FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

நிவாரணம் கொடுப்பதுதான் தீர்வா? - விஜய் கேள்வி

ஃபென்ஜால் புயல் பாதிப்பு தொடர்பாக விஜய்.

Updated On : 3 டிசம்பர் 2024, 7:26 pm IST
தவெக தலைவர் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

தற்காலிக நிவாரணம் கொடுத்துவிட்டுப் போவதுதான் தீர்வா என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

புயல், எப்போதும் பேரிடரையும் பெரும் பாதிப்பையும் மக்களுக்கு உண்டாக்கும் ஓர் இயற்கைச் சீற்றமே. அதில் இருவேறு கருத்துக்கு இடமே இல்லை. இருப்பினும் எவ்வளவு பெரிய புயல், இயற்கைப் பேரிடர் வந்தாலும் நம்மைக் காக்க, நாம் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த அரசு இருக்கிறது, ஆட்சியாளர்கள் உள்ளனர் என்ற நம்பிக்கையுடன் தான் மக்கள் இருப்பர்.

Advertisement

Advertisement

ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசோ, ஆட்சி பீடமோ, ஆபத்தான ஒவ்வொரு சூழலிலும் மக்களைக் கைவிடும் என்பதை அனுபவித்து உணர்கிறபோது, அம்மக்களின் தாங்கொணாத் துயரை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. நமக்குப் பாதுகாப்பாக இருப்பார்கள் எனப் பரிபூரணமாக நம்பி வாக்களித்து, அதிகாரத்தில் அமர்த்தி அழகு பார்த்த மக்களைப் பாதுகாக்க, முறையான திட்டங்களைத் தீட்டவில்லை. குறைந்தபட்ச பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கூடச் செய்யாமல் அவர்களைக் கையறு நிலையில் பரிதவிக்க விடும் சுயநல ஆட்சியாளர்களை என்னவென்று சொல்ல?

மக்கள் துன்புறும் வேளையில் ஆட்சியாளர்களைக் குறிவைத்துக் குறைகூறி மட்டுமே அரசியல் செய்யும் கலாசாரத்தை நாம் பின்பற்றப் போவதில்லை என்கிற தீர்க்கமான முடிவை எடுத்திருக்கிறோம். ஆயினும் மக்கள் பக்கம் எப்போதும் நின்று அவர்களுக்காகக் குரல் கொடுத்து நிற்பதே நமது மக்களரசியல் நிலைப்பாடு என்பதால் இதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

ஒவ்வொரு வருடமும் வரும் புயல் மற்றும் பேரிடரின் போது வருடாந்திர சம்பிரதாய நிகழ்வாக ஓரிரு நாள்கள் பாதிக்கப்பட்ட மக்கள் சிலரை ஆட்சியாளர்கள் சந்தித்துப் புகைப்படம் எடுத்துவிட்டு, தற்காலிக நிவாரணம் கொடுத்துவிட்டுப் போவதுதான் தீர்வா? அந்த நேரத்துக்கான தீர்வைத் தந்துவிட்டதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதும் மக்கள் துன்பத்தை ஒருநாள் சம்பிரதாயம் போல நினைத்து அன்றோடு மறந்துவிடுவதும் எந்த வகையில் நியாயம்?

மழை வெள்ளம் போன்ற பேரிடர்க் காலங்களில் மக்களுக்கான அடிப்படைப் பாதுகாப்புத் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய தார்மீகமான தலையாய கடமை, முதலில் ஆட்சியாளர்களுக்கே இருக்கிறது. ஆனால் ஆட்சியாளர்கள் இதை முழுவதுமாகவே மறந்துவிடுகின்றனர்.

மக்களைப் பாதுகாப்பாக இருக்க வைப்பதற்கான நிரந்தரத் தீர்வை நோக்கி நகர்வது குறித்து அவர்கள் எள்ளளவும் சிந்திப்பதில்லை. காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர்ப் பாதுகாப்புச் சார்ந்து எந்த ஒரு முன்னெடுப்பையும் எடுப்பதில்லை. வெறும் தற்காலிகக் கண்துடைப்பு அறிவிப்புகளைச் செய்வதில் மட்டுமே முனைப்புடன் இருக்கின்றனர். இவ்வாறு செய்வதையே ஆட்சியாளர்கள் வாடிக்கையாகக் கொண்டிருப்பது உண்மையிலேயே வேதனையைத் தருகிறது.

எவ்வகையிலாவது மக்களை ஏமாற்றி ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்றும் எல்லாவற்றையும் மக்கள் மறந்துவிடுவர் என்றும் மமதையில் இருந்த எவரும் மக்கள் மன்றத்தில் நீடித்து நிலைத்ததே இல்லை என்பதுதான் வரலாறு.

எது நடந்தாலும் எப்போதும் போல எதிர்க் கட்சிகள் மீது ஏளனமாக விமர்சனம் வைத்து, காவி வர்ணம் பூசி, கபட நாடகமாடித் தப்பித்துக்கொள்ளலாம் என்று தற்போதைய ஆட்சியாளர்கள் எம் மக்களை நிரந்தர நிர்க்கதிக்கு ஆளாக்கி வருகின்றனர். இந்த அடாத முயற்சிகள் அனைத்தும் மக்கள் சக்திக்கு முன்பு தோற்றுப் போகும் என்பதை இனிவரும் காலங்கள் கண்டிப்பாக உணர்த்தவே செய்யும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments