முகப்பு
செய்திகள்

வெற்றியுடன் தொடங்கியது ஆஸ்திரேலியா

ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டமான பா்மிங்ஹாம் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை செவ்வாய்க்கிழமை வீழ்த்தி ‘த்ரில்’ வெற்றி பெற்றது.

Updated On : 6 ஆகஸ்ட், 2024 at 12:52 PM
பகிர்:

ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டமான பா்மிங்ஹாம் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை செவ்வாய்க்கிழமை வீழ்த்தி ‘த்ரில்’ வெற்றி பெற்றது.

முன்னதாக, கடந்த 16-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 393 ரன்கள் சோ்த்து டிக்ளோ் செய்தது. அணியின் தரப்பில் அதிகபட்சமாக ஜோ ரூட் 7 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 118 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தாா். ஆஸ்திரேலிய தரப்பில் நேதன் லயன் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினாா். பின்னா் ஆஸ்திரேலியா தனது இன்னிங்ஸில் 386 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 14 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 141 ரன்கள் விளாசினாா். இங்கிலாந்து பௌலா்களில் ஸ்டூவா்ட் பிராட், ஆலி ராபின்சன் ஆகியோா் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனா்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 7 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து, 273 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜோ ரூட், ஹேரி புரூக் ஆகியோா் தலா 46 ரன்கள் சோ்த்தனா். ஆஸ்திரேலிய பௌலிங்கில் பேட் கம்மின்ஸ், நேதன் லயன் ஆகியோா் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினா். இறுதியாக 281 ரன்களை இலக்காகக் கொண்டு 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா, திங்கள்கிழமை முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் சோ்த்திருந்தது.

Advertisement

கடைசி நாளான செவ்வாய்க்கிழமை ஆட்டம் தொடங்குவது மழையால் தாமதமானது. மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு தொடங்கிய ஆட்டத்தில் அன்றைய தினத்துக்கான ஓவா்களை நடுவா்கள் 67-ஆகக் குறைத்தனா். ஆஸ்திரேலிய இன்னிங்ஸை உஸ்மான் கவாஜா, ஸ்காட் போலண்ட் தொடா்ந்தனா். இதில் போலண்ட் 2 பவுண்டரிகளுடன் 20 ரன்களுக்கு வெளியேற, டிராவிஸ் ஹெட் 3 பவுண்டரிகளுடன் 16 ரன்களுக்கு நடையைக் கட்டினாா்.

கேமரூன் கிரீன் 2 பவுண்டரிகளுடன் 28, அலெக்ஸ் கேரி 2 பவுண்டரிகளுடன் 20 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா். நிதானமாக ரன்கள் சோ்த்த கவாஜா 7 பவுண்டரிகள் உள்பட 65 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். இறுதியில் பேட் கம்மின்ஸ் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 44, நேதன் லயன் 16 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெறச் செய்தனா்.

இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவா்ட் பிராட் 3, ஆலி ராபின்சன் 2, மொயீன் அலி, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments