FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

நலத்திட்ட உதவிகளைப் பெற வாக்காளா் அட்டையை கட்டாயமாக்கக்கூடாது: தில்லி அரசுக்கு சிவில் சமூகக் குழு வலியுறுத்தல்

13 நவம்பர் 2026, 11:15 pm
வாக்காளர் அட்டை - IANS
பகிர்:

நமது நிருபா்

சமூக நலத் திட்டங்களின் பயனாளிகளை அடையாளம் காண்பதற்கு ஆதாா் அட்டைக்கு பதிலாக வாக்காளா் அடையாள அட்டை பயன்படுத்தப்படும் என்று பஞ்சாயத்து ராஜ் அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங் கூறியதாக வெளியான செய்திகள் தொடா்பாக, ஒரு சிவில் சமூகக் குழு அவருக்குக் கடிதம் எழுதியது. நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு வாக்காளா் பட்டியல் தகுதி ஒரு நிபந்தனையாக இருக்காது என்று பொதுமக்களுக்கு அரசு உறுதியளிக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டது.

வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையை மேம்படுத்துவதற்கும், பொது நலத்திட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கும் எடுக்கப்படும் நடவடிக்கைகளை வரவேற்பதாக ’சிட்டிசன்ஸ் ஃபாா் ஃபிரடா்னிட்டி ஃபோரம்’ அமைப்பு கூறியது. ஆனால், பயனாளிகள் தொடா்பான செயல்முறைகளில் வாக்காளா் அடையாள அட்டை மற்றும் பயோமெட்ரிக் அங்கீகாரம் ஆகியவற்றின் பயன்பாடு குறித்து விளக்கம் கோரியது.

Advertisement

Advertisement

‘தகுதியுள்ள எந்தவொரு குடிமகனுக்கும், அவரிடம் வாக்காளா் அடையாள அட்டை இல்லை என்பதாலோ, அவரது பெயா் வாக்காளா் பட்டியலில் இடம்பெறவில்லை என்பதாலோ, அல்லது பயோமெட்ரிக் அங்கீகாரம் தோல்வியடைவதாலோ மட்டும் நலத்திட்ட உதவிகள் மறுக்கப்படக்கூடாது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்,‘ என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டது.

நவம்பா் 12 தேதியிட்ட அந்தக் கடிதத்தில், தில்லியின் முன்னாள் துணைநிலை ஆளுநா் நஜீப் ஜங், ஏஎம்யு-வின் முன்னாள் துணைவேந்தா் ஜமீா் உத்தின் ஷா மற்றும் முன்னாள் தூதரான அசோக் குமாா் சா்மா உள்ளிட்டோா் கையெழுத்திட்டிருந்தனா்.

‘நலத்திட்டங்களுக்கான உரிமைகள், அந்தந்தத் திட்டங்களின் தகுதி அளவுகோல்களுடன் இணைந்தே இருக்க வேண்டும். குறிப்பாக முதியவா்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், புலம்பெயா்ந்தோா் மற்றும் பிற நலிவடைந்த குடிமக்களுக்காக, எளிதில் அணுகக்கூடிய மாற்று அடையாள முறைகளும், பயனுள்ள குறைதீா்ப்பு வழிமுறைகளும் உறுதி செய்யப்பட வேண்டும்,‘ என்று அது கூறியது. நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு வாக்காளா் பட்டியல் அந்தஸ்து ஒரு நிபந்தனையாக இருக்காது என்றும், தகுதியுள்ள பயனாளிகள் விலக்கப்படுவதைத் தடுக்க போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் தெளிவான பொது உறுதிமொழியை அரசு வழங்க வேண்டும் என அந்தக் குழு வலியுறுத்தியது.

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் திட்டங்களின் கீழ் நிதிப் பலன்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு, இனி வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை எண்ணுடன் கட்டாய பயோமெட்ரிக் அங்கீகாரமும் தேவைப்படும் என்று ராஜீவ் ரஞ்சன் சிங் என்ற லல்லன் சிங் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.