FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பொற்கொல்லர் குடும்பத்திலிருந்து ஓர் சமூகப் புரட்சி!

பொற்கொல்லர் குடும்பத்திலிருந்து சமூகப் புரட்சியை ஏற்படுத்தி வரும் பத்மாவதி பற்றி...

23 அக்டோபர் 2026, 10:14 pm
சமூக மறுசீரமைப்பு மற்றும் அமைப்பு மேம்பாட்டு அறக்கட்டளை நிறுவனர் பத்மாவதி - Dinamani
பகிர்:

உயர்கல்வி பயில்வது அரிதாக இருந்த பொற்கொல்லர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த திருச்சி ஓலையூரைச் சேர்ந்த 54 வயதான பத்மாவதி, மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட பாதையைத் தேர்ந்தெடுத்தார். இன்று, தனது தன்னார்வத் தொண்டு நிறுவனம் மூலம் பொற்கொல்லர்கள், பள்ளி மாணவர்கள், திருநங்கைகள் உள்ளிட்ட விளிம்புநிலைச் சமூகத்தினருக்கு கல்வி, அரசு நலத்திட்டங்கள் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளைப் பெற பெரிதும் துணை நிற்கிறார்.

பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற எம். பத்மாவதி, தனது தந்தை பொற்கொல்லராக இருந்ததாலும், தங்கள் சமூகத்தைச் சேர்ந்த பெரும்பாலானோர் கல்வியைத் தொடர்வதற்குப் பதிலாக பாரம்பரியமாக குடும்பத் தொழிலில் ஈடுபட்டு வந்ததால் அவரது இரண்டு மூத்த சகோதரிகளும் மூத்த சகோதரரும் படிப்பைத் தொடரவில்லை. ஆனால், தான்மட்டும் பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை முடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார் பத்மவாதி.

மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யும் நோக்கில் முதலில் ஆட்சியராக வேண்டும் என்று விரும்பினார். இருப்பினும், தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. அதற்கு ஓரளவுக்கு ஆதரவின்மை காரணமாக இருந்ததாக அவர் தெரிவித்தார். பின்னர், திருச்சியில் உள்ள தனியார் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் பணியில் சேர்ந்த அவர், சமூகப் பணிகளில் ஈடுபடத் தொடங்கினார்.

Advertisement

Advertisement

அந்தக் காலகட்டத்தில், பல்வேறு சமூகத்தினரும் வறுமை, குறைந்த கல்வி வாய்ப்புகள் மற்றும் அரசு உதவிகளைப் பெறுவதில் உள்ள சிக்கல்கள் உள்ளிட்ட ஒரே மாதிரியான பிரச்னைகளை எதிர்கொள்வதை அவர் உணர்ந்தார். இதையடுத்து, தனது சமூகத்துக்கு அப்பாலும் தனது சேவையை விரிவுபடுத்த முடிவு செய்தார். 10 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் பணியாற்றி அனுபவம் பெற்ற பின்னர், 2006-07ஆம் ஆண்டில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்ட வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் உதவித் திட்ட மேலாளராகப் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, பாதிப்புக்குள்ளாகும் நிலையில் இருந்த குடும்பங்களை அடையாளம் காணுதல், பொதுமக்களின் குறைகளுக்குத் தீர்வு காணுதல், வங்கிக் கடன்களைப் பெற்று வாழ்வாதாரத்தை மேம்படுத்த சுயஉதவிக் குழுக்களுடன் மக்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகளில் அவர் ஈடுபட்டார்.

மேலும், அதிகமான மக்களைச் சென்றடைய விரும்பிய பத்மாவதி, 2009 ஏப்ரல் 6ஆம் தேதி சமூக மறுசீரமைப்பு மற்றும் அமைப்பு மேம்பாட்டு அறக்கட்டளையை தொடங்கினார். விளிம்புநிலை மக்களுக்கு வாய்ப்புகளையும் அரசு உதவிகளையும் பெற்றுத் தருவதை இந்த அமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது. பாரம்பரியத் தொழிலைத் தொடர்ந்து மேற்கொள்ள முடியாமல் சிரமப்பட்ட பொற்கொல்லர்களுக்கு உதவுவது இந்த அமைப்பின் ஆரம்பகால முயற்சிகளில் ஒன்றாக இருந்தது. 2009ஆம் ஆண்டு, பொற்கொல்லர்களை ஒருங்கிணைத்து, நிதி நெருக்கடியில் இருந்தவர்களை அடையாளம் கண்டு, மாற்றுத் தொழில்களைத் தொடங்குவதற்காக மொத்தம் ரூ. 46 லட்சம் வங்கிக் கடன் பெற அறக்கட்டளை உதவியது.

இதுதொடர்பாக, பத்மாவதி கூறுகையில், “பல பொற்கொல்லர்கள் தனியார் கடன் வழங்குபவர்களிடம் கடன் வாங்கியிருந்ததால், அதைத் திருப்பிச் செலுத்த முடியாமல் சிரமப்பட்டனர். தனியார் கடன்களைச் சார்ந்திருக்காமலும், நிதிச் சுமையை ஏற்படுத்தும் தொழிலிலேயே சிக்கிக்கொள்ளாமலும் அவர்கள் வேறு தொழில்களுக்கு மாற வேண்டும் என்று விரும்பினோம். பல்வேறு காரணங்களால் சில பொற்கொல்லர்கள் தற்கொலை செய்துகொண்டனர். அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, நிலையான வருமானம் ஈட்டுவதற்கான வழிகளைக் கண்டறிய ஊக்குவித்தோம்,” என்றார்.

2014 முதல் 2020ஆம் ஆண்டு வரை திருச்சியில் உள்ள இளம் சிறார் நீதிக் குழுமத்தின் உறுப்பினராகவும் பத்மாவதி பணியாற்றினார். இதன்மூலம், பாதிப்புக்குள்ளாகும் நிலையில் உள்ள குழந்தைகளுடன் பணியாற்றுவதில் கூடுதல் அனுபவத்தைப் பெற்றார். 2014ஆம் ஆண்டு, பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த அடிப்படைக் கல்வியைக்கூடப் பெறுவதில் சிரமப்பட்ட குழந்தைகள் மீது கவனம் செலுத்தத் தொடங்கினார். அறக்கட்டளை மூலம், தெருவோர வியாபாரிகள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தினக்கூலித் தொழிலாளர்களின் குழந்தைகளை அடையாளம் கண்டு, அவர்களுக்காக மாலை நேர வகுப்புகளை ஏற்பாடு செய்தார். மாணவர்களின் வாசிப்பு மற்றும் எழுதும் திறன்களை மேம்படுத்தவும், வீட்டுப்பாடங்களை முடிக்கவும், பள்ளித் திட்டப் பணிகளைச் செய்யவும் 10 ஆசிரியர்களை அறக்கட்டளை நியமித்தது. ஐந்து ஆண்டுகளில், இத்திட்டத்தின் மூலம் சுமார் 1,000 மாணவர்கள் பயனடைந்தனர். ஆண்டுதோறும் சுமார் 200 குழந்தைகள் பயன்பெற்றனர். பின்னர், திருச்சி மாநகரில் பள்ளிக் கல்வித் துறையின் அனுமதியுடன் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களில் சிரமப்பட்ட மாணவர்களுக்கு உதவ ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இத்திட்டத்தின் மூலம் சுமார் 4,200 மாணவர்கள் பயனடைந்தனர். அறக்கட்டளை சார்பில் சுமார் 40 ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். மாணவர்களின் அடிப்படைக் கற்றல் திறன்களை வலுப்படுத்துவதுடன், பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தும் அபாயத்தில் இருந்த குழந்தைகள் தொடர்ந்து கல்வி பயிலவும் உயர்கல்வியைத் தொடரவும் ஊக்குவிப்பதில் வகுப்புகள் கவனம் செலுத்தின.

கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் இத்திட்டங்கள் நிறுத்தப்பட்டன. 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில், அரியலூர் மாவட்டத்துக்கும் தனது கல்விச் செயல்பாடுகளை அறக்கட்டளை விரிவுபடுத்தியது. அங்குள்ள இரண்டு அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு மின்னணுவியல் மற்றும் ரோபோட்டிக்ஸ் உள்ளிட்ட அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் சார்ந்த பயிற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. திருச்சியில் உள்ள இரண்டு மேல்நிலைப் பள்ளிகளிலும், சென்னையில் உள்ள ஐந்து மேல்நிலைப் பள்ளிகளிலும் இந்த பயிற்சி வகுப்புகள் மற்றும் உணர்வுசார் நலன் குறித்த அமர்வுகளை நடத்த அனுமதி பெற்றுள்ளார்.

2022 ஜூன் மாதம் முதல், தமிழகம் முழுவதும் உள்ள திருநங்கைகளின் வாழ்வாதார வாய்ப்புகள், அரசு நலத்திட்டங்களைப் பெறுவதற்கான வழிகள் மற்றும் சமூக அங்கீகாரம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு பத்மாவதி பணியாற்றி வருகிறார். அறக்கட்டளை மூலம், திருச்சியைச் சேர்ந்த 28 பேர் உள்பட சுமார் 60 திருநங்கைகள் அரசு கடன்களைப் பெற்று சிறு தொழில்களைத் தொடங்க உதவி செய்யப்பட்டுள்ளது. மேலும், திருச்சியைச் சேர்ந்த 6 திருநங்கைகளும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 18 திருநங்கைகளும் ஓட்டுநர் உரிமம் பெற உதவியதுடன், அரசு நலத்திட்டங்கள் மூலம் மேலும் 38 பேருக்கு ஆடுகள் மற்றும் மாடுகளைப் பெறவும் அறக்கட்டளை உதவியுள்ளது.

தமிழக அரசின் ஸ்டார்ட்அப்டிஎன் திட்டத்தின் மூலம் இரண்டு திருநங்கைத் தொழில்முனைவோர் தலா ரூ. 5 லட்சம் பெற்றுள்ளனர். மேலும், 228 திருநங்கைகள் அரசிடமிருந்து இலவச வீட்டுமனை பெற அறக்கட்டளை உதவியுள்ளது. இவர்களில் திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 98 பயனாளிகள் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகளைக் கட்டியுள்ளதாக பத்மாவதி தெரிவித்தார். இத்துடன், 589 திருநங்கைகள் அடையாள அட்டைகளைப் பெறவும் அரசு சேவைகளை அணுகவும் உதவி வழங்கப்பட்டுள்ளது. திருநங்கைகள் பல்வேறு வருமான வாய்ப்புகளை ஆராயும் வகையில், ஊர்க்காவல் படைப் பணி, ஆடு வளர்ப்பு, விவசாயம், அழகுக்கலை, காளான் வளர்ப்பு மற்றும் தையல் உள்ளிட்ட தொழில்களில் பயிற்சிகளும் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டுள்ளன.

2026 பிப்ரவரியில், திருநங்கைகள் தங்களது எண்ணங்கள் மற்றும் உணர்வுகளைப் புரிந்துகொண்டு உணர்வுசார் நலனை மேம்படுத்த உதவும் வகையில் ‘மனசு’ என்ற செயலியை இந்த அமைப்பு அறிமுகப்படுத்தியது. பலர் மற்றவர்களுக்கு உதவ விரும்புகின்றனர். ஆனால், அதை எப்படிச் செய்வது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. சிலர் தங்களுக்குத் தெரிந்த வழிகளில் உதவுகின்றனர். மற்றவர்கள் எங்கிருந்து தொடங்குவது என்று தெரியாமல் தயங்குகின்றனர். அவர்கள் எங்களை அணுகி, எங்கள் அமைப்பு மூலம் பல்வேறு விளிம்புநிலைச் சமூகத்தினருக்கு உதவலாம் என்கிறார் பத்மாவதி.

திருச்சியைச் சேர்ந்த திருநங்கையான டாக்டர் என். ஹசனா பாத்திமா கூறுகையில், “இந்த அறக்கட்டளை எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பல்வேறு வழிகளில் உதவி செய்துள்ளது. மனநலப் பயிற்சி அளித்ததுடன், வீடு மற்றும் ஆதார் அட்டைகளைப் பெறவும் உதவியது. பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் கல்வி உதவிகளும் எங்களுக்குக் கிடைத்துள்ளன. அவர்கள் அறிமுகப்படுத்திய செயலி, எங்களுடைய பிரச்னைகளைப் பகிர்ந்துகொண்டு மனதை அமைதிப்படுத்திக்கொள்ள உதவுகிறது,” என்றார்.

summary

A social revolution from a goldsmith family!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments