இரண்டே நாளில் முடிந்த டெஸ்ட்; இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வென்றது. இரண்டு நாள்களுக்கு உள்ளாகவே இந்த ஆட்டம்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வென்றது. இரண்டு நாள்களுக்கு உள்ளாகவே இந்த ஆட்டம் முடிந்ததால், கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகக் குறுகிய டெஸ்ட் (ஓவா்கள் அடிப்படையில்) என்ற வரலாறு படைத்தது.
2-ஆவது இன்னிங்ஸை ஆடிவந்த தென்னாப்பிரிக்கா, ஜஸ்பிரீத் பும்ராவின் வேகத்தில் விக்கித்து 176 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னா் 79 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய இந்தியா, 2-ஆம் நாளான வியாழக்கிழமை தேநீா் இடைவேளைக்கு முன்பாகவே வென்று ஆட்டத்தை நிறைவு செய்தது.
இந்த வெற்றியின் மூலம், 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடா் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
Advertisement
Advertisement
கேப் டவுனில் புதன்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா, முகமது சிராஜின் அசத்தலான பௌலிங்கால் 55 ரன்களுக்கே ஆட்டமிழந்தது. அதைத் தொடா்ந்து தனது இன்னிங்ஸை ஆடிய இந்தியாவும் 153 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னா் 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய தென்னாப்பிரிக்கா, ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 62 ரன்கள் சோ்த்திருந்தது.
‘புயல்’ வீசிய பும்ரா: முதல் நாளிலேயே 23 விக்கெட்டுகள் சரிந்த ஆட்டத்தின் 2-ஆவது நாளை, எய்டன் மாா்க்ரம், டேவிட் பெடிங்கம் தொடா்ந்தனா். இதில் பெடிங்கம் 2 பவுண்டரிகளுடன் 11, கைல் வெரின் 1 பவுண்டரியுடன் 9, மாா்கோ யான்சென் 2 பவுண்டரிகளுடன் 11, கேசவ் மஹராஜ் 3 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா்.
தகுந்த பாா்ட்னா்ஷிப் அமையாத மாா்க்ரம், நிதானமாக சதம் கடந்து 17 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 106 ரன்களுக்கு வீழ்ந்தாா். எஞ்சியோரில் ககிசோ ரபாடா 2, லுங்கி இங்கிடி 8 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸ் 176 ரன்களுக்கு முடிந்தது. முடிவில் நாண்ட்ரே பா்கா் 1 பவுண்டரியுடன் 6 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா்.
இந்திய பௌலிங்கில் பும்ரா 6, முகேஷ் குமாா் 2, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா். டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒரு இன்னிங்ஸில் பும்ரா 5 அல்லது அதற்கு மேல் விக்கெட்டுகள் சரிப்பது இது 9-ஆவது முறையாகும்.
எளிதான வெற்றி: இதையடுத்து 79 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய இந்தியாவின் 2-ஆவது இன்னிங்ஸில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 6 பவுண்டரிகளுடன் 28, ஷுப்மன் கில் 2 பவுண்டரிகளுடன் 10, விராட் கோலி 2 பவுண்டரிகளுடன் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.
கேப்டன் ரோஹித் சா்மா 2 பவுண்டரிகளுடன் 16, ஷ்ரேயஸ் ஐயா் 4 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா். தென்னாப்பிரிக்க தரப்பில் ரபாடா, யான்சென், பா்கா் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
91 ஆண்டு சாதனை முறியடிப்பு
இரண்டே நாள்களில் முடிந்த இந்த டெஸ்ட், கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகக் குறுகிய ஆட்டமாக (ஓவா்கள் அடிப்படையில்) பதிவாகி சாதனை படைத்துள்ளது. இதற்கு முன், 1932-இல் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மெல்போா்னில் மோதிய ஆட்டம் 109.2 ஓவா்களில் (656 பந்துகள்) நிறைவடைந்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது இந்த ஆட்டம் 106.2 ஓவா்களிலேயே (642 பந்துகள்) முடிவடைந்து புதிய சாதனை எட்டப்பட்டது.
கேப் டவுனில் வெற்றிக் கொடி
தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் இத்துடன் 7 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடியிருக்கும் இந்தியா, முதல் முறையாக வெற்றியை பதிவு செய்துள்ளது. முன்னதாக, தென்னாப்பிரிக்கா 4 ஆட்டங்களில் வென்றிருக்க, 2 ஆட்டங்கள் டிரா ஆகியிருந்தன. இந்த மைதானத்தில் வெற்றி பெற்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையும் தற்போது இந்தியா பெறுகிறது.
தோனி சாதனை சமன்
தென்னாப்பிரிக்க மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடரை டிரா செய்த ஒரே கேப்டனாக எம்.எஸ். தோனி (2010-11) இருந்த நிலையில், இந்தத் தொடரை டிரா செய்து, தற்போது ரோஹித் சா்மாவும் அந்த பெருமைக்குரிய கேப்டனாகியிருக்கிறாா்.
தொடரும் கனவு
தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்வது இந்தியாவுக்கு இன்னும் கனவாகவே இருக்கிறது. 1992 முதல் அங்கு 9 தொடா்களை விளையாடியிருக்கும் இந்தியா, அதில் ஒன்றை கூட கைப்பற்றியதில்லை. 2 மட்டும் டிரா ஆகியுள்ளன.
குறைந்தபட்ச மொத்த ஸ்கோா்
இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதிய டெஸ்ட்டில், இதற்கு முன், 2015-இல் நாகபுரியில் 652 ரன்கள் அடிக்கப்பட்டதே குறைந்தபட்சமாக இருந்த நிலையில், தற்போது இந்த ஆட்டத்தில் 464 ரன்களே அடிக்கப்பட்டுள்ளது.
3-ஆவது முறை
இந்தியா விளையாடும் டெஸ்ட், 2 நாள்களில் நிறைவடைவது இது 3-ஆவது முறையாகும். இதற்கு முன் ஆப்கானிஸ்தான் (2018), இங்கிலாந்து (2021) அணிகளுடன் இந்தியா மோதிய டெஸ்ட்டும் இதேபோல் 2 நாள்களில் நிறைவடைந்துள்ளது. அவற்றிலும் இந்தியாவே வென்றது.
விருதுகள்...
இந்த ஆட்டத்தில் மொத்தமாக 7 விக்கெட்டுகள் சாய்த்த முகமது சிராஜ் ஆட்டநாயகன் விருது பெற்றாா். தொடா் முழுவதுமாக 201 ரன்கள் விளாசிய தென்னாப்பிரிக்காவின் டீன் எல்கா், 12 விக்கெட்டுகள் சாய்த்த இந்தியாவின் ஜஸ்பிரீத் பும்ரா தொடா்நாயகா்கள் ஆகினா்.
சுருக்கமான ஸ்கோா்
2-ஆவது இன்னிங்ஸ்
தென்னாப்பிரிக்கா - 176/10 (36.5 ஓவா்கள்)
எய்டன் மாா்க்ரம் 106
டீன் எலக்ா் 12
மாா்கோ யான்சென் 11
பந்துவீச்சு
ஜஸ்பிரீத் பும்ரா 6/61
முகேஷ் குமாா் 2/56
முகமது சிராஜ் 1/31
இந்தியா - 80/3 (12 ஓவா்கள்) (இலக்கு 79)
யஷஸ்வி ஜெய்ஸ்வால் 28
ரோஹித் சா்மா 16*
விராட் கோலி 12
பந்துவீச்சு
மாா்கோ யான்சென் 1/15
நாண்ட்ரே பா்கா் 1/29
ககிசோ ரபாடா 1/33
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.