நாக் அவுட் சுற்றில் ஸ்பெயின்
முன்னாள் சாம்பியன் ஸ்பெயின்-மொராக்கோ அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 2-2 என டிராவில் முடிவடைந்தது.
முன்னாள் சாம்பியன் ஸ்பெயின்-மொராக்கோ அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 2-2 என டிராவில் முடிவடைந்தது. குரூப் பி பிரிவைச் சேர்ந்த ஸ்பெயின்-மொராக்கோ அணிகளுக்கு இடையிலான ஆட்டம் திங்கள்கிழமை நள்ளிரவு காலின்கிராடில் நடைபெற்றது.
இப்பிரிவில் 4 புள்ளிகளுடன் உள்ள ஸ்பெயின் ஏற்கெனவே ஈரானை வென்றது. போர்ச்சுகலுடன் டிரா செய்தது. நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் மொராக்கோவை கண்டிப்பாக வென்றாக வேண்டிய நிலையில் ஸ்பெயின் உள்ளது. மொராக்கோ ஏற்கெனவே இந்த உலகக் கோப்பையில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் எந்த நிர்ப்பந்தமும் இல்லாமல் ஸ்பெயினை எதிர்கொண்டது.
ஆட்டம் தொடங்கிய 14-வது நிமிடத்தில் ஸ்பெயின வீரர் ரமோஸ் கடத்தி அனுப்ப முயன்ற பந்தை மடக்கிய மொராக்கோ முன்கள வீரர் காலித் பெளடெய்ப் அற்புதமாக கோலடித்தார். இதன் மூலம் மொராக்கோ 1-0 என முன்னிலை பெற்றது.
19-ஆவது நிமிடத்தில் இனியெஸ்டா கடத்தி அனுப்பிய பந்தை முன்கள வீரர் இஸ்கோ கோலாக்கினார். இதனால் முதல் பாதி ஆட்ட நிறைவில் 1-1 என சமநிலை ஏற்பட்டது. 81-வது நிமிடத்தில் மொராக்கோ வீரர் பஜ்ர் அற்புதமாக அனுப்பிய பந்தை மறித்து யூசுப் என் நெய்ரி கோலாக்கினார். இதன் மூலம் மொராக்கோ 2-1 என முன்னிலை பெற்றது.
எனினும் 90-ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் கார்வஜல் அனுப்பிய பந்தை பிசகாமல் கோலாக்கினார் இயாகோ அஸ்பாஸ்.
இதனால் 2-2 என டிராவில் முடிவடைந்தது. இந்த டிராவின் மூலம் ஸ்பெயினுக்கு 1 புள்ளி கிடைத்தது. இதனால் 5 புள்ளிகளுடன் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது.
குழப்பமான சூழ்நிலையில் குரூப் ஈ'
பிரேஸில், ஸ்விட்சர்லாந்து, செர்பியா, கோஸ்டா ரிகா அணிகள் இடம் பெற்றுள்ள குரூப் ஈ பிரிவில் குழப்பமான நிலை காணப்படுகிறது.
பிரேஸில், ஸ்விட்சர்லாந்து தலா 4 புள்ளிகளுடனும், செர்பியா 3 புள்ளிகளுடனும் உள்ளன. கோஸ்டா ரிகா போட்டியில் இருந்து வெளியேறி விட்டது. இந்நிலையில் நோவாகிராடில் புதன்கிழமை இரவு நடக்கும் ஆட்டத்தில் கோஸ்டா ரிகா-ஸ்விட்சர்லாந்து மோதுகின்றன. இதில் கண்டிப்பாக வென்றால் மட்டுமே நாக் அவுட் சுற்றுக்கு சுவிட்சர்லாந்து அணி முன்னேறும். கோஸ்டா ரிகா அணிக்கு இந்த ஆட்டம் சம்பிரதாயமான ஆட்டம் மட்டுமே ஆகும்.
பிரேஸில்-செர்பியா வாழ்வா சாவா மோதல்
இதே பிரிவில் இடம் பெற்றுள்ள 5 முறை சாம்பியன் பிரேஸில்-செர்பியாவுடன் புதன்கிழமை இரவு மாஸ்கோவில் நடைபெறும் ஆட்டத்தில் மோதுகிறது. இரு அணிகளுக்குமே இது வாழ்வா சாவா ஆட்டமாக உள்ளது. பிரேஸில் வென்றால் 7 புள்ளிகளுடனும், செர்பியா வென்றால் 6 புள்ளிகளுடனும் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும் நிலை உள்ளது. சுவிட்சர்லாந்துடன் டிரா, கோஸ்டா ரிகாவுடன் வெற்றி என பிரேஸில் அணி செர்பியாவை வீழ்த்த முனைப்பு காட்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.