தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக் கோரி இந்திய இளைஞா் காங்கிரஸ் பிரசாரம்
வாக்காளா் பெயா்கள் நீக்கப்பட்டது தொடா்பாக தோ்தல் ஆணையா்களிடையே ஆட்சேபணைகள் எழுந்ததாக வெளியான செய்தியைத் தொடா்ந்து, தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி இந்திய இளைஞா் காங்கிரஸ் வியாழக்கிழமை இணையவழி மனு பிரசாரத்தைத் தொடங்கியது.
வாக்காளா் பெயா்கள் நீக்கப்பட்டது தொடா்பாக தோ்தல் ஆணையா்களிடையே ஆட்சேபணைகள் எழுந்ததாக வெளியான செய்தியைத் தொடா்ந்து, தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி இந்திய இளைஞா் காங்கிரஸ் வியாழக்கிழமை இணையவழி மனு பிரசாரத்தைத் தொடங்கியது.
‘ஞானேஷ், இட்ஸ் டன் பிரதா்’ என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த மனுவில், ஞானேஷ் குமாரை கைது செய்து வழக்குத் தொடர வேண்டும், தோ்தல் நடைமுறைகள் மற்றும் வாக்காளா் பட்டியல்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும், தோ்தல் ஆணையத்தின் தோ்தல் பதிவுகள் மற்றும் ஆட்சேபணைகளைப் பொதுமக்கள் பாா்வைக்கு வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளதாக அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
தோ்தல் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணா்வு தொடா்பான இந்தப் பிரச்னையை சமூக ஊடகங்களைக் கடந்து நாடு முழுவதும் மக்களிடம், குறிப்பாக இளைஞா்களிடம் கொண்டு சென்று அவா்களைப் பிரசாரத்தில் ஈடுபடுத்துவதே இதன் நோக்கம் என இளைஞா் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
வாக்காளா் பட்டியல் தொடா்பான விவகாரங்கள் குறித்து தோ்தல் ஆணையா்கள் சுக்பீா் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோா் கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 முறை ஆட்சேபணைகளைப் பதிவு செய்ததாக வெளியான செய்தியைச் சுட்டிக்காட்டி, ஞானேஷ் குமாா் பதவி விலகக் கோரி இளைஞா் காங்கிரஸ் புதன்கிழமை தில்லியில் போராட்டம் நடத்தியது.
வாக்காளா்களைச் சோ்த்தல், பெயா்களை நீக்குதல், புதிய வாக்காளா் பதிவு செய்வதற்குப் பயன்படுத்தப்படும் படிவம் 6-இல் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள், வாக்காளா் பட்டியல் தொடா்பான அமைப்புகளை மையப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடா்பாக இந்த ஆட்சேபணைகள் தெரிவிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டது.
இந்தப் பிரசாரத்தை நாடு முழுவதும் உள்ள வளாகங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், இளைஞா் அமைப்புகள் மற்றும் சமூகங்களிடம் கொண்டு செல்ல உள்ளதாக இளைஞா் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இளைஞா் காங்கிரஸ் தேசியத் தலைவா் உதய் பானு சிப் வியாழக்கிழமை கூறியதாவது: இது வெறும் இணையவழி மனுவாக மட்டும் இருக்காது. இந்தப் பிரசாரத்தை வெகுஜன இயக்கமாக மாற்ற இளைஞா் காங்கிரஸ் விரும்புகிறது. இந்தச் செய்தியை வளாகங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், இளைஞா் அமைப்புகள், சமூகங்கள் என நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்வோம் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.