தாயாருக்கு தெரியாமல் ஜப்பான் பயணம்... ஓட்டத்தில் வெண்கலம் வென்றவரின் சுவாரசிய கதை!
தாயாருக்குத் தெரியாமல் ஜப்பான் சென்று ஆசிய விளையாட்டுப் போட்டியின் 10,000 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் சீமா வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
தாயாருக்குத் தெரியாமல் ஜப்பான் சென்று ஆசிய விளையாட்டுப் போட்டியின் 10,000 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் சீமா வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
ஜப்பானின் அய்ச்சி - நகோயாவில், ஆசிய விளையாட்டு 20-வது தொடர் நடைபெற்று வருகிறது. இந்தியாவைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தத் தொடரில் இந்தியா, ஜப்பான், சீனா, தென்கொரியா, தாய்லாந்து உள்பட 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
நடப்பு ஆசிய விளையாட்டுகளில் தடகளத்தில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை, மகளிர் 10,000 மீட்டர் ஓட்டத்தில் சீமா குமாரி வெண்கலமாக வென்று தந்தார். பந்தய இலக்கை அவர். 32 நிமிஷம், 50.05 விநாடிகளில் கடந்து 3-ஆவது இடம் பிடித்தார்.
Advertisement
Advertisement
பஹ்ரைனின் வின்ஃப்ரெட் யாவி தங்கமும், ஜப்பானின் நோஸோமி டனாகா வெள்ளியும் வென்றனர். இந்தப் பிரிவில் இந்தியாவுக்கு 16 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கம் கிடைத்துள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், வெண்கலப்பதக்கம் வென்றதற்கு பின்னர் உள்ள சுவாரசிய கதையை சீமா குமாரி பகிர்ந்துள்ளார்.
இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் உள்ள ரேட்டா கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான சீமா குமாரிக்கு 12 வயதாக இருந்தபோது அவரது தந்தை காலமானார்.
வறுமை சூழ்ந்த நிலையில், சிறுவயதில் வெறும் காலோடு ஓடி, மாடுகளை மேய்த்துக் கொண்டே தனது ஓட்டப் பயிற்சியைத் தொடங்கினார். முதல்முறையாக ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற சீமா குமாரி, முதல் பதக்கத்தை வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
இதுகுறித்து சீமா குமாரி பேசும்போது, “என் தந்தை இப்போது உயிருடன் இல்லை. என்னுடைய தாயார் இருக்கிறார். ஆனால், அவருக்கு 78 வயது ஆகிறது. நான் அவருக்கு 45 வயதாக இருந்தபோது பிறந்தேன்.
நான் வெளியே செல்லும் போதெல்லாம் அவர் பதற்றமடைவார். அதனால், நான் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக ஜப்பான் செல்லவிருப்பதை அவரிடம் சொல்லவில்லை. அவருக்கு இது தெரியவந்தால், அவரால் நிம்மதியாகத் தூங்க முடியாது. அவருக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை இருக்கிறது. அதனால் நான் பயிற்சி முகாமுக்கோ அல்லது போட்டிகளுக்கோ செல்லும் போதெல்லாம், அவளிடம் அதிகம் சொல்வதில்லை.
எனக்கு ஒரு அக்கா இருக்கிறார். அவருக்கு 45 வயது இருக்கும். எங்கள் குடும்பத்தில் ஆறு பேர். நான் தான் கடைசிப் பிள்ளை. வெளியே சென்றால் என் அக்காவிடம் மட்டுமே சொல்வேன்.
நான் இப்போது பதக்கம் வென்றது அவருக்குத் தெரிந்திருக்கும். இப்போது அவர் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருப்பார்.
என்னுடைய அடுத்த போட்டியான 5,000 மீட்டர் ஓட்டப்போட்டி செப்.28 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. நிச்சயமாக தங்கப்பதக்கத்தை வெல்ல முயற்சிப்பேன்” என்றார்.
Asian Games 2026: Seema kept her Asian Games trip to Japan a secret from her 78-year-old mother, who worries whenever she travels. The gamble paid off as the 25-year-old won a surprise bronze in the women's 10,000m in Nagoya.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.