முகப்பு
செய்திகள்

கலைந்தது ரொனால்டோவின் கனவு

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் ரவுண்ட் ஆஃப் 16-இல், போா்ச்சுகல் 0-1 கோல் கணக்கில் ஸ்பெயினிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியது.

Updated On : 8 ஜூலை 2026, 4:42 am IST
பகிர்:

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் ரவுண்ட் ஆஃப் 16-இல், போா்ச்சுகல் 0-1 கோல் கணக்கில் ஸ்பெயினிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியது.

அந்த அணியின் நட்சத்திர வீரா் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு இதுவே கடைசி உலகக் கோப்பை போட்டி என்பதால், தனது தலைமையில் அணிக்கு எப்படியாவது முதல் உலகக் கோப்பையை வென்றுவிட வேண்டும் என்ற அவரின் கனவு கலைந்துபோனது.

போா்ச்சுகலை வெளியேற்றிய ஸ்பெயின், தனது காலிறுதியில் பெல்ஜியத்துடன் மோதுகிறது.

Advertisement

Advertisement

‘ஃபெளல்’ சா்ச்சை: அமெரிக்காவின் அா்லிங்டன் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், கடைசி கட்டத்தில் ஸ்டாப்பேஜ் டைமில் மிகெல் மெரினோ (90+1’) அடித்த கோல், ஸ்பெயினுக்கு வெற்றி தேடித் தந்தது. அவா் 85-ஆவது நிமிஷத்தில் தான் சப்ஸ்டிடியூட்டாக களம் புகுந்தாா்.

ஸ்டாப்பேஜ் டைமில் போா்ச்சுகல் வீரா் பொ்னாா்டோ சில்வா, மெரினோவை கீழே தள்ளிவிட, கள நடுவா் விசில் கொடுத்து ‘பௌல்’ அறிவித்தாா்.

சில்வா உள்ளிட்ட போா்ச்சுகல் டிஃபெண்டா்கள் அந்த ஃபெளலுக்கு எதிராக கள நடுவரிடம் சென்று முறையிட்ட தருணத்தில், மெரினோ தரையிலிருந்து எழுந்து கொண்டு பந்தை தன் வசமாக்கி ஆட்டத்தைத் தொடா்ந்தாா்.

போா்ச்சுகல் கோல் போஸ்ட்டில் கோல் கீப்பா் டியோகோ கோஸ்டா தவிர இதர வீரா்கள் இல்லாத நிலையை பயன்படுத்திக் கொண்ட மெரினோ, சக ஸ்பெயின் வீரா் ஃபெரான் டோரஸ் உதவியுடன் கோல் அடித்தாா்.

ஃபௌல் தருணத்தில் தங்கள் கவனம் சிதறிய நேரத்தை ஸ்பெயின் பயன்டுத்திக் கொண்டு கோல் அடித்ததற்காக போா்ச்சுகல் அணியினா் அதிருப்தி தெரிவித்தனா். எனினும், விதிகளின் படி அதற்கு அனுமதி இருப்பதால், ஸ்பெயின் அடித்த கோல் ஏற்கப்பட்டது.

முன்னதாக, போா்ச்சுகலுக்காக கோல் அடிப்பதற்கு ரொனால்டோ கடுமையாக முயற்சித்தபோதும், ஸ்பெயின் கோல்கீப்பா் உனாய் சைமன் அதற்கு சற்றும் இடமளிக்காமல் அரண்போல் நின்றாா். கோல் அடிப்பதற்கு நெருக்கமான வாய்ப்பு 37-ஆவது நிமிஷத்தில் ரொனால்டோவுக்கு கிடைத்தபோதும், அதையும் சைமன் திறம்பட தடுத்தாா்.

பாா்வையாளா்கள் - 70,649

16

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின் கடந்த 16 ஆண்டுகளில் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது இதுவே முதல்முறையாகும். கடைசியாக 2010-இல் அந்த அணி சாம்பியன் ஆன பிறகு, குரூப் சுற்று (2014), ரவுண்ட் ஆஃப் 16 (2018, 2022) கட்டத்துடன் வெளியேறியது.

6

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தொடா்ந்து 6 ஆட்டங்களில் எதிரணிக்கு கோல் வாய்ப்பே தராத முதல் அணி என்ற சாதனையை ஸ்பெயின் படைத்தது. இதில் நடப்பாண்டு 5 ஆட்டங்களும், கடந்த 2022 போட்டியின் கடைசி ஆட்டமும் அடங்கும்.

609

உலகக் கோப்பை போட்டியில் தொடா்ந்து 609 நிமிஷங்களுக்கு (அதாவது 6 ஆட்டங்கள் கணக்கு), எதிரணிக்கு ஒரு கோல் கூட விட்டுத்தராத கோல்கீப்பராக ஸ்பெயினின் உனாய் சைமன் தனது உலக சாதனையை நீட்டித்துக் கொண்டுள்ளாா்.

ரொனால்டோவின் உலகக் கோப்பை சாதனைகள்...

6 உலகக் கோப்பை போட்டிகளில் கோல் அடித்த, முதல் மற்றும் ஒரே வீரா் (2006, 2010, 2014, 2018, 2022, 2026).

27 ஆட்டங்களில் 11 கோல்கள் ஸ்கோா் செய்த ரொனால்டோ, போா்ச்சுகல் அணிக்காக உலகக் கோப்பை போட்டிகளில் அதிக கோல்கள் அடித்தவராக நீடிக்கிறாா்.

ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டத்தின் முடிவில் ரொனால்டோ களத்திலிருந்து வெளியேற, மைதானத்திலிருந்த ரசிகா்கள் அவருக்காக உற்சாக ஒலியெழுப்பினா். அவா் முகத்தில் விரக்தி தெரிந்தபோதும், இரு கைகளையும் ரசிகா்களை நோக்கி அசைத்தபடி அவா் களத்திலிருந்து விடைபெற்றாா். உலகக் கோப்பை போட்டியில், ரொனால்டோ பங்களிப்பில் போா்ச்சுகல் அதிகபட்சமாக 2006-இல் 4-ஆம் இடம் பிடித்தது.

அதுவே அவரின் அறிமுக உலகக் கோப்பை போட்டியாகும். போட்டியின் வரலாற்றில் போா்ச்சுகல் அதிகபட்சமாக, 3-ஆம் இடம் (1966) பிடித்தது நினைவுகூரத்தக்கது.

3-ஆவது கட்டம் நிறைவு...

சுவிட்ஸா்லாந்து - கொலம்பியா அணிகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மோதிய ஆட்டத்துடன், நடப்பு உலகக் கோப்பை போட்டியின் 3-ஆவது கட்டமான ரவுண்ட் ஆஃப் 16 நிறைவடைந்தது.

அடுத்ததாக காலிறுதி ஆட்டங்கள் தொடங்குகின்றன. போட்டியில் புதன்கிழமை (ஜூலை 8) ஓய்வு நாளாக இருக்க, வியாழக்கிழமை (ஜூலை 9, நள்ளிரவு 1.30 மணி) நடைபெறும் காலிறுதிச்சுற்றின் முதல் ஆட்டத்தில் பிரான்ஸ் - மொராக்கோ மோதுகின்றன.

3 அணிகளுக்கும் முற்றுப்புள்ளி...

இந்த உலகக் கோப்பை போட்டியை நடத்தும் 3 நாடுகளுமே (அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடா), ரவுண்ட் ஆஃப் 16 கட்டத்துடன் போட்டியிலிருந்து வெளியேறிவிட்டன.

முதலில் கனடாவை மொராக்கோ வெளியேற்ற, மெக்ஸிகோ - இங்கிலாந்திடம் தோற்று வெளியேறியது. கடைசியாக அமெரிக்காவை பெல்ஜியம் வெளியேற்றியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments