100 சிசிடிவி கேமராக்களால் முடியாததை 4 சாமானியர்களால் பிடிபட்ட கொள்ளையன்! எப்படி..?
மதுரை பைபாஸ் சாலை தனிஷ்க் நகைக்கடை கொள்ளையில் நான்கு சாமானியர்களால் பிடிபட்ட கொள்ளையன் குறித்து...
மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் கடந்த நவம்பர் 12-ஆம் தேதி அதிகாலை புகுந்த மர்ம நபர், சுமார் 10 கிலோ தங்கம், ஒரு கிலோ வைரம் என மொத்தம் 11.384 கிலோ நகைகளை கொள்ளையடித்துச் சென்றார். இதன் மதிப்பு சுமார் ரூ.15 கோடி. கொள்ளையனைப் பிடிக்க மதுரை மாநகர காவல்துறையினர் 9 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினர்.
நகைக்கடை ஊழியர் கவனித்த டாட்டூ
இந்த வழக்கில் நான்கு சாமானியர்களின் தகவல்கள் முக்கியத் திருப்பங்களை ஏற்படுத்தின. கொள்ளைக்கு முன்பு வெவ்வேறு உடைகளில் வந்தாலும் ஒரே தொப்பி மற்றும் கையில் டாட்டூவுடன் கடைக்கு வந்த இளைஞரை நகைக்கடை ஊழியர் கவனித்து காவல்துறையிடம் தெரிவித்தார். இதன் அடிப்படையில் மதுரை பழங்காநத்தத்தைச் சேர்ந்த 25 வயது யூடியூபர் நிஷாந்த் மீது சந்தேகம் ஏற்பட்டது.
Advertisement
Advertisement
விசாரணைக்கு உதவிய மாடு மேய்ப்பவரின் தகவல்
கொள்ளையின்போது அணிந்திருந்த உடைகள், தொப்பி, கையுறைகளை மாடக்குளம் கண்மாய் அருகே எரிப்பதைப் பார்த்த மாடு மேய்ப்பவர் அளித்த தகவலும் விசாரணைக்கு உதவியது. அப்பகுதி சிசிடிவி காட்சிகள் மூலம் நிஷாந்தின் தந்தைக்குச் சொந்தமான ஆட்டோவை அடையாளம் கண்ட போலீசார், தொடர்ந்து நடத்திய விசாரணையில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 5 கிலோ நகைகளை மீட்டனர். மேலும், நிஷாந்தின் தந்தை சுரேஷ் மற்றும் அவருக்கு நெருக்கமான மீனாட்சி நாச்சியார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
செல்போன் வழங்கிய வழிப்போக்கர்
இதற்கிடையே தலைமறைவாக இருந்த நிஷாந்த், திருப்பூரில் வழிப்போக்கர் ஒருவரிடம் செல்போனை இரவல் வாங்கி தனது காதலியிடம் பேசியுள்ளார். அந்த அழைப்பை ஆய்வு செய்த காவல்துறையினர், அவரது நடமாட்டம் குறித்த தகவல்களைச் சேகரித்தனர்.
கொள்ளையனை அடையாளம் கண்ட நடத்துநர்
தொடர்ந்து பெங்களூருவில் இருந்து சேலம் சென்ற தனியார் பேருந்தில் பயணம் செய்த நிஷாந்தை, தொலைக்காட்சியில் பார்த்த புகைப்படத்தின் மூலம் பேருந்து நடத்துநர் அடையாளம் கண்டார். அவர் ஓட்டுநர் மூலம் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்ததால், தர்மபுரி மாவட்டம் சேஷம்பட்டி அருகே பேருந்தை நிறுத்திய போலீசார் நிஷாந்தைச் சுற்றிவளைத்துக் கைது செய்தனர்.
நான்கு சாமானியர்களால் பிடிபட்ட கொள்ளையன்
இவ்வாறு நகைக்கடை ஊழியர், மாடு மேய்ப்பவர், செல்போன் வழங்கிய வழிப்போக்கர், பேருந்து நடத்துநர் என நான்கு சாமானியர்களின் விழிப்புணர்வும் தகவல்களும் கொள்ளை வழக்கில் முக்கியப் பங்காற்றின.
கொள்ளையடிக்கப்பட்ட 11.384 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளும் முழுமையாக மீட்கப்பட்டுள்ளதாக மதுரை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஒத்துழைப்பும் விழிப்புணர்வும்
நவீன தொழில்நுட்பங்களுடன் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், பொதுமக்களின் ஒத்துழைப்பும் விழிப்புணர்வும் ரூ.15 கோடி கொள்ளை வழக்கை முடிவுக்குக் கொண்டுவர உதவியுள்ளது.