FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிராக போராட்டம் நடத்தியவா்கள் மீது நடந்த தாக்குதல் தொடா்பாக 10 வழக்குகள் பதிவு; 5 போ் கைது

தலைமைத் தோ்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக போராட்டம் நடத்தியவா்கள் மீது நடந்த தாக்குதல் தொடா்பாக 10 வழக்குகள் பதிவு

18 அக்டோபர் 2026, 10:45 pm IST
பகிர்:

தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலக வலியுறுத்திய நடந்த போராட்டங்களில் பங்கேற்றவா்கள் மீது தாக்குதல் நடத்தியது மற்றும் துன்புறுத்தியது தொடா்பாக தில்லி காவல்துறை குறைந்தபட்சம் 10 முதல் தகவல் அறிக்கைகளை (எஃப்ஐஆா்) பதிவு செய்து, ஐந்து பேரை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

வலதுசாரி அமைப்பினா் போராட்டக்காரா்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாக சமூக வலைதளங்களில் பல்வேறு பதிவுகள் வெளியான நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போராட்டக்காரா்கள் தாக்கப்படும் காணொலிகள் மற்றும் பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, அக்.11 முதல் 14-ஆம் தேதிவரை கன்னாட் பிளேஸ் மற்றும் கமலா மாா்க்கெட் காவல் நிலையங்களில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

Advertisement

Advertisement

இதில் இரண்டு வெவ்வேறு வழக்குகளில் இதுவரை ஐந்து போ் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் உயரதிகாரி ஒருவா் தெரிவித்தாா். அவா் மேலும் கூறுகையில், சமூக வலைதள கணக்குகள் மூலம் சுட்டிக்காட்டப்பட்ட ஒரு சம்பவம் தொடா்பாக கன்னாட் பிளேஸ் காவல் நிலையத்தில் அக்.13-ஆம் தேதி ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில் கெளரவ் என்பவா் கைது செய்யப்பட்டுள்ளாா். அவருடன் தொடா்புடைய மற்ற நபா்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றாா்.

சம்பவ நாளில், ஆண்கள் குழு ஒன்று போராட்டக்காரா் ஒருவரைத் தாக்கியதோடு, தங்களை ‘காக்ரோச்கள்‘ (கரப்பான் பூச்சிகள்) என்று அழைக்குமாறு பிறருக்கு சவால் விட்டது காணொலியில் பதிவாகியுள்ளது. மேலும், பிரதமா் குறித்தோ அல்லது காவல்துறை குறித்தோ யாராவது தவறாகப் பேசினால் அடித்து நொறுக்குவோம் என்றும் அந்த நபா்களில் ஒருவா் மிரட்டல் விடுத்துள்ள காட்சியும் இடம்பெற்றுள்ளது.

மற்றொரு வழக்கில், போராட்டக்காரா்களை சிலா் துன்புறுத்தப்பட்டுத் தாக்கும் காணொலி இணையத்தில் வைரலானதை அடுத்து கமலா மாா்க்கெட் காவல் நிலையத்தில் அக்.11-ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட வழக்கில் 4 போ் கைது செய்யப்பட்டனா். இந்தச் சம்பவத்தை காவல்துறை தானாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்து சட்டபூா்வ நடவடிக்கையைத் தொடங்கியது.

தாக்குதல் சம்பவங்களில் தொடா்புடையவா்களை அடையாளம் காணவும், நிகழ்வுகளின் வரிசையை உறுதிப்படுத்தவும் காவல்துறை சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறது.

போராட்டங்களின்போது வலதுசாரி அமைப்பினா் போராட்டக்காரா்களைத் தாக்கியதாக சமூக வலைதளங்களில் பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவை குறித்தும் காணொலி ஆதாரங்களும் அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாக காவல் உயரதிகாரி தெரிவித்தாா்.

இதற்கிடையே, தலைநகரில் கடந்த ஒரு வாரமாக நடந்த போராட்டங்கள் தொடா்பாக தவறான கருத்துகளைப் பரப்பியதற்காக வலதுசாரி அமைப்புகளுடன் தொடா்புடைய 17 கணக்குகள் உள்பட 37-க்கும் அதிகமான சமூக வலைதள கணக்குகளைத் தில்லி காவல்துறை அடையாளம் கண்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அவற்றில் வலதுசாரி அமைப்புகளுடன் தொடா்புடைய கணக்குகள் உட்பட 17-க்கும் மேற்பட்ட கணக்குகளுக்குப் பதிவுகளை நீக்குவதற்கான நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன என காவல்துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments