முகப்பு
தற்போதைய செய்திகள்

பலூசிஸ்தான்: இறந்தவர்களின் உறவினர்கள் மீது காவலர்கள் தடியடி! பெண்கள் படுகாயம்!

பாகிஸ்தான் மருத்துவமனையில் காவலர்கள் தடியடி நடத்தியதைப் பற்றி...

Updated On : 20 மார்ச், 2025 at 3:26 PM
கோப்புப் படம்
பகிர்:

பாகிஸ்தான் நாட்டில் இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண வந்த உறவினர்கள் மீது காவல் துறையினர் நடத்திய தடியடி தாக்குதலில் ஏராளமான பெண்கள் படுகாயமடைந்துள்ளனர்.

பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவேட்டாவிலுள்ள பொது மருத்துவமனைக்கு பாதுகாப்புப் படையினர் கடந்த வாரம் அடையாளம் தெரியாத 23 சடலங்களை கொண்டு வந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டு மாயமானவர்களின் குடும்பத்தினர் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் இறந்தவர்களில் தங்களது உறவினர்கள் உள்ளனரா என்பதை அறிய அங்கு கூடினார்கள்.

Advertisement

இந்நிலையில், நேற்று (மார்ச் 19) பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என அங்கு கூடியிருந்த அனைவரும் அந்த மருத்துவமனையினுள் சென்று அந்த சடலங்களைக் காண முயற்சித்துள்ளனர்.

அப்போது, எந்தவொரு முன்னெச்சரிக்கையும் இன்றி காவலர்கள் அங்கு கூடியிருந்த மக்களின் மீது தடியடி நடத்தியதாகக் கூறப்படுகின்றது. இந்த தாக்குதலில் ஏராளமான பெண்கள் படுகாயமடைந்ததாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: ஈரான்: 149 ஆப்கன் சிறைக் கைதிகள் தலிபான் அரசிடம் ஒப்படைப்பு!

இதனைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 18 அன்று நள்ளிரவே 13 சடலங்களை பாகிஸ்தான் படைகள் குவேட்டாவின் காசி கல்லறையில் ரகசியமாக புதைத்து விட்டு சென்றதாக அங்குள்ள மக்கள் சிலர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த செய்தி அப்பகுதியில் பரவியதைத் தொடர்ந்து, புதைக்கப்பட்டவர்களில் தங்களது குடும்பத்தினர் உள்ளனரா என்று சந்தேகித்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்கள் போராட்டம் தொடர்ந்து வலுவடைந்த காரணத்தினால் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சடலங்களைக் காண அதிகாரிகள் அனுமதி வழங்கினர். அதில், 5 பேரது உடல்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

முன்னதாக, பலூசிஸ்தானில் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக நடைபெறும் கிளர்ச்சிகளினால் அங்குள்ள மக்கள் அந்நாட்டு படையினரால் தொடர்ந்து வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். பெரும்பாலான மக்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டு மாயமாக்கப்படுவதினால் அங்குள்ள பலூச் இன மக்கள் நாள்தோறும் தங்களது வாழ்கைக்கு அஞ்சியே வாழ்வதாகக் கூறப்படுகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.