திருப்பூரின் பசுமைக் காவலர்கள்: கலாமின் கனவை நனவாக்கும் வெற்றி அமைப்பு!
வானத்துக்குள் திருப்பூர் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தும் வெற்றி அமைப்பு பற்றி...
ஆடை தயாரிப்புத் தொழிலுக்கு உலகளவில் புகழ்பெற்ற திருப்பூர் மாவட்டம், தற்போது முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் சுற்றுச்சூழல் கனவை நனவாக்கும் ஒரு பசுமைப் புரட்சி மாவட்டமாகவும் உருவெடுத்து வருகிறது.
வெற்றி என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் அயராத உழைப்பால், கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் சுமார் 25 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு, வெற்றிகரமாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் குறைந்தது 5 மரங்களையாவது நட்டு வளர்க்க வேண்டும் என்ற அப்துல் கலாமின் தாரக மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு, வானத்துக்குள் திருப்பூர் என்ற திட்டம் தொடங்கப்பட்டது.
Advertisement
Advertisement
இத்திட்டத்தின் தொடக்க விழாவில் 1.25 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. திருப்பூர் தொழில்துறையினரின் பேராதரவோடு, வெறும் 100 நாள்களுக்குள் இந்த இலக்கு வெற்றிகரமாக எட்டப்பட்டது.
இதுகுறித்து வெற்றி அமைப்பின் நிறுவனரும், ராய் கிளாசிக் மில்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநருமான டி.ஆர். சிவராம் கூறுகையில், நாங்கள் வெறும் மரக்கன்றுகளை நடுவதுடன் எங்கள் பணியை நிறுத்தவில்லை. நட்ட மரங்கள் அனைத்தையும் தொடர்ந்து பராமரித்து வருகிறோம். நடப்பாண்டில் 3 லட்சம் மரக்கன்றுகளை நட இலக்கு வைத்துள்ளோம், அதில் ஏற்கனவே 75,000 மரக்கன்றுகளை நட்டு முடித்துள்ளோம் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், கடந்த 2015ஆம் ஆண்டு முதல் இன்று வரை நடப்பட்டுள்ள அனைத்து மரங்கள் குறித்த முழுமையான தரவுத்தளத்தை நாங்கள் மிகத் துல்லியமாகப் பராமரித்து வருகிறோம். இதில் எந்தெந்த விவசாயிகளின் நிலங்களில், என்னென்ன வகையான மரங்கள், எவ்வளவு எண்ணிக்கையில் நடப்பட்டுள்ளன என்ற விவரங்கள் மட்டுமின்றி, அந்த இடங்களின் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை போன்ற ஜிபிஎஸ் தரவுகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்தத் தரவுகள் ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகத்திற்கும், வனத்துறைக்கும் முறைப்படி சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன.
நாங்கள் 10,00,000 (பத்து லட்சம்) மரங்களை நட்டு முடித்த பிறகு, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம் எங்களது அனைத்து நடுகை இடங்களுக்கும் நேரடியாகச் சென்று விரிவான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வை மேற்கொண்டது.
அவர்கள் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவியல் ஆய்வு அறிக்கையில், எங்களது திட்டத்தில் மரங்களின் உயிர்வாழும் விகிதம் 80 சதவிகிதத்திற்கும் மேல் உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், இந்த மரங்களின் மூலம் காற்றில் இருந்து உறிஞ்சப்படும் கரியமில வாயுவின் அளவு, இப்பகுதிகளில் பறவைகள் மற்றும் பூச்சியினங்களின் பெருக்கம் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் எந்த அளவுக்கு உயர்ந்துள்ளது என்பது போன்ற பல அறிவியல் பூர்வமான உண்மைகள் அந்த ஆய்வு அறிக்கையில் விரிவாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளன என்றும் சிவராம் விளக்கினார்.
தொடக்கக் காலத்தில் ஒரு மரக்கன்றை நட்டு பராமரிக்க ரூ. 200 வரை செலவான நிலையில், முறையான திட்டமிடல் மற்றும் தொழில்நுட்பங்கள் மூலம் தற்போது இந்தச் செலவு ரூ. 70 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையின் உதவியோடு மரங்களின் வளர்ச்சி குறித்த தரவுகள் கணினி மூலம் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் அவர்களின் நிலங்களுக்குப் பொருத்தமான மண் பரிசோதனை செய்யப்படுவதுடன், வெற்றி அமைப்பின் சொந்த நாற்றுப்பண்ணையிலிருந்து தரமான மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
மேலும், இக்கன்றுகளை விவசாயிகளின் நிலங்களுக்கே கொண்டு சேர்க்க சொந்தப் போக்குவரத்து வசதியையும், அவற்றை நிலங்களில் நட தங்களது சொந்த உழைப்பாளர் படையையும் பயன்படுத்தி, எவ்விதக் கட்டணமுமின்றி முற்றிலும் இலவசமாகவே மரக்கன்றுகளை நட்டுக்கொடுத்து இந்த அமைப்பு அசத்தி வருகிறது. சொட்டு நீர்ப் பாசனத்திற்கான அரசு மானியங்களைப் பெறவும் இந்த அமைப்பு வழிகாட்டுகிறது.
மரங்கள் நடுவது மட்டுமின்றி, நீர்நிலை மேம்பாட்டிலும் இந்த அமைப்பு தீவிரமாகப் பங்காற்றி வருகிறது. கடந்த 2005ஆம் ஆண்டில், நொய்யல் ஆற்றில் இருந்து ஆண்டிபாளையம் ஏரிக்கு நீர் கொண்டு வரும் முக்கியக் கால்வாயை இந்த அமைப்பு தூர்வாரி மீட்டெடுத்தது. தொடர்ந்து, 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஆண்டிபாளையம் ஏரியை, கடந்த 2013-ஆம் ஆண்டில் வெற்றி அமைப்பு முழுமையாகத் தூர்வாரி, சீரமைத்து மறுவாழ்வு அளித்தது. அன்று முதல் இன்று வரை இந்த ஏரியைத் தொடர்ந்து பராமரித்து வருவதோடு, இதில் எப்போதும் 85 சதவிகிதத்திற்கும் அதிகமாகத் தண்ணீர் இருக்குமாறு பாதுகாத்து சாதனை படைத்துள்ளது. இதன் விளைவாக, ஏரியைச் சுற்றியுள்ள 5 கி.மீ சுற்றளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.
மேலும், தற்போது, திருப்பூரின் ஒரே பறவைகள் சரணாலயமும், சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ராம்சர் தளம் என்ற உயரிய அந்தஸ்தைப் பெற்றதுமான 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட நஞ்சராயன் குளத்தை முழுமையாக மீட்டெடுக்கும் பணியில் வெற்றி அமைப்பு தீவிரமாக இறங்கியுள்ளது. ஆரம்பத்திலிருந்தே இக்குளத்தைப் பறவைகள் சரணாலயமாக மாற்றுவதற்கு வெற்றி அமைப்பு வனத்துறையுடன் இணைந்து கடுமையாக உழைத்தது.
தற்போது இக்குளத்தின் சூழலியலை முழுமையாகப் புரிந்து கொண்ட பிறகு, ட்ரோன் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், குளத்தின் 140க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவை ஆகாயத்தாமரை நச்சுக் களைகள் முழுமையாக ஆக்கிரமித்துள்ளது கண்டறியப்பட்டது. இக்களைகளை வேரோடு அகற்ற, சென்னையிலிருந்து அதிநவீன பிரத்யேக இயந்திர வாகனம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், புல் எக்ஸ்கவேட்டர் இயந்திரத்தில் தண்ணீரை மட்டும் தனியாக வடிகட்டி, ஆகாயத் தாமரையை மட்டும் அள்ளி எடுக்கும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சல்லடை பக்கெட் பொருத்தப்பட்டு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன. அள்ளப்படும் களைகளை அப்புறப்படுத்த வெற்றி அமைப்பின் சொந்த டிராக்டர்களும் களம் இறக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து வெற்றி அமைப்பின் முதன்மைச் செயல் அதிகாரி நடராஜ் முத்துசாமி கூறுகையில், இப்பணிகளுக்காக ஆரம்பத்தில் ரூ. 15 லட்சம் செலவாகும் என மதிப்பிடப்பட்டது. ஆனால், கடந்த 60 நாள்களுக்கும் மேலாகத் தொடர்ந்து பணிகள் நடந்து வருவதால், தற்போது திட்டச் செலவு ரூ. 25 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இருப்பினும், எங்களது நன்கொடையாளர்களும், நலம் விரும்பிகளும் இந்த உன்னதமான பறவைகள் சரணாலயத்தை எப்படியாவது முழுமையாக மீட்டெடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். எனவே, இதற்கான செலவு எவ்வளவு அதிகரித்தாலும் அதை முழுமையாக ஏற்றுக் கொள்ள அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.
செலவைப் பற்றி கவலைப்படாமல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் புலம் பெயர் பறவைகளுக்கு இந்த நஞ்சராயன் குளம் பாதுகாப்பான, ஒரு சிறந்த புகலிடமாக மாற வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். நீர்நிலைகளை மீட்டெடுக்கும் போது நாங்கள் அரசு மற்றும் உள்ளூர் மக்களை முழுமையாக இணைத்துக் கொள்கிறோம். மக்களின் பங்களிப்பு இல்லாமல் இத்தகைய மாபெரும் திட்டங்கள் சாத்தியமில்லை, என்று குறிப்பிட்டார்.
இப்பசுமைப் புரட்சிக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், பிரபல கனரக வாகன தயாரிப்பு நிறுவனமான கோமாட்சு வெற்றி அமைப்பிற்கு 2 பிரம்மாண்ட எக்ஸ்கவேட்டர் இயந்திரங்களை வழங்கியுள்ளது. இதில் சுமார் ரூ. 90 லட்சம் மதிப்புள்ள ஒரு பெரிய எக்ஸ்கவேட்டர் இயந்திரம் தற்போது மதுரையில் நிலைநிறுத்தப்பட்டு, அங்குள்ள நீர்நிலைகளை மீட்டெடுக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மற்றொன்று, ரூ.40 லட்சத்திற்கும் அதிக மதிப்புள்ள எக்ஸ்கவேட்டர் இயந்திரமாகும். இது திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள ஏரி, குளம் மற்றும் நீர்நிலைகளைத் தூர்வாரிச் சீரமைக்கும் பணிகளில் முழு வீச்சில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சுற்றுச்சூழல் மட்டுமின்றி, கல்வி மற்றும் சமூக நலப் பணிகளிலும் இந்த அமைப்பு ஆழமான தடம் பதித்துள்ளது. திருப்பூரை அடுத்த இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியை வெற்றி அமைப்பு முறைப்படி தத்தெடுத்து, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அதன் வளர்ச்சிப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் ஆதரவோடு, பள்ளி வளர்ச்சிக்காக 8 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கி, 24 புதிய நவீன வகுப்பறைகள் மற்றும் பாதுகாப்புச் சுற்றுச்சுவர் ஆகியவற்றை அமைத்துக் கொடுத்துள்ளனர்.
கடந்த 2006ஆம் ஆண்டில் வெறும் 400 மாணவர்களுடன் இயங்கி வந்த இப்பள்ளியின் உள்கட்டமைப்பை மாற்றியமைத்ததன் விளைவாக, தற்போது 2026ஆம் ஆண்டில் மாணவர்களின் எண்ணிக்கை 3,600 ஆக உயர்ந்து சாதனைபடைத்துள்ளது. அதுமட்டுமின்றி, பள்ளியின் ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்க, கடந்த 2006ஆம் ஆண்டு முதல் கடந்த மாதம் வரை தொடர்ந்து 20 வருடங்களாக தற்காலிக ஆசிரியர்களின் சம்பளத்திற்காக ஒவ்வொரு மாதமும் நிதியை இந்த அமைப்பு வழங்கி வருகிறது. இத்தகைய முறையான கல்விப் பராமரிப்பின் காரணமாக, இதே நடப்பு ஆண்டில் இப்பள்ளியைச் சேர்ந்த 10 அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் மருத்துவ நுழைவுத் தேர்விலும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இதுதவிர, இடுவாய் பகுதியில் திருப்பூர் மாநகராட்சி, வெற்றி அமைப்பு மற்றும் கோவை மரபியல் மற்றும் மரப் பயிர்ப் பெருக்க நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே போடப்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தின் கீழ் ஒரு மாபெரும் பசுமைத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிக்குச் சொந்தமான 12 ஏக்கர் நிலத்தில், தேசிய மூங்கில் திட்டத்தின் கீழ், வெற்றி அமைப்பு சுமார் ரூ. 3.5 கோடிக்கும் அதிகமான சொந்த நிதியை முதலீடு செய்து, தொழில்நுட்ப வழிகாட்டுதலுடன் இந்தியாவின் முதல் வகையான மூங்கில் பூங்கா மற்றும் நகர்ப்புறக் காட்டை உருவாக்கியுள்ளது.
இங்கு இந்தியா முழுவதிலுமிருந்து கொண்டு வரப்பட்ட 50க்கும் மேற்பட்ட அரிய வகை மூங்கில் இனங்கள் மட்டுமின்றி, நமது மண்ணிற்கே உரிய அழிந்து வரும் நிலையில் உள்ள அரிய வகை மரங்களும் நட்டுப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இப்பசுமை வளாகத்தில் சுற்றுச்சூழல் விளக்க மையம், திறந்தவெளி திரையரங்கம், வண்ணத்துப்பூச்சி பூங்கா மற்றும் பல்வேறு நவீன பொதுநல வசதிகள்அமைக்கப்பட்டுள்ளன. தற்போது தினசரி நூற்றுக்கணக்கான பொதுமக்கள், நடைப்பயிற்சியாளர்கள் மற்றும் குடும்பத்தினர் இங்கு வந்து தங்களது நேரத்தைச் செலவழித்து மகிழ்கின்றனர். ஒட்டுமொத்த திருப்பூர் மாநகரத்திற்கே ஒரு மாபெரும் ஆக்ஸிஜன் தொழிற்சாலையாக இந்த இடுவாய் மூங்கில் பூங்கா திகழ்கிறது.
திருப்பூரின் அடையாளத்தை பசுமை நோக்கி மாற்றியமைத்துள்ள வெற்றி அமைப்பின் இந்த அமைதியான புரட்சி, வரும் தலைமுறைக்குச் சிறந்ததொரு வழிகாட்டி என்றால் மிகையல்ல.
Tiruppur’s Green Guardians: A Successful Organization Realizing Kalam’s Dream!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.