FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நூலகச் சட்டமும் மக்கள் பங்களிப்பும் மோசடிகளும்! நீதியும் நியாயமும் - 13

புத்தகங்கள் என்ற பெயரில் போலியான குப்பைகளை வழங்கியவர்களும், அதற்குத் துணைபோனவர்களும் சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்பது பற்றி...

13 நவம்பர் 2026, 6:36 pm
நூல் அகம்... - AI - Dinamani
பகிர்:

2024 ஜூலை 19. மருத்துவர் செம்மல் முஸ்தபா அலைபேசியில் அழைத்திருந்தார். மணவை முஸ்தபாவின் இளைய மகன். “எனது தந்தையார் எழுதிய கலைச்சொல் அகராதி புத்தகங்கள் அனைத்தும் வேறு ஒரு பதிப்பாளரின் பெயரில் வெளியிடப்பட்டுள்ளன. அட்டைப் படம், அணிந்துரை மற்றும் முன்னுரையில் உள்ள பெயர்கள் மாற்றப்பட்டு நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன. அவை பொது நூலகங்களுக்காகக் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன” என்ற தகவலை எனது கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.

‘படித்தவர்கள் இப்படியும் செய்வார்களா?’ என்று அதிர்ந்து போனேன். “தமிழர்கள் எவருக்கேனும் கோயில் கட்ட வேண்டும் என்றால் அதை மணவை முஸ்தபாவிற்கு கட்டுங்கள்” என்று வலம்புரி ஜான் ஓர் இலக்கிய உரையில் குறிப்பிட்டிருந்தார். அது மணவை முஸ்தபா என்ற தனிமனிதரின் மீதான மதிப்பிற்கும் மரியாதைக்குமான பேச்சு அல்ல. மணவை முஸ்பா தமிழுக்கு ஆற்றிய பணியின் காரணமான மரியாதையினால் கூறப்பட்ட வார்த்தை. வாழ்த்து; பாராட்டு.

Advertisement

Advertisement

ஆங்கிலத்தில் வெளிவரும் பன்னாட்டு அறிவியல் இதழ்களில் உள்ள அறிவியல் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை உருவாக்குவதையே தன் வாழ்நாள் தவமாகச் செய்துவந்தவர்; எத்தகைய அறிவியல் சொற்களுக்கும் நிகரான தமிழ்ச் சொற்கள் தமிழ் இலக்கியங்களிலேயே இருக்கின்றது என்பதை நிரூபித்தவர்; யுனெஸ்கோ கூரியர் தமிழ் இதழின் ஆசிரியராகப் பணி செய்தவர்; தமிழ் ஓர் அறிவியல் மொழி என்பதைப் பல்வேறு சான்றுகளுடன் நிறுவியவர்; தமிழைச் செம்மொழியாக அறிவிக்கக் கோரும் தமிழக அரசின் விண்ணப்பத்திற்கான வாதுரையைத் தயார் செய்தவர் எனத் தமிழ் மொழி தொடர்பான பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர் மணவை முஸ்தபா. நாம் அவருக்குப் பெருமை சேர்க்காமல் போகலாம். ஆனால் அவரைச் சிறுமைப்படுத்தலாமா? சிறுமைப்படுத்தியிருக்கிறார்கள்.

அவருடைய புத்தகங்களின் அட்டைப்படத்தையும், அணிந்துரை மற்றும் முன்னுரையில் உள்ள பெயர்களையும் நீக்கிவிட்டு, தங்களது பெயரில் பதிப்பித்துப் புத்தகமாக வெளியிட்டுவிட்டார்கள். அதற்கு நூலக கொள்முதல் ஆணையும் பெற்று ஆதாயமும் அடைந்திருக்கின்றார்கள்.

அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கணினி போன்ற துறை சார்ந்த எட்டு கலைச்சொல் அகராதிகளை வெளியிட்டுள்ளார் மணவை முஸ்தபா. பல ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். அவரது நூல்கள் அனைத்தும் தமிழக அரசால் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளன. அரசுடைமை ஆக்கப்பட்டுள்ள நூல்களை விரும்பும் பதிப்பகங்கள் வெளியிட்டுக் கொள்ளலாம். தடை ஏதும் இல்லை. நூல் ஆசிரியரின் அனுமதிக்காகவோ அல்லது அவருடைய வாரிசுகளின் அனுமதிக்காகவோ காத்திருக்கத் தேவையில்லை. கருத்துகள் பரவலாகச் சென்றடைய வேண்டும். அதற்குப் பதிப்புரிமை தடையாக இருக்கக் கூடாது என்பதுதான் நூல்கள் அரசுடைமை ஆக்கப்படுவதன் நோக்கம்.

மணவை முஸ்தபாவின் நூல்களை அவருடைய பெயரில் வெளியிடாமல் ஏன் திருட்டுத்தனமாக தங்களது பெயரில் வெளியிட்டுக்கொள்கின்றார்கள்? குறுக்கு வழியில் லாபம் அடைய வேண்டும் என்பதைத் தவிர வேறு காரணம் இருக்க முடியாது.

அரசுடைமை ஆக்கப்பட்ட நூல்கள் ஏற்கெனவே நூலகங்களில் இருக்கும். அல்லது வேறு ஒரு பதிப்பகம் வழியாக அந்த நூல்கள் ஏற்கெனவே நூலகங்களுக்காகக் கொள்முதல் செய்யப்பட்டிருக்கும். இந்தச் சூழ்நிலையில்தான், அரசுடைமை ஆக்கப்பட்ட புத்தகங்களின் அட்டைப் படத்தினையும் அணிந்துரை மற்றும் முன்னுரையையும் மாற்றி, புதிதாக ஓர் ஆசிரியரின் பெயரைச் சூட்டி நூலகங்களுக்கே விற்றுவிடுகின்றார்கள். நூலக ஆணைக்குழுவின் கண்களை மறைத்துச் செய்கின்ற வேலை அல்ல. அனைவருக்கும் தெரிந்தே நடக்கும் மோசடி. மணவை முஸ்தபா புத்தகங்களுக்கும் இதுதான் நடந்திருக்கின்றது. இத்தகைய அநீதி மணவை முஸ்தபாவிற்கு மட்டும்தான் நடந்ததா? என்றால் இல்லை என்பதுதான் களநிலவரம்.

இந்த மோசடி தொடர்பாக மருத்துவர் செம்மல் முஸ்தபா அதிகாரிகளைச் சந்தித்து முறையிட்டார். அலைக்கழிக்கப்பட்டார்; ஏளனமாகப் பார்க்கப்பட்டார். இறுதியில் புகார் கொடுக்கும் முயற்சியை செம்மல் முஸ்தபா கைவிட்டுவிட்டார்.

‘மணவை முஸ்தபாவிற்கு கோவில் கட்ட வேண்டும்’ என்று வலம்புரி ஜான் முன்மொழிந்ததை வழிமொழியத் தேவையில்லை. அவரது உழைப்பிற்கும் தியாகத்திற்கும் துரோகம் செய்யாமல் இருத்தல் வேண்டும். அதுதான் அவரது உழைப்பிற்கான மரியாதை. அரசுடைமை ஆக்கப்பட்ட நூலாசிரியர்களின் பெயர்களை மறைப்பது என்பது தனிப்பட்டவர்களுக்கான துரோகம் அல்ல. தாய் மொழிக்குச் செய்யும் துரோகம். இதனை மோசடியாளர்கள் உணர வேண்டும். ஒரே பொருண்மைகள் கொண்ட நூல்கள் வெவ்வேறு பெயர்களில் நூலகங்களில் காணக் கிடைக்கின்றன. அந்த நூல்களைப் படிக்கும் இளம் தலைமுறையினர் அதன் உண்மையான ஆசிரியர் யார் என்றே அறியாமல் போகலாம். உண்மை ஒருநாள் வெளிப்படும். அப்போது மோசடியாளர்களின் ஒட்டுமொத்த வாழ்வின் மீதும் வரலாறு வசைமாரி பொழியும். அவர்களது வெளியீடுகள் அனைத்தும் குப்பைகளாகக் கருதப்படும். அத்தகையச் சூழல் வாசகர்கள் மத்தியில் தமிழ் மொழியின் மீது வெறுப்பைக் கட்டமைத்துவிடும்.

இந்த அபாயத்தின் பின்னணியில்தான் அறிவுத் திருடர்களை நாம் அணுக வேண்டும். அவர்களின் செயல்கள் மன்னிக்க முடியாத திருட்டை அடிப்படையாகக் கொண்டது. எந்தப் படைப்பாளியும் பதிப்புரிமைக்காக நீதிமன்றம் சென்று போராடப் போவதில்லை. அத்தகைய வசதியும் வாய்ப்பும் தமிழ்ப் படைப்பாளர்களுக்கு எட்டாக்கனிதான்.

அறிவுத் தளத்தில் தமிழகத்திற்கென்று ஒரு பாரம்பரியம் இருக்கின்றது. தமிழ்நாட்டு நூலகங்களின் எண்ணிக்கையும் அதன் பிரமாண்டங்களும் சர்வதேசத் தரத்திற்கு இணையானவை. அதில் ஊடுருவியிருக்கும் கரையான்கள் இப்போது இறகு முளைத்து ஈசலாக வெளிவரத் தொடங்கி இருக்கின்றன.

நாளிதழ்களில் வரும் செய்திகளையெல்லாம் கட்டுரைகளாக்கி நூலக அலமாரிகளை ஆக்கிரமித்த மோசடியாளர்கள், இப்போது செய்யறிவைப் பயன்படுத்தித் தங்களது படைப்புத் திருட்டு இலக்கை இன்னும் எளிமையாக்கிக் கொண்டுள்ளார்கள். அவர்கள் ஒருபோதும் திருந்தப்போவதில்லை. காலம் அவர்களை அடையாளப்படுத்தி இருக்கின்றது. அறிவுத் திருடர்கள் இன்றைக்கு முச்சந்தியில் நிறுத்தப்பட்டிருக்கின்றார்கள். பொது நூலகத் துறை இப்போது பேசுபொருளாகி இருக்கின்றது.

கோவை காந்திபுரம், நஞ்சப்பா சாலையில் தமிழ்நாட்டின் புதிய அடையாளமாக ரூ. 300 கோடியில் ‘பெரியார் அறிவுலகம்’ திறக்கப்பட்டுள்ளது. ரூ. 245 கோடி மதிப்பிலான 7 தளங்கள் கொண்ட கட்டடம். 5 கோடியில் நூலகங்களுக்கான வசதிகள். 50 கோடியில் சுமார் 1.25 லட்சம் நூல்கள் மற்றும் மின்னணு நூல்கள். 2024 நவம்பரில் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டு, 16.10.2026இல் நூலகம் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.

இந்த பிரமாண்டத்தின் வழியாகத்தான் நூலகத் துறையின் ஊழல் என்னும் பேசாப்பொருள் பேசுபொருளாகி இருக்கின்றது. ஊழல் கரையான்கள் சாரை சாரையாக வெளிப்படுகின்றன. அவற்றை முழுமையாக அழிக்கின்றோமா, தப்ப விடுகின்றோமா என்பதைப் பொருத்துதான் நமது அறிவுலகக் கட்டுமானத்திற்கான மதிப்பு நிலை பெறும்.

ஊழல் கரையான்களை அழிப்பதற்கான பொறுப்பும் கடமையும் நீதிமன்றங்களுக்கு மட்டுமல்ல, நம் எல்லோருக்கும் உண்டு. ஏனெனில் நூலகத் துறையின் ஒவ்வொரு பக்கமும் நமது வரிப் பணத்தினால் உருவாக்கப்பட்டவை. நூலகத் துறைக்கென தனியாக வரி செலுத்தும் நமது பண்பாட்டிற்கு வயது 75!

தமிழ்நாடு பொது நூலகச் சட்டம், 1948 (மதராஸ் பொது நூலகச் சட்டம், 1948) (Tamil Nadu Public Library Act, 1948 (Originally enacted as the Madras Public Libraries Act, 1948)) என்ற சட்டத்தை நிறைவேற்றி இந்தியாவிற்கு முன்மாதிரியாகத் திகழும் மாநிலம் தமிழ்நாடு. அது சுதந்திர இந்தியாவில் நிறைவேற்றப்பட்ட முதல் பொது நூலகச் சட்டம் ஆகும். இந்தச் சட்டத்திற்கான மாதிரி வரைவைத் தயாரித்தவர் மதராஸ் நூலகச் சங்கத்தைச் சேர்ந்த கணிதவியலாளர் டாக்டர் எஸ்.ஆர். ரங்கநாதன்.

அன்றைய கல்வி அமைச்சர் தி.சு. அவிநாசிலிங்கம் பொது நூலக வரைவுச் சட்டத்தை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்து சட்டமாக்குவதற்குத் துணைபுரிந்துள்ளார். 29.01.1949 இல் ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று, 01.04.1950 இல், இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதற்குக் காரணமான டாக்டர் எஸ்.ஆர். ரங்கநாதன் அவர்கள் இந்திய நூலகவியலின் தந்தை என்று அழைக்கப்படுகின்றார். இவரது பிறந்த நாளான ஆகஸ்ட் 12 தேசிய நூலக தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

மாநிலம் முழுமைக்கும் பொது நூலகங்களை நிறுவி, கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களுக்கு விரிவான நூலகச் சேவை வழங்குவதே தமிழ்நாடு பொது நூலகச் சட்டத்தின் நோக்கம். 19 பிரிவுகளைக் கொண்ட இந்தச் சட்டமானது, மாநில நூலகக் குழு (State Library Committee), பொது நூலக இயக்குநர் (Director of Public Libraries), உள்ளுர் நூலக ஆணைக் குழுக்கள் (Local Library Authorities) கொண்ட மூன்று அடுக்கு நிர்வாக அமைப்பைக்கொண்டுள்ளது.

சொத்துவரி அல்லது வீட்டு வரியுடன் கூடுதல் கட்டணமாக நூலக வரி (Library Cess) வசூலிக்க இந்தச் சட்டத்தின் பிரிவு 12 வழிவகை செய்கின்றது. தொடக்கத்தில் ஒரு ரூபாய்க்கு 3 காசுகளாக இருந்த நூலகக் கட்டணம், 1992 முதல் ஒரு ரூபாய்க்கு 10 காசுகளாக (10%) வசூலிக்கப்பட்டு வருகின்றது.

பொது நூலகச் சட்டத்தின் பிரிவு 19-இன்படி ஒவ்வொரு பதிப்பகமும் தாங்கள் அச்சிடும் புத்தகத்தின் 5 பிரதிகளை மாநில அரசுக்குக் கொடுக்க வேண்டும். அதில் 4 பிரதிகள் மாநில மைய நூலகத்தில் (கன்னிமாரா நூலகம்) பாதுகாக்கப்படும். பின்னாளில் இந்தச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தின் வாயிலாக உள்ளுர் நூலக ஆணைக்குழு ஊழியர்கள் முழு நேர ஊழியர்களாக மாற்றப்பட்டனர். பொது நூலகச் சட்டமானது இந்தியா முழுமைக்கும் 19 மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. இந்தியாவில் பொது நூலகத் துறையின் சேவையை மேம்படுத்துவதற்காக, 1972ஆம் ஆண்டு, ‘ராஜாராம் மோகன்ராய் நூலக அறக்கட்டளை’ (RajaRammohunRoy Library Foundation – RRRLF) என்ற தன்னாட்சி அமைப்பை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த அமைப்புதான் நூல்களுக்கான சர்வதேசத் தர குறியீட்டு எண் (ISBN – International Standard Book Number) வழங்கி வருகின்றது. இந்த அமைப்பில்தான் பதிப்பகங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

நாட்டிற்கே முன்மாதிரியாகத் திகழ்ந்த தமிழக பொது நூலகத் துறை ஒருசிலரின் மோசடிச் செயல்களினால் இன்றைக்குத் தலைகுனிந்து நிற்கின்றது. கோவை ‘பெரியார் அறிவுலக’த்திற்கான நூல் கொள்முதல் நடைமுறைகளில் ஊழல்கள் நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பொதுவெளிக்கும் வந்துவிட்டது.

‘பாரதிய நியாய சன்ஹிதா – BNS’, தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் (Prevention of Corruption Act) கீழ் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கல்வியிலும் மருத்துவத்திலும் செய்துகொள்ளும் எந்தவொரு சமரசமும் மனித குலத்திற்கு எதிரான ஒன்றானதாகும்.

பொது நூலகத் துறையில் நடைபெறும் ஊழல்கள் புதிதல்ல. அது ஒரு தொடர் சம்பவம். அவ்வப்போது சிலர் எதிர்ப்புக் குரல் எழுப்பியுள்ளனர். அவை கவனம் பெறாமலேயே போய்விட்டன. எல்லாவற்றிற்கும் ஒரு பிரபலம் தேவைப்படுகின்றது. அரசியல் தேவைப்படுகின்றது. இதுபோன்ற முறைகேடுகள் தொடர்பான புகார்கள் கடந்த காலத்தில் நீதிமன்றத்திற்கு வந்திருக்கின்றன. 19.06.2024 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர். மகாதேவன், ஜி.ஆர். சுவாமிநாதன் அடங்கிய அமர்வு வெளிப்படையான நூல்கள் கொள்முதல் தொடர்பாக பிறப்பித்த உத்தரவு முழுமையாகப் பின்பற்றப்படவில்லை.

‘பெரியார் அறிவுலகம்’ போன்ற பிரமாண்டமான அறிவுத்தளங்கள் கட்டமைக்கப்படும்போது போலிப் புத்தகங்களால் ஏற்படும் பின்னடைவுகள், இழப்புகள் ஈடுசெய்ய முடியாதவை. அவை பல தலைமுறைகளைப் பாதிக்கும். இளைஞர்கள் மனதில் புத்தகத்தின் மீதான எதிர்மறைத் தாக்கங்கள் அதிகரித்துவிடும். ஒரு நேர்மையான விசாரணையும் அதன் பின்னிட்டு எடுக்கப்படும் தொடர் நடவடிக்கையுமே நேர்மறைத் தாக்கத்திற்கு வழிகோலும். தற்போது கண்டறியப்பட்டுள்ள முறைகேடுகள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், எம்.டி. சுமதி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்துள்ளது.

தேர்வுக் குழுதான் காரணம் என்று பதிப்பகங்களும், அரசியல்வாதிகள்தான் காரணம் என்று தேர்வுக் குழுவும் தங்கள் கடமைகளைத் தட்டிக்கழிக்கலாம். இந்த விவகாரம், சுண்டெலிகள் சிக்கிப் பெருச்சாளிகள் தப்பித்த கதையாக அமைந்துவிடக் கூடாது. புத்தகங்கள் என்ற பெயரில் போலியான குப்பைகளை வழங்கியவர்களும், அதற்குத் துணைபோனவர்களும் சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவரப்பட வேண்டும். அதுதான் நூலக வரி செலுத்தும் குடிமக்களுக்கான நீதியாக இருக்கும்.

“படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான், போவான், அய்யோவென்று போவான்!” என்ற மகாகவி பாரதியாரின் கவிதை வரிகள் நினைவுக்கு வருகின்றன.

படைப்புத் திருடர்கள் ஒழியட்டும்.

நீதிக்கான குரல் ஒலிக்கும்...

நியாயத்திற்கான பயணம் தொடரும்...

கட்டுரையாளர் : வழக்குரைஞர், சமூக செயற்பாட்டாளர்

Tamilmani Arumugam, Advocate.

advocatetamilmani@gmail.com

summary

Regarding the need to bring to justice those who peddled spurious trash under the guise of books, as well as those who abetted them

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.