காலா படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்குகள் முன்பு கன்னட அமைப்பினர் போராட்டம்
கர்நாடகாவில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இன்று திரைக்கு வந்துள்ள காலா படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்குகள் முன்பு
பெங்களூரு: கர்நாடகாவில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இன்று திரைக்கு வந்துள்ள காலா படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்குகள் முன்பு கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் காலா'. இந்த படத்தில் அவருடன் நடிகர்கள் சமுத்திரக்கனி, நானா படேகர், சாயாஜி ஷிண்டே, சம்பத் மற்றும் நடிகைகள் ஈஸ்வரிராவ், சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கிறார்.
காவிரி விவகாரத்தில் ரஜினிகாந்த் தமிழகத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த நிலையில் கர்நாடகாவில் காலா படம் வெளியாவதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனை தொடர்ந்து இந்த படத்திற்கு தடை விதிக்கும்படி கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதனால் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை, காலா திரைப்படத்தை கர்நாடகாவில் தடை செய்வதாக அறிவித்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து காலா திடைப்படத்தின் தயாரிப்பாளர் நடிகர் தனுஷ் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். அதற்கு நீதிமன்றம், “கர்நாடகாவில் காலா திரையிட எந்த தடையும் இல்லை. அரசு உரிய போலீஸ் பாதுகாப்பை வழங்க வேண்டும்” என உத்தரவிட்டது.
இருப்பினும் கன்னட அமைப்பினரும், கர்நாடக வர்த்தக சபை தலைவர் சாரா கோவிந்தும் காலா படத்தை எதிர்த்து போராட்டம் நடத்துவோம் என அறிவித்தனர். மேலும், “காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு எதிராக செயல்பட மாட்டேன். காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கக் கூடாது என ரஜினி அறிக்கை வெளியிட வேண்டும்” என நிபந்தனை விதித்தனர்.
இதனை ரஜினிகாந்த் ஏற்க மறுத்த நிலையில், கன்னட அமைப்பினரின் போராட்டம் வலுத்தது. இதையடுத்து காலா திரைப்படத்தின் கர்நாடக விற்பனை உரிமையை வாங்கிய கோல்டி நிறுவனம் படத்தை வெளியிடும் முடிவை கைவிடுவதாக நேற்று அறிவித்தது. இதையடுத்து கன்னட திரைத்துறையில் மூத்த தயாரிப்பாளரான கனகபுரா சீனிவாஸ் காலா திரைப்படத்தின் கர்நாடக மாநில உரிமையை வாங்கினார்.
இதுகுறித்து கனகபுரா சீனிவாஸ் கூறுகையில், “காவிரி விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த், கர்நாடகாவுக்கு எதிராக எதையும் பேசவில்லை. இதனால் கன்னட மக்களின் மனம் புண்படவில்லை. கர்நாடகா முழுவதும் 130-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் காலா இன்று வியாழக்கிழமை வெளியாகும்” என அறிவித்தார்.
இந்நிலையில் முதல்வர் குமாரசாமி கூறுகையில், “கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதால் அதனை எங்களால் மீற முடியாது. அதனால் காலா திரைப்படத்தை திரையிடுவதற்கும், திரையரங்கு பாதுகாப்புக்கும் அரசு உதவும். தனிப்பட்ட முறையில் என்னைக் கேட்டால், காலா திரைப்படத்தை வெளியீட்டு தேதியை மாற்றி வைக்கலாம். இப்போது சூழல் உகந்ததாக இல்லை” என்றார்.
இதுகுறித்து கர்நாடக காவல்துறை தலைவர் நீலமணி ராஜு கூறுகையில், “காலா திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும். காவல்துறையின் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
இந்நிலையில், பல போராட்டங்களுக்கு மத்தியில் காலா படம் உலகெங்கிலும் இன்று வெளியானது. கர்நாடகாவில் 130-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இன்று வெளியானது.
நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேச அறிவிப்பிற்கு பின்னர் வெளியாகும் படம் என்பதனால் ரசிகர்களிடையே பரபரப்பும் ஆர்வமும் ஏற்பட்டுள்ளது. இதனால் காலையிலேயே திரையரங்குகள் முன் ரசிகர்கள் குவிந்தனர்.
இதனிடையே கர்நாடகாவில் காலா படம் வெளியாகும் திரையரங்குகள் முன்பு கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கலா படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பியபடி இருந்தனர்.
இதையடுத்து அங்கு வந்த போலீஸார் அவர்களை அமைதிப்படுத்தி அங்கிருந்து திரும்பி அனுப்பினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.