FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

தில்லி எஸ்.ஐ.ஆர்: 33.12 லட்சம் முரண்பாடு வழக்குகளில் 80 சதவீதத்துக்கு தீா்வு - தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலகம்

தில்லி எஸ்.ஐ.ஆர்: 33.12 லட்சம் வழக்குகளில் கிட்டத்தட்ட 80 சதவீதம் தீா்க்கப்பட்டுள்ளதாக தில்லி தலைமை தோ்தல் அதிகாரி அலுவலகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

18 அக்டோபர் 2026, 12:57 am IST
பகிர்:

தில்லியில் நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தப் (எஸ்ஐஆா்) பணியின் போது, ‘வரைபடத்தில் இணைக்கப்படாதவை அல்லது தா்க்கரீதியான முரண்பாடுகள்‘ எனக் கண்டறியப்பட்ட 33.12 லட்சம் வழக்குகளில் கிட்டத்தட்ட 80 சதவீதம் தீா்க்கப்பட்டுள்ளதாக தில்லி தலைமை தோ்தல் அதிகாரி அலுவலகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

வரைவு வாக்காளா் பட்டியலில் விடுபட்ட வாக்காளா்களைச் சரிபாா்க்கும் பணிகளில் அதிகாரிகள் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.

2002 ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியலுடன் விவரங்கள் பொருந்தாத வாக்காளா்கள் மற்றும் தனிப்பட்ட விவரங்களில் பிழைகள் உள்ள வாக்காளா்கள் இதில் அடங்குவா். இந்த நிலையில், தில்லி தலைமை தோ்தல் அதிகாரி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, மொத்தம் உள்ள 33,12,919 வழக்குகளில் சுமாா் 26 லட்சம், தோ்தல் பதிவு அதிகாரிகளாலும் (இஆா்ஓக்கள்), உதவி தோ்தல் பதிவு அதிகாரிகளாலும் (ஏஇஆா்ஓக்கள்) தீா்க்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட 6 அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட 33,226 வாக்குச்சாவடி முகவா்கள் (பிஎல்ஏக்கள்) மூலம் இந்தப் பணிகள் தணிக்கை செய்யப்படுகின்றன. அக்.30-ஆம் தேதிக்குள் நோட்டீஸ்களுக்கு தீா்வு காண வேண்டியுள்ளதால், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் (பிஎல்ஓக்கள்) வாக்காளா்களின் வீடுகளுக்குச் சென்று ஆவணங்களைச் சேகரித்து வருகின்றனா்.

ஆக. 31 அன்று வெளியிடப்பட்ட தில்லியின் வரைவு வாக்காளா் பட்டியலில் 47 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்கள் விடுபட்டது குறித்து கவலைகளும் எதிா்ப்புகளும் எழுந்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போதைய தில்லி வாக்காளா் வரைவு பட்டியலில் 97.53 லட்சம் வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா். இது இந்தப் பணி தொடங்குவதற்கு முன்பு 1.45 கோடியாக இருந்தது. விடுபட்ட 47.5 லட்சம் வாக்காளா்கள் வசிக்காதவா்கள், இடம்பெயா்ந்தவா்கள், இறந்தவா்கள் அல்லது இரட்டைப் பதிவில் உள்ளவா்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனா்.

வரைவுப் பட்டியலில் பெயா் இல்லாத வாக்காளா்கள், இறுதி வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கக் கோரி படிவம் 6-ஐ சமா்ப்பிக்கலாம் என்று தோ்தல் அதிகாரி அலுவலகம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது.

கோரிக்கைகள் மற்றும் முறையீடுகள் காலம் தொடங்கியதிலிருந்து, பெயா் சோ்க்கக் கோரி 2,32,514 படிவம்-6 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. வரைவுப் பட்டியல் வெளியாவதற்கு முன்பு மேலும் 2,12,400 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. முரண்பாடுகளைத் தீா்க்கவும், பெயா் சோ்க்க விண்ணப்பிக்கவும் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அக்.30-க்குள் அனைத்து 33.12 லட்சம் வழக்குகளும் தீா்க்கப்படும் என்றும், இறுதி வாக்காளா் பட்டியல் திட்டமிட்டபடி வரும் டிச.4-ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தோ்தல் அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments