யுபிஐ பரிவர்த்தனைகளை மக்கள் நிறுத்தினால் ரிசர்வ் வங்கிக்கு எவ்வளவு நஷ்டம்?
யுபிஐ பரிவர்த்தனைகளை மக்கள் நிறுத்தினால் ரிசர்வ் வங்கிக்கு எவ்வளவு நஷ்டமாகும் என்பது பற்றி...
யுபிஐ பரிவர்த்தனைக்கு மாறுமாறு தொடர்ந்து வலியுறுத்தி, ஏழை, எளிய மக்களும் தற்போது யுபிஐ பரிவர்த்தனைக்கு மாறிவரும்போது, அதற்கு கட்டணம் நிர்ணயித்திருக்கிறது மத்திய அரசு.
சில்லறை இல்லை என்ற சொல் வழக்கொழிந்து போகும் நிலையில், மீண்டும் மக்கள் பணத்தைக் கையிலெடுக்கும் நிலை ஏற்படலாம் என்றே கூறப்படுகிறது.
யுபிஐ கட்டணம் மத்திய அரசின் கஜானாவுக்கு வராது, இந்த கட்டணத்தை மக்கள் செலுத்தத் தேவையில்லை என்று நாள்தோறும் மக்களுக்கு விதவிதமாக மத்திய அரசு, யுபிஐ- பரிவர்த்தனைக்கு விதிக்கப்படும் கட்டணம் குறித்து விளக்கம் கொடுத்து வருகிறது.
Advertisement
Advertisement
ஆனால் மக்கள் எழுப்பும் கேள்வி ஒன்றுதான், டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறுங்கள், பணமற்ற பொருளாதாரம் என்று மத்திய அரசு இத்தனை நாள்களும் குரலெழுப்பி, விழிப்புணர்வெல்லாம் செய்து இன்று மக்கள் முழுதாக சந்திரமுகியாகி மாறிநிற்கும்போது, நீங்கள் சந்திரமுகியாக மாறியதற்கு கட்டணம் என்று கேட்டால், மக்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்?
சரி... மீண்டும் பணத்துக்கே திரும்பலாம் என்றாலும் அங்கேயும் சிக்கல். ஏற்கனவே ஏடிஎம் மூலம் பணம் எடுக்கவும் கட்டணம் செலுத்திக் கொண்டுதானே இருக்கிறோம். பணத்தை எடுக்கவும் கட்டணம், பணத்தை செலவிடவும் கட்டணம் என்றால், பிறகு வரி, ஜிஎஸ்டி எல்லாம் செலுத்தி, ஏதோ, ஏழை மக்கள்தான், மத்திய அரசுக்காக உழைக்கும் மத்திய அரசு ஊழியர்கள்போல ஆகிவிட்டது நம் நிலைமை என்கிறார்கள் சாமானியர்கள்.
பொருளாதார நிபுணர்களோ, யுபிஐ கட்டணம் என்பது ஏமாற்று வேலை, டிஜிட்டல் பரிவர்த்தனை மூலமாக மத்திய ரிசர்வ் வங்கிக்கு பல கோடி லாபம். அப்படியிருக்க, லாபத்தில் ஒரு லாபம் பார்க்க நினைப்பது அநியாயம் என்கிறார்கள்.
அதாவது இதுநாள்வரை புழக்கத்தில் இருக்கும் பணத்தின் தேவைக்கு ஏற்ப, மத்திய ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகளை அச்சடித்து, பாதுகாத்து, வாகனங்கள் மூலம் பாதுகாப்பாக வங்கிகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தது. யுபிஐ பரிவர்த்தனையால் ஆண்டுதோறும் அச்சடிக்கும் ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.
மீண்டும் மக்கள் பணத்தை கையிலெடுக்க நினைத்தால் குறைந்தது ரூ.50 லட்சம் கோடி பணத் தாள்களை அச்சடித்து நாடு முழுவதும் கொண்டு செல்லும் செலவை ரிசர்வ் வங்கி செய்ய வேண்டியது வரும்.
அது மட்டுமா? வங்கிகள் மீண்டும் ஏடிஎம்களை திறந்து, அவற்றை நிர்வகித்து பணத்தை நிரப்பி, எடுத்துச் சென்று கொண்டு வந்து என செலவு செய்ய வேண்டியது வரும். வெறும் பணத்தாளை அச்சடிக்க மட்டும் ரூ.50 ஆயிரம் கோடி செலவாகும் என்கிறது தோராய கணக்குகள். இவ்வளவையும் மிச்சம் பிடித்தது போதவில்லை என்று இவ்வளவு செலவையும் மிச்சம் பிடித்துக் கொடுத்த மக்களிடம் கட்டணம் வேறு கேட்கிறார்கள்.
இந்த ரூபாய் தாள்களை அச்சடிக்க காகிதம் வாங்குவது முதல் கிழிந்த நோட்டுகளை திரும்பப் பெறுவது வரை அனைத்தும் செலவோ செலவுதான். ஆனால், செலவில்லாமல் நிம்மதியாக இருக்கும்போதுதான், மத்திய அரசின் சிந்தனையில் தோன்றியது, ஏன் நாம் நிம்மதியாக இருக்க வேண்டும்? மகிழ்ச்சியாக இருக்கலாமே என்று யுபிஐக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம்.
இன்னும் ஒரு சில நாள்களில் யுபிஐ கட்டணம் நடைமுறைக்கு வந்துவிடும். ஆனால், மக்கள் என்னவோ ஆரம்பத்தில் கதறி அழுதாலும் போக போக மறந்துவிடுவார்கள். ஜிஎஸ்டி வசூலின்போதும் இப்படித்தான் கொந்தளிப்பு இருந்தது. 2 இட்லி வாங்கினால் ஒரு இட்லி காசுக்கு ஜிஎஸ்டி செலுத்துவது போல இருக்கிறதே என்று கூப்பாடு போட்டோம். இப்போது அதை மறந்துவிடவில்லையா?
அதுபோல யுபிஐ கட்டணத்துக்கும் வலித்தாலும் வலிக்காதது போல இருக்கப் பழக்கப்படுத்தப்பட்ட மக்கள் நிச்சயம் வலிக்காதது போல கடந்துவிடுவார்கள் என்றே மத்திய அரசும் நம்பிக்கையோடு நம்புகிறது.
இப்போது புழக்கத்தில் இருக்கும் பணத்தில் பாதி கருப்புப் பணமாக பெட்டிகளில் அடைக்கலம் புகுந்துவிட்டது. புழக்கத்தில் இருக்கும் சொற்ப பணத்தை வைத்துக் கொண்டு ஒரு நாள்கூட நாடு முழுவதும் வெறும் ரொக்கப் பரிமாற்றத்தை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. ஒரு வேளை காலையில் எழுந்ததும் அனைவரும் வங்கிக்குச் சென்று சம்பளப் பணம் மொத்தத்தையும் எடுத்துக் கொண்டு வீட்டில் வைத்துவிட்டு செலவு செய்யத் தொடங்கினால் என்னவாகும்? என்பதை ஆர்பிஐ சற்று நினைத்துப் பார்த்து, எத்தனை அடித்தாலும் மக்கள் தாங்குவார்கள்தான், அதற்காக அடித்துக் கொண்டே இருக்கக் கூடாது என்று, யுபிஐ கட்டணத்தை திரும்பப் பெற்றுவிட்டால் இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்க்கலாம்.
மாறாக, வங்கிகள் பணத்தை அதிக அளவில் இருப்பு வைக்கவும் ஏடிஎம்களை நிரப்பவும் மத்திய அரசு அறிவுறுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. அதுதான் உங்கள் விருப்பம் என்றால், மக்களும் அதற்குத் தயாராவதுதான் ஒரே வழி.
How much loss would the Reserve Bank incur if people stopped UPI transactions?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.