திருப்பூர் மாவட்டம் முத்தூரில் சாலைப்பணியாளர்களைத் தாக்கிய பள்ளி நிர்வாகிகளால் பரபரப்பு
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் நேற்று சாலைப்பணியாளர்களைத் தாக்கிய தனியார் பள்ளி நிர்வாகிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் நேற்று சாலைப்பணியாளர்களைத் தாக்கிய தனியார் பள்ளி நிர்வாகிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
முத்தூர் பேருந்து நிலையம் அருகில் கொடுமுடி சாலையில் குட்டப்பாளையம் அரவிந்த் என்பவருக்குச் சொந்தமான ஆனூர் வித்யாலயா என்கிற தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் சாலையை ஆக்கிரமித்து புதிதாகக் கட்டடம் அமைக்கும் பணி நடந்து கொண்டிருப்பதாக, பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வெள்ளக்கோவில் உள்கோட்ட நெடுஞ்சாலைத் துறை சாலை ஆய்வாளர்கள் சு.விஜயா, ச.கணேசன் ஆகியோர் 7 சாலைப்பணியாளர்களுடன் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தனர். அப்போது ஆக்கிரமிப்பு உறுதி செய்யப்பட்டதால் சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடம் கட்டடப் பணிகளை நிறுத்துமாறு கூறினர்.
ஆனால் பள்ளி உரிமையாளர் மறுப்புத் தெரிவித்த நிலையில், பள்ளி மேலாளர் கொடுமுடி தமிழ்மணி, அவரது உதவியாளர் மற்றும் சில பள்ளி ஓட்டுநர்கள் சாலைப்பணியாளர்களைத் தகாத வார்த்தைகளால் பேசி அவர்களைத் தாக்கியுள்ளனர்.
இதில் இந்தத் தகராறை செல்லிடப்பேசியில் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்த சாலைப்பணியாளர் ஆர்.ஆறுமுகம் மயக்கமடைந்து கீழே விழுந்து விட்டார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.
சாலைப்பணியாளர்கள் தாக்கப்பட்டது குறித்து, அவர்களது சங்கத்தின் மூலம் திருப்பூர், ஈரோடு மாவட்டம் முழுவதும் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரசு ஊழியர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்துத் தாக்கியதாகவும், பள்ளி உரிமையாளர் பெரு மதிப்பில் இருப்பதால் சாலைப்பணியாளர்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அவரே பொறுப்பேற்க வேண்டுமெனவும் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், வெள்ளக்கோவில் காவல் நிலைய ஆய்வாளர் மு.ஜெயபாலன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.