பாரதி காலமும் கருத்தும்
பாரதியின் எழுத்துகளிலிருந்தே புரட்சிகர பாரதியை வெளிக்காட்டும் ஆய்வு நூல்.
பாரதி காலமும் கருத்தும் - இலக்கிய விமர்சனம் - தொ.மு.சி. ரகுநாதன்; பக்.488; ரூ.550; முல்லை பதிப்பகம், சென்னை -40; ✆ 98403 58301.
பாரதி பற்றிய ஆய்வு நூல்களில் சிறப்பிடம் பெறுவது பாரதி காலமும் கருத்தும்.
பாரதியை சமுதாயக் கண்ணோட்டத்திலும் சமூகப் பின்னணியிலும் ஆராயும் இந்த நூலில், பாரதியின் மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட, திரிக்கப்பட்ட இலக்கிய, அரசியல் வாழ்வை வெளிப்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர் தொ.மு.சி. ரகுநாதன்.
Advertisement
Advertisement
பாரதியின் தேச பக்தியின் வித்து பற்றிக் கூறும்போது, தம் முதல் நூலில் தொடங்கி அடுத்தடுத்த நூல்களைத் தம் குருவாக வரித்துக்கொண்ட சகோதரி நிவேதிதைக்குச் சமர்ப்பித்து வந்துள்ளார் என்பதை நிறுவுகிறார் தொ.மு.சி.
சுதேசமித்திரனில் உதவியாசிரியராகப் பணிபுரிந்துகொண்டே, பெண்களின் முன்னேற்றத்துக்கான 'சக்கரவர்த்தினி'யின் ஆசிரியராக எவ்வளவு காலம் பணியாற்றினார் என்பதுடன் பாரதியின் பங்களிப்புகளை- பெண் கல்வி, சாதி, மத மறுப்புத்திருமணங்கள் உள்பட - தலையங்கம் முதலான அவருடைய எழுத்துகளாலேயே விளக்குகிறார்.
குருமணியான நிவேதிதையின் உபதேசங்களுடன் அவருடைய தீவிரவாத அரசியலில் பாரதி கொண்டிருந்த பற்றும், விவேகானந்தரின் எண்ணற்ற கருத்துகளை மேற்கோள்களாகக் காட்டி, பாரதி எவ்வாறு விவேகானந்தருக்கு ஆட்பட்டிருந்தார் என்பதும் நூலில் விளக்கப்படுகிறது.
தீவிர தேசியவாதமும் புரட்சிகர இயக்கமும் பற்றிய ஆய்வில் பாரதி கொண்டிருந்த ஈர்ப்புடன் ஒட்டுமொத்தமாக நாட்டின் விடுதலைப் போராட்டத்தின் இன்னொரு பக்கத்துடன், நிவேதிதை, திலகர், அரவிந்தர், பூபேந்தர் எனப் பலரும் விரிவாகப் பேசப்படுகின்றனர்.
இந்தியா பத்திரிகையில் அவர் எழுதியவற்றிலிருந்து பாரதியின் அரசியல் நிலைப்பாட்டை விரிவாக அலசி ஆராய்ந்திருக்கும் தொ.மு.சி., ஆஷ் கொலை குறித்து பாரதி அறிந்திருந்தார்; ஆதரவாக இருந்தார் என்கிறார். பிற்சேர்க்கையாக ரகசிய சங்கத்தின் பிரகடனத்தையும் இணைத்திருக்கிறார்.
பாரதியின் எழுத்துகளிலிருந்தே புரட்சிகர பாரதியை வெளிக்காட்டும் ஆய்வு நூல்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.