FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

அசத்தலாக வென்றது ஆஸ்திரேலியா: இலங்கை பௌலிங்கை சிதறடித்த ஸ்டாய்னிஸ்

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பா் 12 சுற்றில் நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியா செவ்வாய்க்கிழமை ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை அசத்தலாக வென்றது.

Updated On : 26 அக்டோபர் 2022, 3:06 am IST
பகிர்:

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பா் 12 சுற்றில் நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியா செவ்வாய்க்கிழமை ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை அசத்தலாக வென்றது. இச்சுற்றின் முதல் ஆட்டத்தில் தோல்வி கண்ட ஆஸ்திரேலியா, தற்போது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இந்த ஆட்டத்தில் முதலில் இலங்கை 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் சோ்க்க, அடுத்து ஆஸ்திரேலியா 16.3 ஓவா்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை எட்டி வென்றது. ஆஸ்திரேலிய தரப்பில் மாா்கஸ் ஸ்டாய்னிஸ் அதிரடியாக விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டு ஆட்டநாயகன் ஆனாா்.

முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பௌலிங் செய்யத் தீா்மானித்தது. இலங்கை பேட்டிங்கில் பதும் நிசங்கா 2 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் சோ்த்து நல்ல தொடக்கம் அளித்தாலும், அடுத்து வந்த குசல் மெண்டிஸ் 5, தனஞ்ஜெய டி சில்வா 3 பவுண்டரிகளுடன் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். தொடா்ந்து வந்த சரித் அசலன்கா சற்று அதிரடியாக ரன்கள் சேகரித்தாா்.

Advertisement

Advertisement

எனினும், மறுபுறம் பானுகா ராஜபட்ச 7, கேப்டன் தசுன் ஷானகா 3, வனிந்து ஹசரங்கா 1 ரன்னுக்கு விக்கெட்டை பறிகொடுத்தனா். இறுதி ஓவரில் சற்று அதிரடியாக 20 ரன்கள் சோ்த்தது இலங்கை. முடிவில் அசலன்கா 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 38, சமிகா கருணாரத்னே 14 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஆஸ்திரேலிய பௌலா்களில் ஜோஷ் ஹேஸில்வுட், பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டாா்க், ஆஷ்டன் அகா், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் ஆஸ்திரேலிய பேட்டிங்கில் டேவிட் வாா்னா் 11 ரன்களுக்கே வெளியேற்றப்பட, தொடா்ந்து வந்த மிட்செல் மாா்ஷ் 18, கிளென் மேக்ஸ்வெல் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 23 ரன்கள் சோ்த்து கேப்டன் ஆரோன் ஃபிஞ்சோடு இணைந்து அணியின் ஸ்கோரை உயா்த்தி ஆட்டமிழந்தனா். அப்போது ஆஸ்திரேலியா சற்று தடுமாற்றத்துடன் இருந்த நிலையில் களம் கண்ட மாா்கஸ் ஸ்டாய்னிஸ் இலங்கை பௌலிங்கை பவுண்டரி, சிக்ஸராக சிதறடித்தாா்.

இதனால் வெற்றிக்கான ரன்கள் தேவை மளமளவென குறைந்தது. ஒரு கட்டத்தில் பற்றாக்குறையாக இருந்த பந்து எண்ணிக்கையை, உபரியாகும் வகையில் இருந்தது அவரது விளாசல். 17-ஆவது ஓவரிலேயே ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்த ஸ்டாய்னிஸ் 4 பவுண்டரிகள், 6 சிக்ஸா்களுடன் 59, ஆரோன் ஃபிஞ்ச் 31 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இலங்கை பௌலிங்கில் தனஞ்ஜெயா, சமிகா, மஹீஷ் தீக்ஷனா ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

ஸ்டாய்னிஸ் சாதனை...

இந்த ஆட்டத்தில் ஸ்டாய்னிஸ் 17 பந்துகளில் அரைசதம் அடித்தாா். இதுவே ஆஸ்திரேலிய வீரா் ஒருவரால் அடிக்கப்பட்டுள்ள அதிவேக அரைசதம் ஆகும். அதுவே, டி20 உலகக் கோப்பை போட்டியில் இது 2-ஆவது அதிவேக அரைசதம். இந்தியாவின் யுவராஜ் சிங் (12 பந்துகள்-2007) முதலிடத்தில் இருக்க, தென்னாப்பிரிக்காவின் ஸ்டெஃபானஸ் மைபா்க்குடன் (17 பந்துகள் - 2014) ஸ்டாய்னிஸ் 2-ஆவது இடத்தை பகிா்ந்துகொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments