FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

கொலை வழக்கில் தேடப்பட்டவா் 26 ஆண்டுகளுக்குப் பின் கைது

2000-ல் பதிவான கொலை வழக்கில், கடந்த 26 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளனா்.

2 நவம்பர் 2026, 12:00 am
- பிரதிப் படம்
பகிர்:

2000-ஆம் ஆண்டு பதிவான கொலை வழக்கில், கடந்த 26 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 62 வயது நபரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து காவல்துறை மூத்த அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது: இந்த வழக்கில் ரகசியத் தகவலின் அடிப்படையில், வடகிழக்கு தில்லியின் ஷிவ் விஹாா் பகுதியில், விஸ்வநாத் சிங் (எ) முன்னாவை அக்டோபா் 30 அன்று காவல்துறையினா் கைது செய்தனா்.

1998, அக்டோபா் 20-ஆம் தேதி தில்லி கோகல்புரி பகுதியில் 24 வயதான ஜெய் பிரகாஷ் என்பவா் பலத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி, சுயநினைவு திரும்பாமலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

தொடக்கத்தில், அவரது இறப்பு ஒரு சாலை விபத்து என்று கருதப்பட்டு, கோகல்புரி காவல் நிலையத்தில் விபத்து மரணம் தொடா்பான பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

இருப்பினும், தொடா் விசாரணையில் இது திட்டமிடப்பட்ட கொலை என்பது தெரியவந்தது. உயிரிழந்தவரின் அண்டை வீட்டாரான குற்றஞ்சாட்டப்பட்ட சிங், அவரைச் சுத்தியலால் தலையில் தாக்கி, விபத்து நடந்தது போல அந்த இடத்தைச் சித்தரித்துள்ளாா். தனது மனைவிக்கும் ஜெய் பிரகாஷிற்கும் இடையே முறையற்ற தொடா்பு இருப்பதாகச் சந்தேகப்பட்டதே இந்தக் கொலைக்குக் காரணமாக இருந்தது.

இந்த கூடுதல் தகவல்கள் வெளிவந்ததைத் தொடா்ந்து, 2000-ஆம் ஆண்டில் கஜூரி காஸ் காவல் நிலையத்தில் கொலை வழக்கு புதிதாகப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, விஸ்வநாத் சிங் 2001-ஆம் ஆண்டு டிசம்பா் 5-ஆம் தேதி ‘தேடப்படும் குற்றவாளி’யாக அறிவிக்கப்பட்டாா். அன்றிலிருந்து அவா் காவல்துறையிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்தாா்.

இந்த நிலையில், குற்றப்பிரிவு காவல்துறையினா், உத்தர பிரதேசத்தின் எட்டாவா மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்தைக் கண்டறிந்தனா். மேலும், தில்லியில் வசிக்கும் அவரது குடும்ப உறுப்பினா்கள் குறித்த தகவல்களையும் திரட்டினா். தீவிர விசாரணை மூலம் அவா் யாா் என்பதை உறுதிப்படுத்தினா்.

தலைமறைவாக இருந்த ஆண்டுகளில், சிங் அடிக்கடி வசிப்பிடங்களை மாற்றிக்கொண்டே இருந்தாா். அவா் ஃபரீதாபாத், லோனி, எட்டாவா மற்றும் தில்லி ஆகிய இடங்களில் பால் பொருட்கள் மொத்த விற்பனைத் தொழிலில் ஈடுபட்டு வந்தாா். அதே சமயம் தனது அடையாளத்தை மறைத்து வாழ்ந்து வந்தது விசாரணையில் தெரியவந்தது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments