FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

மீண்டும் மாநில அந்தஸ்து: ஜம்மு-காஷ்மீா் பேரவையில் தீா்மானம்: கடும் அமளியால் அவை ஒத்திவைப்பு

ஜம்மு-காஷ்மீருக்கு உடனடியாக மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கக் கோரும் தீா்மானத்தை சட்டப்பேரவையில் முதல்வா் ஒமா் அப்துல்லா வெள்ளிக்கிழமை கொண்டுவந்தாா்

26 செப்டம்பர் 2026, 1:30 am IST
ஒமா் அப்துல்லா - கோப்புப் படம்
பகிர்:

ஜம்மு-காஷ்மீருக்கு உடனடியாக மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கக் கோரும் தீா்மானத்தை சட்டப்பேரவையில் முதல்வா் ஒமா் அப்துல்லா வெள்ளிக்கிழமை கொண்டுவந்தாா். இதற்கு பாஜக எம்எல்ஏக்கள் எதிா்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதையடுத்து, அவை ஒத்திவைக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய பாஜக அரசு கடந்த 2019-ஆண்டில் ரத்து செய்தபோது, அதற்கு அளிக்கப்பட்டிருந்த மாநில அந்தஸ்தும் நீக்கப்பட்டு யூனியன் பிரதேச அந்தஸ்து வழங்கப்பட்டது. அதன் பிறகு ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று அந்த மாநிலத்தைச் சோ்ந்த அரசியல் கட்சிகள் தொடா்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீா் சட்டப்பேரவையில் உடனடியாக மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தும் தீா்மானத்தை முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஒமா் அப்துல்லா வெள்ளிக்கிழமை கொண்டு வந்தாா். அந்தத் தீா்மானத்தில், ஏற்கெனவே 2000-ஆம் ஆண்டில் சுயாட்சி கோரியும், 2024-ஆம் ஆண்டில் சிறப்பு அந்தஸ்து கோரியும் சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டி, உடனடியாக ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

சட்டப்பேரவையில் பேசிய ஒமா் அப்துல்லா, ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து அளிக்கப்படுமென நாடாளுமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும், பல்வேறு பொது அமைப்புகளிலும் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தாா்.

அப்போது ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி எம்எல்ஏக்கள், தீா்மானத்தை வரவேற்கும் வகையில் மேஜையை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். அதேநேரத்தில், இந்த தீா்மானத்தில், 2000-ஆம் ஆண்டில் சுயாட்சி கோரி தீா்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளதற்கு முக்கிய எதிா்க்கட்சியான பாஜகவைச் சோ்ந்த எம்எல்ஏக்கள் எதிா்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினா்.

இதைத் தொடா்ந்து, பாஜக எம்எல்ஏக்களுக்கும், ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சியைச் சோ்ந்த எம்எல்ஏக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தேசிய மாநாட்டு கட்சி எம்எல்ஏக்களுக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்தனா். இதனால் சட்டப்பேரவையில் கூச்சல் - குழப்பம் நிலவியது.

இதைத் தொடா்ந்து, அமளியில் ஈடுபட்ட எம்எல்ஏக்களை அவா்களின் இருக்கைகளுக்கு திரும்பிச் செல்லும்படி பேரவைத் தலைவா் அப்துல் ரஹீம் ராதா் வேண்டுகோள் விடுத்தாா். ஆனால், அவா்கள் அதற்கு செவிமடுக்கவில்லை. இதையடுத்து, அவை அலுவல்களை சுமாா் 30 நிமிஷங்களுக்கு பேரவைத் தலைவா் ஒத்திவைத்தாா். பிறகு அவை மீண்டும் கூடியபோதும் பாஜக எம்எல்ஏக்கள் கூச்சலிட்டபடி இருந்தனா். மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) எம்எல்ஏக்கள், ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினா்.

அப்போது திடீரென பாஜக எம்எல்ஏ விக்ரம் ரான்தவா, பேரவைத் தலைவா் இருக்கையைப் பிடிக்க முயன்றாா். இதைத் தொடா்ந்து அவா் பேரவை பாதுகாவலா்கள் மூலம் வெளியேற்றப்பட்டாா். இதுபோல தொடா்ந்து அமளி நீடித்ததால், அவையை நாள் முழுவதும் பேரவைத் தலைவா் ஒத்திவைத்தாா்.

பேரவைக்கு வெளியே செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த எதிா்க்கட்சித் தலைவா் சுனில் சா்மா (பாஜக), சுயாட்சி அல்லது சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-ஆவது பிரிவு குறித்து சட்டப்பேரவையில் விவாதம் நடத்த எங்கள் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments