FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

முதல்வர் விஜய்யை முருகரோடு ஒப்பிட்டேனா? நான் பாடியதில் தவறில்லை - புஷ்பவனம் விளக்கம்

முதல்வர் விஜய்யை முருகப் பெருமானோடு ஒப்பிட்டேனா என்று புஷ்பவனம் குப்புசாமி விளக்கம் கொடுத்துள்ளார்.

49 வினாடிகள் முன்பு
புஷ்பவனம் குப்புசாமி - கோப்பிலிருந்து...
பகிர்:

திருச்செந்தூரில் சூரசம்ஹாரத்தின்போது, வேலெடுத்து பகை முடித்த என்று தொடங்கும் பாடலைப் பாடி, தமிழக முதல்வர் விஜய் போல முருகப் பெருமானும் சூரசம்ஹாரம் செய்கிறார் என புஷ்பவனம் குப்புசாமி பாடியிருப்பதாகப் பொருள் கொள்ளப்பட்டு, அந்தப் பாடல் பேசுபொருளாகியிருந்தது.

சமூக வலைத்தளங்களிலும் ஆன்மிகவாதிகளும், ஏராளமான முருக பக்தர்களும் இதற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement

திருச்செந்தூரில் முருகப் பெருமான் அசுரரை வதம் செய்யும் சூரசம்ஹாரத்தை நேரில் காண ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரையில் குவிவது வழக்கம். ஏராளமானோர் கந்தசஷ்டி நாள்களில் விரதம் இருந்து சூரசம்ஹாரத்தைக் காண குவிந்திருந்த போது, முருகனுக்கு அரோகரா என்ற கோஷத்தோடு, முதல்வருக்கு அரோகரா மற்றும் அமைச்சருக்கு அரோகரா என்ற வாசனங்கள் நிகழ்ச்சியை நேரலையில் வர்ணனை செய்து கொண்டிருந்தவர்கள் கூறும்போது நிச்சயம் ஆன்மிகவாதிகள் சற்று அதிர்ந்துபோயிருப்பார்கள்.

மேலும், சூரசம்ஹாரத்தை நேரலையாக வர்ணனை செய்த தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம், நாட்டுப்புறக் கலைஞா்கள் நல வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நாட்டுப்புறப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி, தானே எழுதிக் கொண்டு வந்த ஒரு பாடலையும் பாடியிருந்தார். அது முதல்வரைப் போல சூரசம்ஹாரம் செய்யுங்கள் என்று முருகனுக்கு ஆலோசனை சொல்வது போல அமைந்திருந்தது ஆன்மிகவாதிகள் இடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அதாவது, புஷ்பவனம் குப்புசாமி பாடியிருந்த பாடல் எவ்வாறு அமைந்திருந்தது என்றால், நமது தமிழக முதல்வர்போல, வேலெடுத்து பகை முடித்த வேலவனின் தாள் பணிந்து வேண்டும் வரம் கேளுங்களேன், வெற்றி உண்டு கேளுங்களேன் என்று பாடியிருந்தார்.

அதாவது, முதல்வர் விஜய்யைப் போல முருகன் சூரசம்ஹாரம் செய்திருப்பதாகப் பொருள் கொள்வதாக அமைந்திருந்தது அப்பாடல். இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், ஆன்மிகவாதிகள் முதல் சாதாரண முருக பக்தர்கள் வரை பலரும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

இதற்கிடையே கடுமையான விமர்சனங்கள் எழுந்திருக்கும் நிலையில், புஷ்பவனம் குப்புசாமி ஒரு விடியோ வெளியிட்டு தனது விளக்கத்தை வெளியிட்டுள்ளார். அதில், திருச்செந்தூரில் நான் பாடிய பாடலைக் கேட்டு பலரும் என்னைத் திட்டிக் கொண்டிருக்கிறீர்கள். என்னைத் திட்டுவதற்கு உங்கள் அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், எதற்காகத் திட்டுகிறோம் என்று தெரிந்து திட்ட வேண்டும்.

நான் பாடிய பாடலின் பொருள் என்னவென்றால், நமது தமிழக முதல்வர் போல, இங்கே கமா இருக்கிறது, அடுத்து, வேலெடுத்து பகை முடித்த முருகனிடம் வேண்டிக்கொண்டால், யார் வேண்டிக்கொண்டால், நமது தமிழக முதல்வர் போல வேண்டிக்கொண்டால், யாரிடம், முருகனிடம் வேண்டிக் கொண்டால் வெற்றி நிச்சயம் உண்டு. யாருக்கு வெற்றி நிச்சயம் உண்டு, நமது தமிழக முதல்வர் வேண்டிக் கொண்டது போல நாமும் முருகனிடம் வேண்டிக்கொண்டால் வெற்றி நிச்சயம் உண்டு, முருகனிடம் வேண்டும் வரம் கேளுங்கள், வெற்றி உண்டு பாருங்கள் என்றுதான் பாடியிருக்கிறேன். இதன்படி, முதல்வரை ஒரு சாட்சியாகத்தான் பாடியிருக்கிறேன், வெற்றி எப்படி சாத்தியமானது, அவர் வேண்டியது போல நாமும் வேண்டிக்கொண்டால் வெற்றி கிடைக்கும் என்றுதானே சொல்லியிருக்கிறேன், இதற்காகவா என்னைத் திட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.

முதல்வர் விஜய்யை முருகனோடு ஒப்பிட்டுப் பாடியிருப்பதாகக் கூறுகிறீர்கள், எங்கே ஒப்பிட்டுப் பாடியிருக்கிறேன், சாட்சியாகத்தானே அவரை வைத்திருக்கிறேன், முருகனுடன் ஒப்பிடவில்லை, முருகனின் பேரருள், அதற்கு நிகர் வேறெதுவுமில்லை என்று கூறியிருக்கிறார்.

இவரது விளக்கத்தை முருக பக்தர்களும், ஆன்மிகவாதிகள், அரசியல் கட்சித் தலைவர்களும் ஏற்றுக் கொள்வார்களா? என்பது தெரியவில்லை.

summary

Pushpavanam Kuppusamy has provided a clarification regarding whether he compared Chief Minister Vijay to Lord Murugan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.