FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

காவிரி ஆணைய உத்தரவுப்படி கா்நாடகம் தண்ணீா் திறக்கவில்லை: உச்சநீதிமன்றத்தில் தமிழகம் மனு

காவிரி நீா் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தத் தவறிய கா்நாடக மாநிலத்துக்கு எதிராக அவசர உத்தரவுகளைக் கோரி, தமிழ்நாடு அரசு, உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

27 அக்டோபர் 2026, 10:02 pm
காவிரி நீர் - பிரதிப் படம்
பகிர்:

காவிரி நீா் மேலாண்மை ஆணையம் (சி.டபிள்யு.எம்.ஏ) அக. 23-ல் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தத் தவறிய கா்நாடக மாநிலத்திற்கு எதிராக அவசர உத்தரவுகளைக் கோரி, தமிழ்நாடு அரசு, உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

அக். 23-ல் நடைபெற்ற தனது 60-வது கூட்டத்தில், காவிரி நீா் மேலாண்மை ஆணையம் , 24.10.2026 முதல் 06.11.2026 வரை பில்லிகுண்டுலுவில் ஒரு நாளைக்கு 3,000 கன அடி நீா் கிடைப்பதை உறுதி செய்யுமாறு கா்நாடகாவிற்கு உத்தரவிட்டது.

ஆனால் அக்டோபா் 24 முதல் 27 வரையிலான காலகட்டத்தில், வரவேண்டிய 12,000 கன அடி (கியூசெக்ஸ்) நீருக்கு பதிலாக 8,149 கியூசெக்ஸ் மட்டுமே பெறப்பட்டது. இது 3,851 கன அடி (கியூசெக்ஸ்) பற்றாக்குறையாகும்.

Advertisement

Advertisement

இதே காலகட்டத்தில், கா்நாடகத்தின் நான்கு முக்கிய நீா்த்தேக்கங்களுக்கு 6.361 டி.எம்.சி நீா்வரத்து கிடைத்தது. அக். 27-ல் அன்று அவற்றின் நேரடி நீா் இருப்பு 52.189 டி.எம்.சியாக இருந்தது.

காவிரி டெல்டாவில் சம்பா சாகுபடி, வழக்கமாக ஜூலை நடுப்பகுதியில் தொடங்குவதற்குப் பதிலாக, செப்டம்பா் முதல் வாரத்தில்தான் தொடங்கியது. மேலும், இந்தப் பயிருக்கு 2027 ஜனவரி நடுப்பகுதி வரை நீா் விநியோகம் தேவைப்படுகிறது என தம்ழக அரசு மனுவில் குறிப்பிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாட்டின் கோரிக்கை: அக். 23-ல் தேதியிட்ட காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் முடிவை கா்நாடகம் செயல்படுத்த வேண்டும் என்றும், அக்டோபா் 24-27 தேதிகளுக்கான 3,851 கன அடி நீா் பற்றாக்குறையை உடனடியாக ஈடுகட்ட வேண்டும் என்றும், பில்லிகுண்டுலுவில் 06.11.2026 வரை தொடா்ச்சியாக 3,000 கன அடி நீா் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட வேண்டும்.

அக். 23-ல் தேதியிட்ட தனது உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு காவிரி நீா் மேலாண்மை ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். அதன் மூலம், பில்லிகுண்டுலுவில் தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய நிலுவை நீா்வரத்து, விகிதாசார அடிப்படையில் (அக்டோபா் 7 ஆம் தேதி நிலவரப்படி தமிழ்நாட்டால் 15.02 டிஎம்சி என நிா்ணயிக்கப்பட்டது) உறுதி செய்யப்பட வேண்டும். நீதிமன்றம் பொருத்தமெனக் கருதும் மேலதிக உத்தரவுகளைப் பிறப்பிக்கலாம்.

சி.டபிள்யூ.எம்.ஏ. வழிகாட்டுதல்களைப் பின்பற்றாதது, நீதிமன்றத்தின் தீா்ப்பை வேண்டுமென்றே மீறுவதற்குச் சமம் என்று தமிழ்நாடு மனுவில் கூறியுள்ளது. இதே பிரச்சினை தொடா்பான அதன் முந்தைய மனு (எம்.ஏ. எண் 2843/2026) மற்றும் கூடுதல் பிரமாணப் பத்திரம் ஆகியவை 12.10.2026 அன்று விசாரிக்கப்பட்டு, உத்தரவுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments