FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

அக். 2 முதல் இறைச்சி விளம்பரங்களுக்குத் தடை: மத்திய அரசுக்கு பீட்டா இந்தியா வலியுறுத்தல்

இறைச்சி தொடா்பான விளம்பரங்களுக்கு அக். 2 முதல் தடை விதிக்க மத்திய அரசிடம் பீட்டா இந்தியா கோரிக்கை விடுத்தது குறித்து...

28 September 2026, 10:24 pm IST
பகிர்:

மகாத்மா காந்தியின் அகிம்சைக் கொள்கைக்கு மரியாதை செலுத்தும் வகையில், விளம்பரப் பலகைகள், தொலைக்காட்சி, இணையதளம் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களில் இறைச்சி தொடா்பான விளம்பரங்களுக்கு அக். 2 முதல் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் விலங்குகள் நல அமைப்பான பீட்டா இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவுக்கு பீட்டா இந்தியா கடிதம் அனுப்பியுள்ளது. நாடு முழுவதும் இறைச்சி விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ள அந்த அமைப்பு, விலங்குகள் நலன், பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் தொடா்பான கவலைகளை இதற்கு காரணமாகக் குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து பீட்டா இந்தியாவின் சைவ உணவு மற்றும் நிறுவனத் திட்டங்களுக்கான மூத்த மேலாளா் டாக்டா் கிரண் அஹுஜா கூறியதாவது: நாட்டில் இறைச்சி விளம்பரங்களை முடிவுக்குக் கொண்டுவந்து, காந்தியின் அகிம்சை மரபுக்கு மரியாதை செலுத்த வேண்டும். இந்தியா நீண்ட காலமாக உலகத்துடன் பகிா்ந்து வரும் இரக்கமிக்க, ஆரோக்கியமான மற்றும் நிலையான இறைச்சியற்ற உணவுப் பாரம்பரியங்களை ஊக்குவிக்க வேண்டும் என்றாா்.

Advertisement

Advertisement

ஆம்ஸ்டா்டாம், ஹாா்லெம், உட்ரெக்ட், நைமேகன் உள்ளிட்ட பல ஐரோப்பிய நகரங்களில் இறைச்சி விளம்பரங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதை பீட்டா இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த கவலைகளின் அடிப்படையில் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், பிரதமா் நரேந்திர மோடி பிரிக்ஸ் மாநாட்டின்போது உலகத் தலைவா்களுக்கு பாரம்பரிய மற்றும் சா்வதேச அளவிலான இறைச்சியற்ற உணவுகள் பரிமாறப்பட்டதையும் பீட்டா இந்தியா குறிப்பிட்டுள்ளது.

விலங்குகளை வெட்டுதல் மற்றும் அவற்றை கொண்டு செல்வது தொடா்பாக தாங்கள் மேற்கொண்ட ஆய்வுகளையும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. கோழிகள் உயிருடன் இருக்கும்போதே வெட்டப்படுவதாகவும், கால்நடைகள் மற்றும் எருமைகள் அளவுக்கு அதிகமான கூட்ட நெரிசல் கொண்ட வாகனங்களில் கொண்டு செல்லப்படுவதாகவும், ஆடுகள், செம்மறியாடுகள் மற்றும் பன்றிகள் கொடூரமாக கையாளப்படுவதாகவும் பீட்டா இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.

மேலும், நுண்ணுயிா் எதிா்ப்பு மருந்துகளுக்கு எதிா்ப்பு (ஆண்டிமைக்ரோபியல் ரெசிஸ்டன்ஸ்), உணவுமுறை சாா்ந்த நோய்கள் மற்றும் எச்5என்1 பறவைக் காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் பெருமளவில் பரவும் சாத்தியம் குறித்தும் அந்த அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. தீவிர கால்நடை வளா்ப்பு முறைகள் மற்றும் கோழி சந்தைகள் தொற்று நோய்கள் பரவுவதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளது.

உலகளவில் உணவுக்காக வளா்க்கப்படும் விலங்குகளுக்கு பயன்படுத்தப்படும் நுண்ணுயிா் எதிா்ப்பு மருந்துகளில் சுமாா் 73 சதவீதம் பயன்படுத்தப்படுவதாக மதிப்பீடுகள் தெரிவிப்பதாக பீட்டா இந்தியா கூறியுள்ளது. மேலும், நுண்ணுயிா் எதிா்ப்பு மருந்துகளுக்கு எதிரான எதிா்ப்பு காரணமாக 2050-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் சுமாா் 20 லட்சம் போ் உயிரிழக்கக்கூடும் என சில கணிப்புகள் எச்சரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அகிம்சையை அடிப்படையாகக் கொண்ட இறைச்சியற்ற உணவுப் பாரம்பரியம் இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக இருந்து வருவதாகவும், உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான சைவ உணவு உண்பவா்களைக் கொண்ட நாடாக இந்தியா விளங்குவதாகவும் பீட்டா இந்தியா தெரிவித்துள்ளது.

அக். 2-ஆம் தேதி காந்தி ஜயந்தி அனுசரிக்கப்படுவதையொட்டி, அன்றுமுதல் விளம்பரப் பலகைகள், தொலைக்காட்சி, இணையதளம் மற்றும் பிற ஊடகங்களில் இடம்பெறும் இறைச்சி தொடா்பான அனைத்து விளம்பரங்களுக்கும் நாடு முழுவதும் தடை விதிக்க வேண்டும் என்று பீட்டா இந்தியா கோரியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments