திருச்சி முகாம் சிறையில் 2 பேர் தற்கொலை முயற்சி: அதிகாரிகள் விசாரணை
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் 2 பேர் தங்களை முகாமிலிருந்து விடுவிக்க கோரி
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் 2 பேர் தங்களை முகாமிலிருந்து விடுவிக்க கோரி தற்கொலைக்கு முயன்றனர். இது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையைச் சேர்ந்த பா. சிவனேஸ்வரன், த. மகேஸ்வரன், க. மகேஸ்வரன், க. கிருஷ்ணமூர்த்தி, ஞா. சுரேஷ்குமார் ஆகிய 5 பேர் ஆவணங்களின்றி இந்தியா வந்தது உள்ளிட்ட பல்வேறு குற்றப் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தங்களை சிறப்பு முகாமிலிருந்து விடுவித்து, அகதிகள் முகாம் அல்லது வெளியிடத்தில் தங்கி வழக்குகளை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement
மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இரவு 11 மணிக்கு தனித் துணை ஆட்சியர் நடராஜன், க்யூ பிரிவு டிஎஸ்பி பால்வண்ணநாதன், கன்டோன்மென்ட் உதவி ஆணையர் அசோக்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கைகள் குறித்து அரசுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்தனர். அதன் பேரில் அவர்கள் தங்களது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டனர்.
இந்நிலையில் முகாம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள யுகபிரியன்(25) என்பவர் தன்னை முகாமிலிருந்து விடுவிக்க கோரி இரவு 12 மணியளவில் அளவுக்கு அதிகமாக 20 தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை போலீஸார் மீட்டு திருச்சி மருத்துவமனையில் சேர்த்தனர். இவரைத் தொடர்ந்து திங்கள்கிழமை காலை,மகேந்திரன் என்பவரும் இதே கோரிக்கையை வலியுறுத்தி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த முகாம் சிறைவாசிகள்,அவரை மீட்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இது குறித்து மேற்கண்ட அதிகாரிகளும், கே.கே.நகர் போலீஸாரும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். தற்கொலைக்கு முயன்ற மகேந்திரன் புழல் சிறையிலிருந்து கடந்த மாதம் திருச்சி முகாம்சிறைக்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.