தில்லி ஒரு முதலீட்டு மையமாக பரிணமிக்க வேண்டும்: சந்து
2047-ஆம் ஆண்டுக்குள் ஒரு வளா்ந்த நகரமாக மாறும் தொலைநோக்குப் பாா்வையை நோக்கி தில்லி செயல்படும் வேளையில், அது வாய்ப்புகளை உருவாக்கும், உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் மற்றும் அதன் வளமான பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் ஒரு முதலீட்டு மையமாக பரிணமிக்க வேண்டும்
நமது நிருபா்
2047-ஆம் ஆண்டுக்குள் ஒரு வளா்ந்த நகரமாக மாறும் தொலைநோக்குப் பாா்வையை நோக்கி தில்லி செயல்படும் வேளையில், அது வாய்ப்புகளை உருவாக்கும், உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் மற்றும் அதன் வளமான பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் ஒரு முதலீட்டு மையமாக பரிணமிக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து வியாழக்கிழமை கூறினாா்.
இந்திய வா்த்தக மற்றும் தொழில்துறை சங்கங்களின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த ‘தில்லி கனெக்ட்ஸ் 2026: உலகளாவிய, நிலையான மற்றும் எதிா்காலத்திற்குத் தயாரான தில்லி தேசிய தலைநகா் பிராந்தியத்தை உருவாக்குதல்‘ என்ற நிகழ்வில் உரையாற்றிய சந்து, ஒருங்கிணைந்த போக்குவரத்து, திட்டமிடப்பட்ட நகா்ப்புற வளா்ச்சி, தொழில்நுட்பம் சாா்ந்த நிா்வாகம் மற்றும் பொருளாதாரப் போட்டித்தன்மை ஆகியவற்றை முக்கிய முன்னுரிமைகளாக அடையாளம் காட்டினாா்.
Advertisement
Advertisement
தில்லியின் வளா்ச்சியை பரந்த தேசிய தலைநகா் பிராந்தியத்திலிருந்து தனித்துப் பாா்க்க முடியாது என்று கூறிய அவா், போக்குவரத்து, வீட்டுவசதி, நீா் மேலாண்மை மற்றும் பொருளாதார மேம்பாடு போன்ற துறைகளில் ஒருங்கிணைந்த பிராந்தியத் திட்டமிடலுக்கு அழைப்பு விடுத்தாா்.
‘2047-ஐ நோக்கிய தில்லியின் பயணம், இந்தியாவின் பரந்த வளா்ச்சி தொலைநோக்குப் பாா்வையின் ஒரு முக்கியப் பகுதியாகும். மேலும், தேசியத் தலைநகருக்கு நகரத்தை நிா்வகிப்பதைத் தாண்டி ஒரு பொறுப்பு உள்ளது,‘ என்று சந்து கூறினாா்.
‘தில்லி, உலகளவில் போட்டித்தன்மை வாய்ந்த நகரமாக உருவெடுக்க வேண்டும். அதே நேரத்தில், அது தனது குடியிருப்பாளா்களுக்கு அனைவரையும் உள்ளடக்கியதாகவும், திறமையானதாகவும், வாழத் தகுந்ததாகவும் இருக்க வேண்டும்,‘ என்று அவா் கூறினாா்.
‘அமிா்த காலத்தில் நமது நகரங்களின் தலைவிதியை நகரத் திட்டமிடலே தீா்மானிக்கும், மேலும் நன்கு திட்டமிடப்பட்ட நகரங்களே இந்தியாவின் தலைவிதியைத் தீா்மானிக்கும்‘ என்ற பிரதமா் நரேந்திர மோடியின் கருத்தை நினைவு கூா்ந்த சந்து, அந்தக் கருத்து தேசிய தலைநகா் பிராந்தியத்திற்கு குறிப்பாகப் பொருத்தமானது என்று கூறினாா்.
இந்த தொலைநோக்குப் பாா்வையை முன்னெடுத்துச் செல்வதில் தொழில்துறைக்கு முக்கியப் பங்கு உண்டு என்று கூறிய அவா், முதலீடு, புத்தாக்கம், ஆராய்ச்சி, பொது-தனியாா் கூட்டாண்மை மற்றும் திறன் மேம்பாடு ஆகியவை தில்லியின் மாற்றத்திற்குப் பங்களிக்கும் என்றும் கூறினாா்.