சிதம்பரத்தில் ஸ்ரீகுருநமச்சிவாயர் குருபூஜை விழா!
சிதம்பரம் ஸ்ரீஆத்மநாதர் கோயிலில் ஸ்ரீகுருநமச்சிவாயர் குருபூஜையும், ஸ்ரீமாணிக்கவாசகர் மாத குருபூஜை விழா குறித்து...
சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீஆத்மநாதர் கோயிலில் ஸ்ரீகுருநமச்சிவாயர் குருபூஜையும், ஸ்ரீமாணிக்கவாசகர் மாத குருபூஜை விழாவும் சனிக்கிழமை நடைபெற்றது. திரளான திரளான சிவனடியார்கள் பங்கேற்று திருவாசகம் முற்றோதல் செய்து வழிபட்டனர்.
வேங்கான் தெருவில் திருபாற்கடல் மடத்தில் அமைந்துள்ள ஆத்மநாதர் கோயிலை மாணிக்கவாசகர் கட்டி அங்கேயே தங்கியிருந்து வழிபட்டு வந்துள்ளார். அவருக்கு முன்பு பர்ணசாலை அமைத்து பதஞ்சலி, வியாக்கிரபாதர், குருநமச்சிவாயர் போன்ற முனிவர்கள் தங்கியிருந்து தவம் செய்த இடமாகும். குருநமச்சிவாயரின் பசியை போக்க அம்பிகை உணவு தந்து அருளிய இடம்.
குருநமச்சிவாயர் தவமிருந்து சமாதியான இடத்தில் அவருக்கு தனிக் கோயில் கட்டப்பட்டுள்ளது. அதுபோன்று இங்குள்ள ஆத்மநாதர் கோயிலில் தங்கியிருந்த சமயக் குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசகர் திருவாசகத்தை சொல்ல அந்தணர் வடிவில் வந்த நடராஜப் பெருமான் எழுதி, இறுதியில் திருச்சிற்றம்பலமுடையான் என கையொப்பிட்டதாக வரலாறு கூறுகிறது.
Advertisement
Advertisement
அந்தச் சிறப்பு வாய்ந்த குருநமச்சிவாயர் கோயிலில் சனிக்கிழமை காலை சிவனடியார்கள் பங்கேற்ற சிவபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக, சிவபூஜை வழிபாடு, சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன.
விழாவையொட்டி, கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீகுருநமச்சிவாயர், ஸ்ரீமாணிக்கவாசகர் மற்றும் ஸ்ரீயோகாம்பாள் சமேத ஸ்ரீஆத்மநாதர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, மகா தீபாராதனைகள் நடைபெற்றன.
குருபூஜை விழாவில் இந்து ஆலய பாதுகாப்புக் குழுத் தலைவர் மு.செங்குட்டுவன், ஈஸ்வரலிங்கம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று தரிச்சித்தனர். பின்னர் மகேஸ்வர பூஜையும், அன்னதானமும் நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை தர்மகர்த்தா வை.பசவராஜ் மற்றும் சிவத் தொண்டர்கள் செய்திருந்தனர்.