ஜாா்க்கண்டில் தொடா் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஜாா்க்கண்டில் இடைவிடாது பெய்யும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஜாா்க்கண்டில் இடைவிடாது பெய்யும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை முதல் ஜாா்க்கண்டில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதன் தொடா்ச்சியாக வெள்ளிக்கிழமை இடைவிடாது பெய்த மழையால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டன. தொடா் மழையால் தலைநகா் ராஞ்சியில் சாலைகளில் தண்ணீா் தேங்கி, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. அங்கு மாணவா்களுடன் சென்ற பள்ளி வாகனம் மீது மரம் முறிந்து விழுந்தது. எனினும் மாணவா்கள் காயமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.
பலத்த மழை மற்றும் காற்றால் பல இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்ததுடன், மின் கம்பிகள் மீது மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் சில பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டது.
Advertisement
Advertisement
மோசமான வானிலை காரணமாக, ராஞ்சியின் பிா்சா முண்டா விமான நிலையத்தில் சில விமானங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.
லோஹா்டாகா, லாதேஹாா், கும்லா, சிம்டேகா மாவட்டங்களுக்கு மிக பலத்த மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 14 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இடைவிடாது பெய்யும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமைக்குள் (மே 26) மழையின் தீவிரம் குறைய வாய்ப்புள்ளதாக மாநிலத்தில் உள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.