தீபாவளி மலர்கள் 2026 (அமுதசுரபி தீபாவளி மலர்)
அமுதசுரபி தீபாவளிச் சிறப்பிதழ் வாசகர்களுக்குக் கிடைத்த அட்சய பாத்திரம்.
அமுதசுரபி தீபாவளி மலர்-2026; திருப்பூர் கிருஷ்ணன்; பக். 226; ரூ. 200; ஸ்ரீராம் டிரஸ்ட், ஆர்5.ஏ/2, இமயம் காலனி, 2-ஆவது தெரு, அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம், சென்னை-600 101.
தற்கால இலக்கியம், பழைய இலக்கியம், கலை, வாழ்வியல், ஆன்மிகம், தமிழ் வளர்க்கும் அமைப்புகள், பொது ஆகிய தலைப்புகளில் படைப்புகள் அமுதசுரபி தீபாவளிச் சிறப்பிதழை அலங்கரிக்கின்றன.
Advertisement
Advertisement
கலைவாணியின் கருணையால் ராமபிரானையும், கண்ணனையும், திருமாலையும் பற்றி எழுதிய தியாகராஜர் ஏன் கலைவாணி குறித்துப் பாடல் எதுவும் எழுதவில்லை என்கிற கேள்விக்கு விடையாக வந்திருக்கும் அட்டைப்படச் சிறுகதையான 'காட்சி தந்தாள் கலைவாணி' தெய்வீக விளக்கம்.
திருமடங்கள் சமயத்தையும் தமிழையும் வளர்க்கவே வந்தவை என்பதை இன்றளவிலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது கோவிலூர் மடம் என்பதை அதன் பணிகளைக் கொண்டு அறிந்துகொள்ள முடிகிறது.
தனி மனிதனின் கனவுகளுக்கும், சாதனையாளர்களின் கனவுகளுக்கும் உள்ள வேறுபாடு எல்லோருக்கும் தெரியும். அதே கனவுகள் ஆண்டாளுக்கும், பூசலார் நாயனாருக்கும் வந்ததன் வெளிப்பாடு ஆன்ம வெளிச்சமாக நமக்கு இருக்கிறது.
வறுமை என்கிற பேராசான் தரும் போதனைகளை நாம் சரியாகப் புரிந்துகொண்டால், நாம் சென்றடையும் உயரம் இமயத்தை எட்டும் என்பதற்கு உதாரணமாகிறது தொழிலதிபர் டி.கே. சந்திரனுடனான உரையாடல்.
இளையராஜா, கமல், வாலி, கிரேஸி மோகனுடன் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவும் சேர்ந்துவிட்டால் அதன் விளைவுகள் ரசிகர்களுக்கு எப்பேர்ப்பட்ட ரசனையான காட்சிகளைப் பரிசுகளாகத் தரும் என்பதற்கு இன்றளவும் உதாரணங்கள் உள்ளன. அதற்கு திரைப்பட இயக்குநர் ராசி அழகப்பன் சாட்சி பகன்றிருக்கிறார்.
மலர் முழுவதும் ஆங்காங்கே இடம்பெற்றிருக்கும் கவிதைகள் தீபாவளிப் பட்டாசுகளில் மத்தாப்பூ போன்று ஒளிர்கின்றன. சிறுகதைகள் ஒவ்வொன்றும் சிறப்பான அனுபவத்தைத் தருகின்றன.
'என்னைக் கவர்ந்த புலவர்' என்ற தலைப்பில் காரைக்கால் அம்மையார், சேக்கிழார், ஒளவையார், ஒக்கூர் மாசாத்தியார், காளமேகப் புலவர், கபிலர் ஆகியோர் குறித்த ஒருபக்க கட்டுரைகள் வித்தியாசமானவை. எனக்குப் பிடித்த எழுத்தாளர் என்கிற பகுதி நாம் வாசித்து மகிழ்ந்த எழுத்தாளர்களை நினைவுகூரச் செய்கிறது. மொத்தத்தில் அமுதசுரபி தீபாவளிச் சிறப்பிதழ் வாசகர்களுக்குக் கிடைத்த அட்சய பாத்திரம்.