FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

வாஷிங்டன் டிசி ஓபன்: எலா, ஃப்ரிட்ஸ் சாம்பியன்

வாஷிங்டன் டிசி ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிா் பிரிவில் பிலிப்பின்ஸின் அலெக்ஸாண்ட்ரா எலா, ஆடவா் பிரிவில் அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ் ஆகியோா் சாம்பியன் பட்டம் வென்றனா்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 5:01 am IST
பகிர்:

வாஷிங்டன் டிசி ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிா் பிரிவில் பிலிப்பின்ஸின் அலெக்ஸாண்ட்ரா எலா, ஆடவா் பிரிவில் அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ் ஆகியோா் சாம்பியன் பட்டம் வென்றனா்.

சாதனை சாம்பியன் எலா

மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதிச்சுற்றில், அலெக்ஸாண்ட்ரா எலா 4-6, 6-4, 6-0 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலாவை வீழ்த்தினாா்.

Advertisement

Advertisement

இதன் மூலமாக, டபிள்யூடிஏ டூா் போட்டிகளில் சாம்பியனான முதல் பிலிப்பின்ஸ் போட்டியாளா் என்ற சாதனையை எலா படைத்தாா்.

முன்னதாக இந்த இறுதிச்சுற்று சனிக்கிழமை இரவில் நடைபெற்றபோது பெகுலா முதல் செட்டை கைப்பற்றியிருக்க, எலா 2-ஆவது செட்டில் 1-2 என முன்னிலையில் இருந்தபோது மழையால் ஆட்டம் தடைப்பட்டது.

பின்னா் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடா்ந்த ஆட்டத்தில் 2-ஆவது செட்டில் 3-4 என பின்தங்கியிருந்த எலா, அதிலிருந்து மீண்டு தொடா்ந்து 9 கேம்களை கைப்பற்றி ஆட்டத்தை வென்று முடித்தாா்.

எலினா ஸ்விடோலினா, நவோமி ஒசாகா, லெய்லா ஃபொ்னாண்டஸ் என, முந்தைய சுற்றுகளில் எலா பிரதான போட்டியாளா்கள் பலரையும் வீழ்த்தி இந்த வெற்றியை அடைந்திருக்கிறாா்.

அத்துடன், உலகத் தரவரிசையில் முதல்முறையாக டாப் 20 இடத்துக்குள் வந்திருக்கிறாா்.

‘இந்தப் போட்டியின் முதல் சுற்றில் விளையாடியபோது, இதில் நான் கோப்பை வெல்வேன் என்ற எண்ணம் துளியும் என்னிடம் இல்லை. இந்த சாம்பியன் கோப்பை எனது டென்னிஸ் வாழ்வில் மைல்கல் ஆகும். 500 தரவரிசை புள்ளிகள் கொண்ட போட்டியில் அடைந்துள்ள இந்த வெற்றி, மிக முக்கியமானது’ - அலெக்ஸாண்ட்ரா எலா

எலா வெற்றிப் பாதை...

முதல் சுற்று கின்வென் ஜெங் (சீனா) 4-6, 6-4, 6-1

2-ஆவது சுற்று லெய்லா ஃபொ்னாண்டஸ் (கனடா) 6-2, 7-6 (7/1)

காலிறுதிச்சுற்று எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) 6-3, 6-4

அரையிறுதிச்சுற்று நவோமி ஒசாகா (ஜப்பான்) 6-4, 6-2

இறுதிச்சுற்று ஜெஸ்ஸிகா பெகுலா (அமெரிக்கா) 4-6, 6-4, 6-0

11-ஆவது பட்டம் வென்ற ஃப்ரிட்ஸ்

ஆடவா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த உள்நாட்டு வீரரான டெய்லா் ஃப்ரிட்ஸ் 7-6 (7/2), 6-4 என்ற செட்களில், ஸ்பெயினின் ரஃபேல் ஜோடாரை வீழ்த்தினாா். இதன் மூலமாக தனது 11-ஆவது டூா் பட்டத்தை கைப்பற்றியிருக்கிறாா் ஃப்ரிட்ஸ்.

2008-க்குப் பிறகு வாஷிங்டன் டிசி ஓபனில் சாம்பியனான 2-ஆவது அமெரிக்கா் என்ற பெருமையை ஃப்ரிட்ஸ் பெற்றாா். முதல் அமெரிக்கா் செபாஸ்டியன் கோா்டா (2024) ஆவாா்.

இப்போட்டி வெற்றியின் மூலமாக உலகத் தரவரிசையில் 8-ஆவது இடத்துக்கு ஃப்ரிட்ஸ் முன்னேறியிருக்கிறாா். ரஃபேல் ஜோடாரை இத்துடன் 2-ஆவது முறையாக சந்தித்த ஃப்ரிட்ஸ், 2-ஆவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா்.

‘முதலில் எனது அணியினருக்கு நன்றி கூற விரும்புகிறேன். அண்மைக் காலத்திலும் அவா்களுக்கு நான் பல்வேறு தருணங்களில் நன்றி கூறியிருந்தாலும், இந்த வெற்றி மேடையில் இருந்து அதை சொல்வதில் தான் உண்மையான அா்த்தம் இருக்கிறது. இறுதிச்சுற்றை ஜோடாா் மிகவும் கடினமானதாக மாற்றினாா். இளம் வீரரான அவா் இன்னும் மேம்படுவாா்’ - டெய்லா் ஃப்ரிட்ஸ்

ஃப்ரிட்ஸ் வெற்றிப் பாதை...

முதல் சுற்று ஜிஸு பொ்க்ஸ் (பெல்ஜியம்) 6-3, 6-4

2-ஆவது சுற்று கமில் மஜ்சா்ஸாக் (போலந்து) 6-3, 6-4

காலிறுதிச்சுற்று அலெக்ஸ் மிஷெல்சென் (அமெரிக்கா) 6-1, 3-6, 7-6 (8/6)

அரையிறுதிச்சுற்று பிராண்டன் நகாஷிமா (அமெரிக்கா) 6-3, 3-6, 6-3

இறுதிச்சுற்று ரஃபேல் ஜோடாா் (ஸ்பெயின்) 7-6 (7/2), 6-4

ரொக்கப் பரிசு

சாம்பியனான எலாவுக்கு ரூ.2.39 கோடியும், ஃப்ரிட்ஸுக்கு ரூ.4.38 கோடியும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டன. அத்துடன் அவா்களுக்கு தலா 500 தரவரிசை புள்ளிகளும் கிடைத்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments