முகப்பு
ஆன்மிகம்

மூடிய கருப்பையும் திறக்குமாம்...முருகன் வழிபாடு

உத்தராயண புண்ய காலம் என்று போற்றப்பெறும் மாதத் தொடக்கம் தை மாதம் ஆகும். அம்மாதத்தில், அமாவாசைக்கு அடுத்த ஏழாம் நாளன்று....

Updated On : 26 ஜனவரி 2018, 2:54 pm IST
பகிர்:

உத்தராயண புண்ய காலம் என்று போற்றப்பெறும் மாதத் தொடக்கம் தை மாதம் ஆகும். அம்மாதத்தில், அமாவாசைக்கு அடுத்த ஏழாம் நாளன்று, அருணன் என்பவன் சாரதியாக இருந்து ஓட்டும் கதிரவன் தேர், வடக்கு முகமாகத் திரும்புகிறது. அந்நன்னாளே "ரத சப்தமி' எனப்படுகிறது. இந்தப் புண்ணிய தினத்துக்கு அடுத்து வரும் நாளே "தை கிருத்திகை' ஆகும். சித்திரை முதலாகத் தொடங்கும் பன்னிரு மாதங்களில் பத்தாவது மாதமாக மலர்வது "தை' மாதம்.

பத்து மாதம் கருவுற்று, பிள்ளைச் செல்வம் பெற வேண்டிய பெண்மணிகள், பத்தாவது மாதமான தை கிருத்திகையில் மால் மருகன் முருகனை மனமார நினைத்து ஏறக்குறைய ஓராண்டு விரதம் இருந்து வழிபட்டால், அவர்களின் மூடிய கருப்பை திறக்கும்; கட்டாயம் குழந்தையும் பிறக்கும். எனவே தான் "தை பிறந்தால் வழி பிறக்கும்' எனும் வாழ்வியல் பழமொழி வருகிறது. இந்தப் பழமொழி, பொங்கலோடும் தொடர்புடையது!

தலங்கள் தோறும் தை கிருத்திகை

Advertisement

Advertisement

* மாதம் தோறும் கிருத்திகை விரதங்கள் வருகின்றன. ஒரு சில மாதங்கள் இரண்டு கிருத்திகைகள் வருவதுண்டு. இதனை "உபரி கிருத்திகை' என்பார்கள். கிருத்திகைகளில் ஆடிக் கிருத்திகை, தை கிருத்திகை நாள்கள் காட்சியும் மாட்சியுமுடையனவாகும்.

* ஆறுமுகனின் ஆறுபடை வீடுகளிலும், ஏனைய தலங்களிலும், மற்றும் சைவ சமயம் சார்ந்த சபைகளிலும் தை கிருத்திகை, தனி மகத்துவத்துடன் கொண்டாடப்படுகிறது.

* அபிஷேகத்துக்குப் பழநி! அலங்காரத்துக்குச் செந்தூர்' என்பார்கள். திருச்செந்தூரில் தை கிருத்திகை விழாவில் காலையிலும், மாலையிலும் முறையே சண்முக நாதர் சிங்கக் கேடய சப்பரத்திலும், பூங்கோயில் சப்பரத்திலும் திருவீதி பவனி வருவார். மாலை மதி நிலவில், சாலவும் அழகுடன் கடற்கரை ஓரமாக உலா வரும் அவரை "அழகான செம்பொன் மயில் மேலமர்ந்து அலைவாயுகந்த பெருமாளே'' என்று அருணை வள்ளல் திருப்புகழில் துதி செய்தருளினார்.

* தை மாதம் திருவண்ணாமலையில் "ஊடல் உற்சவம்' நிகழும். அப்போது தை கிருத்திகை நாளில், திருவண்ணாமலை குமரன் கோயிலுக்கு அருணாசலேசுவரர் எழுந்தருளும் வைபவம் மிகச் சிறப்பாக நடைபெறும். திருவண்ணாமலை குமரன் கோயில், அந்நகர் வடக்கு வீதியில் உள்ளது.

"ஜோதி முருகா! நித்தா! பழைய ஞான
சோணகிரி வீதி கந்தவேளே''
"அருணாபுரி வீதியில் நிற்கும் பெருமாளே''

என்றெல்லாம் திருப்புகழ் பாடல்கள், இந்தக் குமரன் புகழ் கூறுகின்றன. திருவண்ணாமலை குமரன் கோயிலில், தை கிருத்திகை அன்று அபிஷேக ஆராதனைகள் பெருமளவில் நிகழ்கின்றன. ஆறுமுகன் அடியார்கள் திருக்கூட்டம், அன்று அலைகள்போலத் தொடர்கின்றன.

* காஞ்சிபுரம் ஒரு "சோமாஸ்கந்த' தலமுமாகும். காமாட்சி- ஏகாம்பரநாதர் கோயில்களுக்கிடையே "குமரக் கோட்டம்' எனும் தனிக்கோயிலில் முருகப் பெருமான் எழுந்தருளியுள்ளார். அங்கு பாம்பன் சுவாமிகளுக்கு முருகன் கருணை புரிந்த "மயூரநாதர்' முன்பு அன்று "பஞ்சாமிருத வண்ணம்' (ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய வண்ணங்கள்) பாராயணம் செய்யப்பெறும். பால், தயிர், நெய், சர்க்கரை, தேன் என ஐந்து அருமையான திருமஞ்சனங்களும் நடைபெறுகின்றன. அன்றைய தினம் பக்தகோடிகளுக்கு அன்னதானம் செய்யப்படுகின்றது.

* "செந்தலை' என்ற ஊரில், ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் திகழும் சோமாஸ்கந்தர் திருமுகத்தில், தை கிருத்திகை நன்னாளில் சந்திர ரேகை தெரியும் சுந்தரக் காட்சி விழா அற்புதமாக நடைபெறுகிறது. அளவிலா அடியார்கள் அக்காட்சி கண்டு களிநடனம் புரிகின்றனர்.

* ஆரவாரம் அலைமோதும் தற்கால வாழ்வில், அடிக்கடி முருகக் கடவுளை தரிசிக்க இயலாவிடினும், ஆண்டுக்கொரு முறை, தூண்டு சுடராகப் பொலியும் தை கிருத்திகை நன்னாளிலாவது முருகன் திருநாமங்களை இயன்ற அளவில் மொழிந்து, அவன் எழுந்தருளியுள்ள ஆலயங்கள் - சபைகள் சென்று, அவனை அகம் உருகி வழிபட்டு அருளும் பொருளும் பெறுவோமாக! கடவுளைத் தேடாத வாழ்வு பயனற்றது அல்லவா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments