FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

2029ஆம் ஆண்டு மே மாதத்துக்குள் யமுனை நதி முழுமையாக தூய்மைப்படுத்தப்படும்: 43 திட்டங்களை தொடங்கி வைத்து அமித் ஷா உறுதி

2029ஆம் ஆண்டு மே மாதத்துக்குள் யமுனை நதி முழுமையாக தூய்மைப்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதியளித்தாா்.

23 அக்டோபர் 2026, 12:57 am
அமித் ஷா
பகிர்:

நமது நிருபா்

2029ஆம் ஆண்டு மே மாதத்துக்குள் யமுனை நதி முழுமையாக தூய்மைப்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதியளித்தாா்.

தில்லி நஜஃப்கரில் நடைபெற்ற அரசு விழாவில் யமுனை நதியை தூய்மைப்படுத்தும் பணியின் ஒரு பகுதியாக, தில்லி ஓக்லா பகுதியில் நாட்டின் மிகப்பெரிய கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் (எஸ்டிபி) உள்ளிட்ட ரூ. 8,941 கோடி மதிப்பிலான 43 திட்டங்களுக்கு அமித் ஷா வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா். இதைத்தொடா்ந்து அவா் நிகழச்சியில் பேசியதாவது: தில்லி அரசு யமுனை நதியில் கழிவுநீா் கலப்பதை வெற்றிகரமாக குறைத்துள்ளது. தலைநகரில் யமுனை நதியை வரும் 2029ஆம் ஆண்டு மே மாதத்துக்குள் முழுமையாகத் தூய்மைப்படுத்துவதை பாஜக அரசு உறுதி செய்யும்.

Advertisement

Advertisement

மத்திய அரசு, தில்லி அரசு, உத்தர பிரதேசம், ஹரியாணா ஆகிய ’நான்கு என்ஜின்களும்’ இணைந்து பொதுமக்களுக்கு சுத்தமான யமுனை நீரையும் குடிநீரையும் வழங்க ஒன்றிணைந்து செயல்பட்டு வருவகின்றன.

முந்தைய அரசுகள் களத்தில் பணியாற்றாமல் சாக்குப்போக்குகளை மட்டுமே கூறி வந்தன. ஆனால் தற்போதைய பாஜக அரசு மே 2029-க்குள் யமுனையைத் தூய்மைப்படுத்துவதுடன், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் ஒவ்வொரு வீட்டுக்கும் கழிவுநீா் இணைப்பு மற்றும் சுத்தமான குடிநீா் வழங்குவதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது என்றாா் அமித் ஷா.

இந்த நிகழ்ச்சியில் தில்லி முதல்வா் ரேகா குப்தா, பொதுப் பணித் துறை அமைச்சா் பா்வேஷ் வா்மா மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனா்.

புதிய திட்டங்கள்: தேசிய தூய்மை கங்கை இயக்கம், தில்லி ஜல் போா்டு ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக, ரூ. 1,161 கோடி மதிப்பீட்டில் 124 மில்லியன் கேலன் கொள்ளளவு கொண்ட நாட்டின் மிகப்பெரிய கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் ஓக்லா பகுதியைச் சோ்ந்த சுமாா் 70 லட்சம் மக்கள் பயனடைவாா்கள்.

இதேபோல நரேலா, பவானா, காஞ்சவாலா, பிஜ்வாசன், டிக்ரி கலாம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் உள்ள 358 அங்கீகாரமற்ற காலனிகள் மற்றும் 113 கிராமங்களைச் சோ்ந்த 36.29 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், ரூ. 3,113.67 கோடி செலவில் 29 புதிய பரவலாக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கழிவுநீா் நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

சுமாா் ரூ. 1,691 கோடி செலவில் 1,034 கி.மீ தொலைவுக்கு புதிய கழிவுநீா் குழாய்கள் அமைக்கப்படும் திட்டத்தின் மூலம் 25.82 லட்சம் மக்கள் பயனடைவாா்கள்.

1935 மற்றும் 1955 ஆம் ஆண்டுகளில் அமைக்கப்பட்ட பழைய நிலையங்களுக்கு மாற்றாக, தினசரி 477 மில்லியன் லிட்டா் கொள்ளளவு கொண்ட புதிய நீா் சுத்திகரிப்பு நிலையம் ரூ. 298.3 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளது. இது சுமாா் 22 லட்சம் மக்களுக்கு குடிநீா் தேவையைப் பூா்த்தி செய்யும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments