவர் விஜய் இதுவரை எஸ்ஐஆர் குறித்தோ ஞானேஷ் குமாரைப் பதவிநீக்குவது குறித்தோ பேச மறுப்பது, தேர்தல் ஆணையம் நியமித்த தலைமைச் செயலாளருக்குத் தவெக அரசில் பணி நீட்டிப்பு வழங்கப்படுவது, சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு, மத்திய பாஜக அரசால் தமிழ்நாட்டுக்குப் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டவர் தற்போது முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளது ஆகிய அனைத்தும் திரைமறைவில் நடைபெறும் நேர்மையற்ற ‘திருட்டு அரசியல்’காரணமாகத்தான் என்பதை உணரும் காலம் விரைவில் வரும்.
எஸ்ஐஆர் குறித்து திமுகவை விமர்சிக்கும் காங்கிரஸ், இந்தியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கூட்டாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், விஜய் ஏன் இணையவில்லை எனக் கேட்கவில்லை. காங்கிரசின் ஆதரவை வாங்கிக் கொண்டு, பாஜகவுடன் ரகசிய உறவில் இருக்கும் தவெகவைக் கண்டிக்கத் துப்பில்லாத காங்கிரஸ் திமுக மீது குற்றம் சுமத்துவது நகைப்புக்குரியது.
எஸ்ஐஆர் குறித்து தேர்தலுக்குப் பிறகு எதையும் பேசாத விஜய் இந்தியா கூட்டணியின் சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்திலும் போராட்டத்திலும் எங்கேயும் பங்கேற்கவில்லை. அந்தக் கூட்டத்தில் தவெகவில் இருந்து, ஊரை ஏமாற்ற ‘ஒற்றை மனிதராய்’கண்துடைப்புக்காக வந்து பேசிய அமைச்சர் ராஜ்மோகனின் வாயில் இருந்தும் ‘பாஜக’ என்றோ, ‘தேர்தல் ஆணையம்’ என்றோ, ‘ஞானேஷ் குமார்’ என்றோ தப்பித் தவறியும் வரவில்லை என்பதை நடுநிலையாளர்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
இப்படி தொடர்ந்து இரட்டை வேடும் போட்டு மக்களை ஏமாற்றப் பார்க்கும் காங்கிரஸ் கட்சிக்கும், தமிழக வெற்றிக் கழகத்துக்கும் இக்கூட்டம் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்வதுடன், கூட்டணியில் இல்லாத கழகத்தை இனியும் வம்புக்கு இழுத்து வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டாம் என்றும் இக்கூட்டம் எச்சரிக்கிறது.
* தேர்தல் குளறுபடிகளைத் தீர்க்கக் கோரிக் குடியரசுத் தலைவரிடம் மனு
உலகின் மிகப்பெரும் ஜனநாயகமாகத் திகழும் இந்தியாவில் தேர்தல்களின் மீதான நம்பிக்கை மக்களுக்கு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் ஒருதலைப்பட்சமானதாக மாறி வருகிறது.
எனவே, அனைத்து மாநிலங்களிலும் தேர்தலுக்கு முன்பாக அவசரகதியில் நடத்தப்பட்டு, திட்டமிட்டு வாக்காளர்களை நீக்க வழிசெய்த எஸ்ஐஆர் முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும். எஸ்ஐஆர்-க்கு முந்தைய வாக்காளர் பட்டியலைக் கொண்டே இனி வரும் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது மக்களின் வாக்குரிமையை உறுதிசெய்வதற்கான நடைமுறையாக இருக்க வேண்டுமே தவிர, வாக்குரிமையைப் பறிக்கும் சதி ஆயுதமாக மாற்றப்படக் கூடாது. போதுமான கால அவகாசமும், வாய்ப்புகளும் தரப்பட்டே இனி அப்படிப்பட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
நாடு முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் மீதான நம்பகத்தன்மையும் கேள்விக்குறியாகி உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுக்கும் ஒப்புகைச் சீட்டு(விவிபேட்) எண்ணிக்கைக்கும் வேறுபாடுகள் இருப்பது தொடர்ந்து பல இடங்களில் கண்டுபிடிக்கப்படுவது இந்த ஐயத்தை மேலும் வலுப்படுத்துகிறது. இதன் காரணமாகத்தான், விவிபேட் ஸ்லிப்புகள் முழுமையாக எண்ணப்பட வேண்டுமெனத் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
இந்த நிலையில், மக்களுக்குத் தேர்தல்களின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கவும், தேர்தல் முடிவுகள் நியாயமாக அமைந்திடவும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக, பழையபடி வாக்குச்சீட்டு முறையில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.
மேற்கண்ட இரு கோரிக்கைகளையும் வலியுறுத்தி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி குடியரசுத் தலைவரிடம் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை மனு அளிப்பார்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
Demand for removal of the Chief Election Commissioner: Resolution passed at DMK MPs' meeting
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.