சினிமாவில்தான் நடிப்பேன்; மக்கள் முன் நடிக்க மாட்டேன்: விஜயகாந்த்
சினிமாவில்தான் நடிப்பேன்; மக்கள் முன் நடிக்க மாட்டேன். மக்கள்தாம் எனக்கு முதலாளிகள் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறினார்.
சினிமாவில்தான் நடிப்பேன்; மக்கள் முன் நடிக்க மாட்டேன். மக்கள்தாம் எனக்கு முதலாளிகள் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறினார்.
தருமபுரி தொலைத் தொடர்பு அலுவலகம் முன், ஞாயிற்றுக்கிழமை தி.மு.க. முன்னாள் அமைச்சர் வ.முல்லைவேந்தன் தனது ஆதரவாளர்களுடன் தே.மு.தி.க.வில் இணையும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், பங்கேற்ற விஜயகாந்த் பேசியது: தருமபுரியில் தொழில் வளம் இல்லாததால், பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு ஏராளமானோர் வேலை தேடி குடிபெயர்கின்றனர். அதேபோல, ஒகேனக்கல் குடிநீர் சுத்தமாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். இதே தருமபுரியில் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. இதை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
Advertisement
Advertisement
தே.மு.தி.க. ஆட்சியில் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட மக்களுக்கும் நல்ல திட்டங்களைச் செயல்படுத்துவோம். அப்போது, தருமபுரி மாவட்ட மக்களின் பிரச்னைகளை நிச்சயம் தீர்ப்போம்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியை அவரது வயது முதிர்வின் காரணமாக விமர்சனம் செய்வதைத் தவிர்க்கிறேன். நான் திரைப்படத்தில் மட்டுமே நடிக்கப் பழக்கப்பட்டவன். மக்கள் முன் நடிக்க மாட்டேன். மக்கள்தாம் எனது முதலாளிகள்.
மக்களுக்காக மக்கள் பணி கூட்டங்களில் பேசிவந்த என்மீது வழக்குத் தொடுத்தனர். வழக்கைக் கண்டு நான் அஞ்சுவதில்லை.
நான் ஜாதி, மத பேதமற்றவன். அது எங்களது கட்சியிலும் இல்லை. எனவே, அந்த பேதங்களை அனைவரும் தவிர்க்க வேண்டும். தாய், தந்தையரை வணங்க வேண்டும்.
எங்களது கட்சியில் இணைந்துள்ள அனைவரையும் உரிய முறையில் மதிப்பளித்து நடத்துவோம் என்றார்.
தி.மு.க.வில் ஜனநாயகம் இல்லை: தே.மு.தி.க.வில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்த முன்னாள் அமைச்சர் வ.முல்லைவேந்தன் பேசியது: தி.மு.க.வில் தற்போது ஜனநாயகம் இல்லை. அந்தக் கட்சி கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இல்லை. மு.க.ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு பெரியாரின் கொள்கைகள் இல்லை. அண்ணாவின் சமதர்மம் இல்லை. மாற்றுக் கட்சிக்குச் சென்றுவந்தவர்கள் தற்போது தி.மு.க.வுக்கு பொறுப்பாளர்களாக உள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில், மாநிலங்களை உறுப்பினர்கள் 9 பேர் கிராமங்களைத் தத்தெடுத்து உள்ளனர். ஆனால், இதுவரை எவ்வித வளர்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை. ஒகேனக்கல் குடிநீரில் புளோரைடு நீர் கலக்கப்படுகிறது. சிப்காட் திட்டம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட திட்டங்கள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்றார்.
இதைத் தொடர்ந்து, முல்லைவேந்தன் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு தே.மு.தி.க. உறுப்பினர் அட்டை அளித்து, கட்சியில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
இதில், தே.மு.தி.க. சட்டப் பேரவைக் கொறடா வி.சி.சந்திரகுமார், சட்டப் பேரவை உறுப்பினர்கள் வெங்கடேசன், அ.பாஸ்கர், மாவட்டச் செயலர் இளங்கோவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.