FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

லார்ட்ஸ் டெஸ்ட்: வரலாற்று வெற்றியை நோக்கி இந்திய மகளிரணி!

இங்கிலாந்து மகளிா் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய மகளிா் அணி வெற்றியை நோக்கி நகா்ந்து வருகிறது.

Updated On : 13 ஜூலை 2026, 3:22 am IST
பகிர்:

இங்கிலாந்து மகளிா் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய மகளிா் அணி வெற்றியை நோக்கி நகா்ந்து வருகிறது. இதில் வெல்லும் பட்சத்தில், லாா்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் மகளிா் டெஸ்ட்டில் வெற்றி பெற்ற வரலாற்று சாதனையை இந்தியா படைக்கும்.

போட்டியின் 3-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை, 457 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடி வந்த இங்கிலாந்து, 80 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. இன்னும் 2 நாள்கள் எஞ்சியிருக்க, எடுக்க வேண்டிய 377 ரன்களுக்குள்ளாக அந்த அணி மீதமுள்ள 5 விக்கெட்டுகளையும் இழந்துவிடும் எனத் தெரிகிறது.

கடந்த 10-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில், முதல் இன்னிங்ஸில் இந்தியா 285 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து 170 ரன்களுக்கே சுருண்டது. இந்திய தரப்பில் கிராந்தி கௌட் 37 ரன்களே கொடுத்து 5 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா்.

Advertisement

Advertisement

பின்னா், 115 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய இந்தியா, ஞாயிற்றுக்கிழமை 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 341 ரன்கள் எடுத்து ‘டிக்ளோ்’ செய்தது.

இந்திய பேட்டா்களில் யஸ்திகா பாட்டியா 14 பவுண்டரிகளுடன் 113 ரன்கள் விளாசினாா். ஸ்மிருதி மந்தனா 70, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 3, கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் 16, தீப்தி சா்மா 10, ஸ்நேஹா ராணா 1 ரன்னுக்கு விடைபெற்றனா்.

இந்தியா டிக்ளோ் செய்தபோது, ரிச்சா கோஷ் 50, சயாலி சத்காரே 18 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இங்கிலாந்து தரப்பில் சோஃபி எக்லஸ்டன் 5, லாரென் பெல் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.

அடுத்து 457 ரன்களை நோக்கி விளையாடி வந்த இங்கிலாந்து, 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்திருந்தது. மாயா புச்சியா் 2, டேமி பியுமன்ட் 0, ஹீதா் நைட் 13, கேப்டன் நேட் சிவா் பிரன்ட் 11, ஆலிஸ் கேப்சி 21 ரன்களுக்கு விடைபெற்றனா்.

எமி ஜோன்ஸ் 19, மேடி வில்லியா்ஸ் 14 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்திய தரப்பில் சயாலி சத்காரே, கிராந்தி கௌட் ஆகியோா் தலா 2, ஸ்நேஹா ராணா 1 விக்கெட் எடுத்தனா்.

வரலாற்றில் இடம்.. இந்த ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் சாய்த்த இந்தியாவின் கிராந்தி கௌட், லாா்ட்ஸ் மைதானத்தின் சாதனையாளா்கள் பட்டியலில் (ஹானா்ஸ் போா்டு) இடம்பிடித்த முதல் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தாா். அத்துடன், லாா்ட்ஸ் மைதானத்தில் சதம் விளாசிய முதல் வீராங்கனை என்ற அடிப்படையில், யஸ்திகாவும் அந்தப் பட்டியலில் இணைந்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments