திணறடித்த ஜப்பான்... பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா ‘த்ரில்’ வெற்றி!
ஜப்பானுக்கு எதிரான ஒரேயொரு டி20 போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றதைப் பற்றி...
ஜப்பானுக்கு எதிரான ஒரேயொரு டி20 போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் நகோயாவில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்றுள்ள இந்திய அணி, இந்தியா - ஜப்பான் இடையேயான 75 ஆண்டுகால நட்பைப் போற்றும் வகையில் ஒரேயொரு டி20 போட்டியில் விளையாடியது.
இந்தப் போட்டி காண்டோவில் உள்ள சானோ சர்வதேச கிரிக்கெட் திடலில் இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்குத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மழை பெய்ததால் போட்டி தாமதமானது.
Advertisement
Advertisement
காலை 11.45 வரை மழை தொடர்ந்ததால், ஆட்டத்தின் 20 ஓவர்கள் 5 ஓவர்களாக குறைப்பட்டன. அதைத்தொடர்ந்து டாஸை வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்தப் போட்டியிலும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
அதிரடிக்குப் பெயர் பெற்ற இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் 5 ஓவர்களில் ஜப்பானின் பந்து வீச்சைச் சிதறடிப்பார்கள் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஜப்பான் பந்து வீச்சாளர்கள் அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்தனர்.
முதல் ஓவரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் நிதானமாக ஆடி 7 ரன்கள் எடுக்க, ஆப்கனுக்கு எதிரான கடைசிப் போட்டியில் 30 பந்துகளில் சதம் விளாசிய அதிரடி வீரர் அபிஷேக் சர்மா 2-ஆவது ஓவரின் முதல் பந்திலேயே ரன் ஏதுமின்றி கோல்டன் டக் ஆவுட்டாகி ஏமாற்றத்துடன் வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து சஞ்சு சாம்சன் 9 ரன்களிலும், இஷான் கிஷன் 3 ரன்களிலும் வெளியேற நிதானமாக ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் 16 ரன்கள் எடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 5 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 32 ரன்கள் மட்டுமே எடுத்தது. சார்லி ஹாரா 2 விக்கெட்டுகளும், இப்ராஹிம் தகாஹாஷி மற்றும் பெஞ்சமின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர், 33 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜப்பானிய வீரர்களில் பேட்டிங்கிலும் அசத்தினர். தொடக்க வீரரும் கேப்டனுமான கெண்டல் கடோவாக்கி 12 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்ப, பெஞ்சமின் 9 ரன்களும், இப்ராஹிம் 4 ரன்களும், லாச்லான் யமமோடோ ஒரு ரன்களும் எடுத்தனர்.
கடைசி ஓவரின் ஜப்பானின் வெற்றிக்கு 8 ரன்கள் தேவையாக இருந்த நிலையில், வாஷிங்டன் சுந்தர் பந்து வீசினார். அசத்தலாகப் பந்து வீசிய அவர் ஒரு வைட் உள்பட 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணியை 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். இந்திய அணித் தரப்பில் சுந்தர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பரபரப்பான ஆட்டத்தில் கிடைத்த வெற்றி இந்திய அணிக்கு சர்வதேச போட்டிகளில் 200-ஆவது வெற்றியாகவும் பதிவானது.
Seasoned spinner Axar Patel choked the inexperienced Japanese batters just in time as India survived a scare to win the rain-curtailed one-off T20 International between the two mis-matched sides by a mere two runs here on Tuesday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.