மதுரை நகைக்கடை திருட்டு! இருவர் கைது! திருடனை அடையாளம் கண்டது எப்படி?
மதுரை நகைக்கடை திருட்டு சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளது பற்றி..
மதுரையில் புதிதாகத் திறக்கப்பட்ட நகைக் கடையில் நடந்த திருட்டுச் சம்பவத்தில் முக்கிய குற்றவாளி நிஷாந்த் தலைமறைவான நிலையில், சுரேஷ், மீனாட்சி என இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நிஷாந்த்தை, சிசிடிவி காட்சியில் பார்த்த நகைக் கடை ஊழியர், சரியாக அடையாளம் காட்டியதன் அடிப்படையில், வழக்கில் துப்பு துலங்கியது.
Advertisement
Advertisement
திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடுவதற்கு முன்னதாக, நிஷாந்த், நகைக் கடைக்கு இரண்டு முறை வந்து சென்றிருக்கிறார். அதன் அடிப்படையில், அவரை நகைக் கடை ஊழியர் அடையாளம் கண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
நிஷாந்த்துடன் தொடர்பில் இருந்த மீனாட்சி என்பவரையும், சுரேஷ் என்பவரையும் காவல்துறை கைது செய்து, அவர்களிடமிருந்து 5 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
நகைக் கடையில் திருட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நிஷாந்த், சம்பவத்துக்குப் பிறகு, மீனாட்சியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மீனாட்சி கைது செய்யப்பட்டுள்ளார்.
நகைக் கடையில் ஒருவர் மட்டுமே ஸ்கூட்டியில் சென்று திருட்டில் ஈடுபட்டது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்த நிலையில், தற்போது இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைமறைவாக உள்ள நிஷாந்த் கைது செய்யப்பட்டால், இந்த சம்பவத்தில் மேலும் பலர் பிடிபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பவத்தின் பின்னணி?
மதுரை பழங்காநத்தம் பைபாஸ் சாலையில் செயல்பட்டு வரும் புதிய நகைக்கடையில் வியாழக்கிழமை அதிகாலை சுமார் 3 மணியளவில் மர்ம நபர் ஒருவர் புகுந்து 15 கிலோவுக்கு மேற்பட்ட தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றார். அதிகாலையில் நடைபெற்ற இந்தச் சம்பவம் மதுரை மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட நபரைப் பிடிப்பதற்காக 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குற்றவாளியின் சிசிடிவி காட்சிகளை வைத்து அவரை அடையாளம் காணும் பணி நடைபெற்ற போதுதான் குற்றவாளி யூடியூபில் பிரபலமாக இருக்கும் ஒரு நபர் என்பது தெரிய வந்தது.
சம்பவத்தில் முக்கியத் திருப்பமாக, கொள்ளையில் ஈடுபட்ட நபர் கடந்த 5ஆம் தேதி அதிகாலை நேரத்திலேயே முகமூடி அணிந்து நகைக்கடைக்கு வந்ததாகவும், அப்போது கொள்ளையடிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து கடையை நோட்டமிட்டுச் சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்கூட்டியில் வந்து திருடன்
திருட்டில் ஈடுபட்ட நபர் ஸ்கூட்டி மூலம் நகைக் கடைக்கு வந்து நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறப்படும் நிலையில், கொள்ளைக்குப் பிறகு ஸ்கூட்டியை வேறு இடத்தில் நிறுத்திவிட்டு ரயில் மூலம் தப்பியிருக்கிறார். இதன் அடிப்படையில், அதிகாலை நேரங்களில் மதுரையில் இருந்து புறப்படும் ரயில்கள் மற்றும் அவை செல்லும் வழித்தடங்கள் குறித்து விசாரித்து, பல பகுதிகளுக்கும் தனிப்படை விரைந்துள்ளது.