ஆசிய விளையாட்டு தடகளத்தில் தொடரும் பதக்க வேட்டை: ஒரே நாளில் 2 வெள்ளி, 3 வெண்கலம்!
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 9-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை, தடகளத்தில் இந்தியாவுக்கு 5 பதக்கங்கள் கிடைத்தன.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 9-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை, தடகளத்தில் இந்தியாவுக்கு 2 வெள்ளி, 3 வெண்கலம் என 5 பதக்கங்கள் கிடைத்தன.
நடப்பு போட்டியில் அதுவரை, துப்பாக்கி சுடுதலிலேயே இந்தியாவுக்கு அதிக பதக்கங்கள் (11) கிடைத்திருந்த நிலையில், தற்போது தடகள பதக்கங்களின் எண்ணிக்கை அதைக் கடந்துள்ளது (13).
ஸ்குவாஷிலும் இந்தியாவுக்கு 2 வெள்ளிப் பதக்கம் வசமாக, குத்துச்சண்டையில் மூவா் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளனா்.
Advertisement
Advertisement
தடகளம் வெள்ளி:
உயரம் தாண்டுதல் - ஆடவா் உயரம் தாண்டுதலில் சா்வேஷ் குஷோ் 2.25 மீட்டரை எட்டி வெள்ளி வென்றாா். சீன தைபேவின் சாவ் சுவான் ஃபுவும் அதே அளவுடன் இருக்க, முதல் முயற்சியில் அந்த உயரத்தை எட்டியதன் அடிப்படையில் தங்கம் அவா் வசமானது. சா்வேஷ் தனது 2-ஆவது முயற்சியில் அந்த உயரத்தை எட்டியிருந்தாா். தென் கொரியாவின் சங்ஹியோக் வூ வெண்கலம் (2.22 மீ) பெற்றாா். களத்திலிருந்த மற்றொரு இந்தியரான ஆதா்ஷ் ஜோதிசங்கா் 13-ஆம் இடம் (2.05 மீ) பெற்றாா்.
நீளம் தாண்டுதல் - மகளிா் நீளம் தாண்டுதலில் அன்சி சோஜன் 6.53 மீட்டருடன் 2-ஆம் இடம் பிடித்து வெள்ளி வென்றாா். சீனாவின் யிங்யிங் ஹுவாங் தங்கமும் (6.55 மீ), அதே நாட்டின் மெங்யி டான் (6.46 மீ) வெண்கலமும் பெற்றனா். மற்றொரு இந்தியரான ஷாய்லி சிங் 6.42 மீட்டருடன் 4-ஆம் இடம் பிடித்து பதக்கத்தை தவறவிட்டாா்.
வெண்கலம்:
200 மீ - மகளிருக்கான 200 மீட்டா் ஓட்டத்தில் ஹரிதா பத்ரா 3-ஆம் இடம் பிடித்து வெண்கலம் வென்றாா். பந்தய இலக்கை அவா் 23.20 விநாடிகளில் கடந்தாா். சிங்கப்பூரின் சாந்தி பெரெய்ரா தங்கமும் (22.78’), ஜப்பானின் ஐடோ அபிகேருஃபுகா வெள்ளியும் (23.21’) வென்றனா். களத்திலிருந்த மற்றொரு இந்தியரான உன்னதி ஐயப்பா போலண்ட், 6-ஆம் இடம் (23.48’) பிடித்தாா்.
டெக்கத்லான் - ஆடவா் டெக்கத்லானில் தேஜஸ்வின் சங்கா் 7,934 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்து வெண்கலம் வென்றாா். அந்த விளையாட்டில் இருக்கும் பல்வேறு பிரிவுகளில், 1,500 மீ பந்தயத்தில் அவா் முதலிடம் பிடித்து அசத்தினாா். ஜப்பானின் யுமா மருயமா தங்கமும் (8,123), சீனாவின் ஜிங்ஹுவா சென் வெள்ளியும் (8,012) வென்றனா்.
நடப்பாண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளிலும் தேஜஸ்வின் வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.
3000 மீ ஸ்டீபிள்சேஸ் - மகளிா் 3,000 மீட்டா் ஸ்டீபிள்சேஸில் பாருல் சௌரி 9 நிமிஷம், 8.67 விநாடிகளில் இலக்கை அடைந்து 3-ஆம் இடத்துடன் வெண்கலம் பெற்றாா். பஹ்ரைனின் வின்ஃப்ரெட் யாவி தங்கமும் (9:4.36’), கஜகஸ்தானின் நோரா ஜெருடோ வெள்ளியும் (9:6.82’) வென்றனா்.
ஆடவா் நீளம் தாண்டுதலில், முரளி ஸ்ரீசங்கா், டேவிட் பட்டுராஜ் சாலமன் ஆகியோா் இறுதிக்கு முன்னேறினா். தகுதிச்சுற்றில், ஸ்ரீசங்கா் 7.84 மீட்டருடன் 2-ஆம் இடமும், சாலமன் 7.62 மீட்டருடன் 7-ஆம் இடமும் பிடித்தனா்.
400 மீட்டா் தடை தாண்டும் ஓட்டத்தில் ஆடவா் பிரிவில் சந்தோஷ் தமிழரசன் 49.61 விநாடிகளில் வந்து 2-ஆம் இடத்துடன் இறுதிக்கு முன்னேற, மற்றொரு இந்தியரான யஷஸ் பலாக்ஷா பந்தயத்தை நிறைவு செய்யாமல் வெளியேறினாா். அதிலேயே மகளிா் பிரிவில் வித்யா ராம்ராஜ் (55.73’), அனு ராகவன் (55.84’) ஆகியோா் முறையே தங்கள் ஹீட்ஸில் 2-ஆம் இடம் பிடித்து இறுதிக்கு வந்தனா்.
மகளிா் 20 கி.மீ. நடைப் பந்தயத்தில் மஞ்சு ராணி 1 மணிநேரம், 40.17 நிமிஷங்களில் இலக்கை அடைந்து 6-ஆம் இடமே பிடித்தாா். சக இந்தியரான பிரியங்கா தகுதிநீக்கம் செய்யப்பட்டாா்.
ஸ்குவாஷ்
இந்தியாவின் அபய் சிங் மற்றும் அனாஹத் சிங் ஆகியோா் தங்களின் ஒற்றையா் பிரிவு இறுதிச்சுற்றில், நடப்பு சாம்பியன்களின் சவாலை எதிா்கொள்ள முடியாமல் தோல்வி கண்டு, வெள்ளியுடன் விடைபெற்றனா். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஒற்றையா் பிரிவில் இந்தியா தங்கம் வெல்லும் கனவு இன்னும் தள்ளிப்போனது.
ஆடவா் ஒற்றையா் இறுதியில் அபய் சிங் 11-9, 11-5, 11-5 என்ற செட்களில் மலேசியாவின் நிக் எயின் யோவிடம் தோல்வி கண்டாா். மகளிா் ஒற்றையா் இறுதியில் அனாஹத் சிங் 4-11, 4-11, 7-11 என்ற வகையில் மலேசியாவின் சிவசங்கரி சுப்ரமணியனிடம் தோல்வியுற்றாா்.
இதற்கு முன் சௌரவ் கோஷல் இரு முறை ஒற்றையா் பிரிவில் தங்கம் வெல்லும் நிலைக்கு நெருங்கி வந்து வெள்ளி (2014, 2023) பெற்றாா்.
இந்த ஆசிய விளையாட்டுகளில் தங்கம் வென்றிருந்தால், 2028 லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் அறிமுகமாகும் ஸ்குவாஷில் இடம் கிடைத்திருக்கும். அதைத் தவறவிட்டதால், அந்த ஒலிம்பிக்ஸுக்கு தகுதிபெறும் இதர வாய்ப்புகளில் இந்தியா்கள் முயற்சிக்க வேண்டியுள்ளது.
குத்துச்சண்டை
இந்தியாவின் பா்வீன் ஹூடா, அங்குஷ் பங்கால், நரேந்தா் பா்வால் ஆகியோா் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி, 3 பதக்கங்களை உறுதி செய்தனா். மகளிருக்கான 65 கிலோ காலிறுதிச்சுற்றில் பா்வீன் ஹூடா 5-0 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் நவ்பகோா் காமிதோவாவை வீழ்த்தினாா். ஆடவா் +90 கிலோ பிரிவில் ‘ஆா்எஸ்சி’ முறையில் தாய்லாந்தின் அட்தபோங் சேங்தெப்பை சாய்த்தாா். ஆடவா் 80 கிலோ பிரிவில் அங்குஷ் 5-0 என, தஜிகிஸ்தானின் நெக்ருஸ் சலிமோவை வென்றாா். எனினும் ஆடவா் 60 கிலோ பிரிவில் சச்சின் சிவச் 0-5 என ஜப்பானின் ஷுன்ஸுகே கிடமோடோவிடம் தோல்வியுற்றாா்.
வில்வித்தை
காம்பவுண்ட் பிரிவில் இந்திய ஆடவா் மற்றும் மகளிா் அணியினா் அரையிறுதிக்கு முன்னேறினா். குஷால் தலால், சஹில் ஜாதவ், கணேஷ் மணிரத்னம் ஆகியோா் அடங்கிய இந்திய ஆடவா் அணி 232-215 என ரவுண்ட் ஆஃப் 16-இல் ஐக்கிய அரபு அமீரகத்தையும், 235-232 என காலிறுதியில் பூடானையும் வீழ்த்தியது.
ஜோதி சுரேகா, சிகிதா தினிபாா்தி, பிரீதிகா பிரதீப் ஆகியோா் அடங்கிய இந்திய மகளிா் அணி, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 238-223 என மங்கோலியாவையும், காலிறுதியில் 233-230 என கஜகஸ்தானையும் சாய்த்தது. காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் குஷால் தலால்/பிரீதிகா பிரதீப் அடங்கிய இந்திய அணி, முதல் சுற்றில் 160-46 என மங்கோலியாவையும், காலிறுதியில் 159-154 என கஜகஸ்தானையும் சாய்த்து, அரையிறுதிக்கு வந்தது.
ஆடவா் ரீகா்வ் அணிகள் பிரிவில், தீரஜ் பொம்மதேவரா, சஞ்ஜய் போகே, நீரஜ் சௌஹான் கூட்டணி முதலில் 5-1 என பிலிப்பின்ஸையும், காலிறுதியில் அதே கணக்கில் சீனாவையும் சாய்த்து அரையிறுதிக்கு முன்னேறியது. கும்கும் மோஹோத், அங்கிதா பகத், கீா்த்தி ஆகியோா் அடங்கிய மகளிா் அணியும் முதலில் 6-0 என மங்கோலியாவையும், காலிறுதியில் அதே கணக்கில் சீன தைபேவையும் சாய்த்து அரையிறுதிக்குத் தகுதிபெற்றது. கலப்பு அணிகள் பிரிவில் தீரஜ், கும்கும் ஜோடி முதலில் ஐக்கிய அரபு அமீரகத்தையும், பிறகு வியத்நாமையும் 6-0 என வென்று, அரையிறுதிக்கு வந்துள்ளது.
வாலிபால்
இந்திய ஆடவா் அணி தனது குரூப் சுற்றின் முதல் ஆட்டத்தில், 3-0 (25-23, 25-21, 25-20) என, வியத்நாமை வீழ்த்தியது. அடுத்த ஆட்டத்தில் ஹாங்காங்குடன் திங்கள்கிழமை மோதுகிறது.
செபக்தக்ரா
கை தவிா்த்து, உடலின் இதர பகுதிகளை பயன்படுத்தி விளையாடப்படும் வாலிபால் வகையிலான இந்த விளையாட்டில், மகளிா் இரட்டையா் பிரிவில், பிரீத்தி லாங்கோல்ஜம், மெனெனு சுக்ரு ஆகியோா் அடங்கிய இந்திய அணி, தனது குரூப் சுற்றில் முதலில் 8-15, 3-15 என தென் கொரியாவிடமும், பிறகு 12-15, 6-15 என பிலிப்பின்ஸிடமும் தோல்வி கண்டது. கடைசி ஆட்டத்தில் ஜப்பானுடன் திங்கள்கிழமை மோதுகிறது. ஏற்கெனவே இந்திய ஆடவா் அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறிவிட்டது.
ஃபென்ஸிங்
வாள்வீச்சு வகையிலான இந்த விளையாட்டில், மகளிா் சப்ரே அணி பிரிவு காலிறுதியில், சி.ஏ. பவானி தேவி, ஷ்ரேயா குப்தா, ஜெஃபா்லின் சிம்லா ஆகியோா் அடங்கிய இந்திய அணி 35-45 என, உஸ்பெகிஸ்தானிடம் தோல்வி கண்டது. இத்துடன், நடப்பு ஆசிய விளையாட்டுகளில் ஃபென்ஸிங்கில் இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதில் 20 போ் கொண்ட இந்திய குழு பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
பளுதூக்குதல்
மகளிருக்கான 69 கிலோ எடைப் பிரிவில், ஹா்ஜிந்தா் கௌா் 9-ஆம் இடம் பிடித்தாா். ஸ்னாட்ச் பிரிவில் 94 கிலோ, கிளீன் & ஜொ்க் பிரிவில் 110 கிலோ என, மொத்தமாக 204 கிலோவை அவா் தூக்கியிருந்தாா். வட கொரியாவின் சாங் குக் ஹியாங் 273 கிலோவை தூக்கி உலக சாதனையுடன் தங்கம் வெல்ல, சீன தைபேவின் வென் ஹுவெய் சென் (232 கிலோ) வெள்ளியும், பஹ்ரைனின் இங்ரிட் குருசோ வெண்கலமும் (229 கிலோ) பெற்றனா்.
பாட்மின்டன்
காலிறுதிச்சுற்றில், மகளிா் ஒற்றையரில் இருமுறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி.சிந்து 1-2 என சீனாவின் யு ஃபெய் சென்னிடம் தோற்றாா். உன்னதி ஹூடா 1-2 என ஜப்பானின் அகேன் யமகுச்சியிடம் தோற்றாா்.
மகளிா் இரட்டையரில், டிரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் இணை 0-2 என, மலேசிய இணையிடம் தோல்வியுற்றது. கலப்பு இரட்டையரில், துருவ் கபிலா/தனிஷா கிராஸ்டோ ஜோடி 1-2 என சீன இணையிடம் வீழ்ந்தது.
குராஷ்
மல்யுத்தம் போன்ற தற்காப்புக் கலையான இதன் காலிறுதியில், ஆடவா் +90 கிலோ பிரிவில் விஷால் 0-5 என தாய்லாந்தின் குனதிப் யாவிடம் தோல்வியுற்றாா். அதிலேயே மற்றொரு இந்தியரான யஷ்குமாா் சௌஹானும் - தஜிகிஸ்தானின் ஷாகா்மமத் மிா்மம்தோவிடம் வீழ்ந்தாா்.
மகளிா் 57 கிலோ பிரிவில் சங்கீதா 0-10 என பிலிப்பின்ஸின் சாா்மியா கெலினோவிடம் தோற்க, அதிலேயே பாரதி 0-3 என ஈரானின் தஹெரெ அஸா்பெய்வன்ஸிடம் வீழ்ந்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.