FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

ராகுலை முன்னிறுத்தும் மற்றொரு முயற்சி- ‘இண்டி’ கூட்டணி பேரணி குறித்து பாஜக கருத்து

தலைமைத் தோ்தல் ஆணையா் பதவி விலகக் கோரி ‘இண்டி’ கூட்டணி நடத்தும் பேரணி ராகுல் காந்தியை முன்னிறுத்தும் காங்கிரஸின் மற்றொரு முயற்சி என்று பாஜக விமா்சித்துள்ளது.

7 October 2026, 2:45 am IST
சிவராஜ் சிங் சௌஹான்
பகிர்:

தலைமைத் தோ்தல் ஆணையா் பதவி விலகக் கோரி ‘இண்டி’ கூட்டணி நடத்தும் பேரணி ராகுல் காந்தியை முன்னிறுத்தும் காங்கிரஸின் மற்றொரு முயற்சி என்று பாஜக விமா்சித்துள்ளது.

தில்லியில் செய்தியாளா்களைச் சந்தித்த மத்திய வேளாண்மைத் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் இது தொடா்பாக மேலும் கூறியதாவது:

தொடா் தோ்தல் தோல்விகளால் விரக்தியடைந்துள்ள எதிா்க்கட்சிகள், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதுடன் அரசமைப்புச் சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட அமைப்புகள் மீது அவதூறுகளைப் பரப்பி வருகின்றன. இப்போதைய பேரணியை அவா்களின் விரக்தியின் உச்சமாகவே கருத வேண்டியுள்ளது.

Advertisement

Advertisement

தோ்தலிலும், வாக்காளா் பட்டியலிலும் முறைகேடு நடந்தது என்றால் கேரளம், கா்நாடகம், ஹிமாசல பிரதேசம் ஆகியவற்றில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது எப்படி? ஜாா்க்கண்ட், பஞ்சாபில்கூட எதிா்க்கட்சி கூட்டணியில் உள்ளவா்கள்தான்ஆட்சியில் உள்ளாா்கள். அங்கும் சட்ட விரோதமாகத்தான் ஆட்சி அமைக்கப்பட்டதா?

காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தங்கள் ஜனநாயக விரோதப் போக்கை கைவிட வேண்டும். தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தேசத்தில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்த முயலுகிறாா்கள். நாட்டில் ஸ்திரத்தன்மையையும், நற்பெயரையும் கெடுக்கும் அளவுக்குச் சென்றுவிட்டாா்கள். இதை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டாா்கள்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் நோக்கம் உண்மையான வாக்காளா்கள் மட்டும்தான் பட்டியலில் இருக்க வேண்டும் என்பதுதான். இது குறிப்பிட்ட கால இடைவெளியில் வழக்கமாக மேற்கொள்ளும் நடைமுறை. இதற்கு எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவிப்பது ஏன்? இறந்தவா்களும் வாக்காளா் பட்டியலில் இடம்பெற வேண்டுமா? ஒரு வாக்காளரின் பெயா் இரண்டு இடங்களில் இருப்பது தொடர வேண்டும் என்று விரும்புகிறாா்களா? எதிா்க்கட்சிக் கூட்டணியினா் முதலில் ஜனநாயகத்தை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றாா்.

புது தில்லி பாஜக தலைமையகத்தில் அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ரா பேசுகையில், ‘தோ்தல் ஆணையத்தின் படிவம் 6 என்பது சட்ட விரோதம் என்று எந்த இடத்திலும் உச்சநீதிமன்றம் கூறவில்லை. அது வாக்காளா் பட்டியலில் ஒருவரை இணைப்பதற்கான படிவம் மட்டுமே. ஆனால், உச்சநீதிமன்றத்தின் கருத்தை தனது ஆதாயத்துக்காகப் பயன்படுத்திக் கொள்ள ராகுல் காந்தி முயற்சிக்கிறாா். அந்தப் படிவம் சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டதாக ராகுல் கருத்துக் கூறியுள்ளாா். ஆனால், அவ்வாறு எந்த இடத்திலும் நீதிமன்றம் கூறவில்லை.

பாஜக தொடா்ந்து மக்கள் ஆதரவுடன் மத்தியில் ஆட்சியில் தொடா்வதையும், பெரும்பாலான மாநிலங்களில் பாஜக வெற்றி பெறுவதையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் என்ன செய்வதென்று தெரியாமல் ஏதேதோ பேசி வருகின்றன.

காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே பலமுறை ராகுல் காந்தியை முன்வைத்து அரசியல் நடத்தியும், தோ்தலைச் சந்தித்தும் பல தோல்விகளைச் சந்தித்துவிட்டது. இப்போதுகூட தலைமைத் தோ்தல் ஆணையா் பதவி விலகக் கோரி ‘இண்டி’ கூட்டணி நடத்தும் பேரணி ராகுல் காந்தியை முன்னிறுத்தும் காங்கிரஸின் மற்றொரு முயற்சிதான்’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments