எல்-நினோ பாதிப்பு இருந்தாலும் விளைச்சல் குறையாது: வேளாண் அமைச்சர் நம்பிக்கை
நாட்டின் பல்வேறு பகுதிகளில் எல்-நினோ, வறட்சி, வெள்ளம் போன்றவற்றால் பாதிப்பு ஏற்பட்டாலும் நடப்பு ஆண்டில் காரீஃப் பருவ பயிர் விளைச்சல் குறையாது என்று வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் நம்பிக்கை
நாட்டின் பல்வேறு பகுதிகளில் எல்-நினோ, வறட்சி, வெள்ளம் போன்றவற்றால் பாதிப்பு ஏற்பட்டாலும் நடப்பு ஆண்டில் காரீஃப் பருவ பயிர் விளைச்சல் குறையாது என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வரும் ரபி பருவ பயிர் விளைச்சலுக்கான ஆயத்த நிலை தொடர்பாக தில்லியில் இரு நாள் தேசியக் கருத்தரங்கு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
இந்தியாவில் பருவமழைப் பொழிவை பாதிக்கும் எல்-நினோ எனப்படும் பருவநிலை மாற்ற நிகழ்வால் சவால்கள் எழுந்துள்ள சூழலில், ரபி பருவ பயிர் விளைச்சலுக்கான திட்டமிடல் நடைபெற்று வருகிறது. இதற்கான விரிவான ஆயத்தப் பணிகளை மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதமே தொடங்கியது.
Advertisement
Advertisement
2026-27 பயிர் ஆண்டுக்கான ரபி உணவு தானிய உற்பத்தி இலக்கு 177.72 மில்லியன் டன்னாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எதார்த்த பயிர் விளைச்சல் அளவான 174.51 மில்லியன் டன்னை விட அதிகமாகும். ரபி பருவத்தில் முக்கியமான பயிர் கோதுமை.
நடப்பு ஆண்டில் காரீஃப் பருவ பயிர்களின் விளைச்சல் நிலப்பகுதி சில பயிர்களுக்கு குறைந்தபோதிலும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஒட்டுமொத்த விதைப்பு பகுதிகளின் அளவு அதே மாதிரியாக உள்ளது. மழைபொழிவு குறைபாடு தற்போது 12 சதவீதமாக உள்ளது. சில பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் எல்-நினோ, வறட்சி, வெள்ளம் போன்றவற்றால் பாதிப்பு ஏற்பட்டாலும் நடப்பு ஆண்டில் காரீஃப் பருவ பயிர் விளைச்சல் பாதிக்கப்படும் என்று நான் நம்பவில்லை. 2026-27 பயிர் ஆண்டில் காரீஃப் பருவத்துக்கான உணவு தானிய உற்பத்தி இலக்கு 196.21 மில்லியன் டன்னாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட 174.14 மில்லியன் டன்னை விட இது அதிகமாகும்.
நாட்டில் நெல் விளைச்சல் பகுதி 16.32 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு குறைந்துள்ளது. அதேபோன்று சோளம், சோயாபீன்ஸ், பருத்தி ஆகியவை பயிரிடப்படும் நிலப்பரப்பின் அளவும் குறைந்துள்ளது. எனினும், கம்பு, எள் போன்ற பயிர்கள் பயிரிடப்படும் நிலப்பரப்பு அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிரம், தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திர பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் பயிர்கள் விளைவிக்கப்படும் பகுதியின் அளவு குறைந்துள்ளது. இந்த மாநிலங்களில் கனமழை, வெள்ளம் ஆகியவை பயிர் விளைச்சலின் அளவை 6.11 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு குறைத்துள்ளன.
இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் எல்-நினோவின் பாதிப்பு அதிகமாக இருக்கக் கூடும் என்று கருதப்படும் நிலையில், பயிர் விளைச்சல் தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு விரிவாக விவாதித்துள்ளது.
நாட்டில் தற்போது மழைப்பொழிவின் அளவு 12 சதவீதம் குறைந்துள்ள போதிலும் தேசிய அளவில் பெரிய நெருக்கடி ஏதும் இல்லை. கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய இரு மாநிலங்கள் மட்டுமே இதனால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று ராயலசீமா உள்ளிட்ட ஆந்திர பிரதேசத்தின் சில பகுதிகள், தெலங்கானா மாநிலத்தின் சில பகுதிகள், ராஜஸ்தான் மாநிலத்தின் சில பகுதிகள் மழை குறைவால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த மாநிலங்களில் இருந்து இதுதொடர்பான விரிவான அறிக்கைகள் வருவதற்காக காத்திருக்கிறோம். கர்நாடகத்தின் கோரிக்கையை ஏற்று அந்த மாநிலத்தில் மத்தியக் குழு வரும் அக்டோபர் 3ஆம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மழைப்பொழிவு குறித்து ஆராய உள்ளது. இதேபோன்ற குழுவை தங்கள் மாநிலத்துக்கும் அனுப்புமாறு மகாராஷ்டிர முதல்வர் கோரியுள்ளார். அந்த மாநிலத்துக்கும் குழு அனுப்பப்படும்.
உணவு தானிய ஏற்றுமதி தொடர்பாக பல்வேறு நாடுகளுடன் இந்தியா செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்கள் குறித்து விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் தகவல் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும். இதன்மூலம் அவர்கள் உணவு தானிய ஏற்றுமதி வாய்ப்புகளை அறிந்து கொள்ள முடியும் என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.