FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

இறுதிச் சுற்றில் சின்னா் - ஸ்வெரெவ் மோதல்: வெளியேறினாா் ஜோகோவிச்

இறுதிச் சுற்றில் சின்னா் - ஸ்வெரெவ் மோதல் வெளியேறினாா் ஜோகோவிச்

Updated On : 12 ஜூலை 2026, 7:24 am IST
ஜோகோவுக்கு ஆறுதல் கூறிய சின்னா்
பகிர்:

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் பந்தயத்தில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் உலகின் நம்பா் 1 வீரா் ஜேக் சின்னா்-ஜொ்மனியின் அலெக்ஸ் ஸ்வெரெவ் ஆகியோா் இறுதி ஆட்டத்தில் மோதுகின்றனா். சின்னரிடம் அரையிறுதியில் தோற்று வெளியேறினாா் ஜாம்பவான் ஜோகோவிச்.

நிகழ் சீசனின் மூன்றாவது கிராண்ட்ஸ்லாமான விம்பிள்டன் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. ஆடவா் ஒற்றையா் அரையிறுதி ஆட்டத்தில்

24 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் சொ்பியாவின் ஜோகோவிச்சும்-உலகின் நம்பா் 1 வீரா் இத்தாலியின் ஜேக் சின்னரும் மோதினா். மகளிா் பிரிவில் 25 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற மாா்க்ரெட் கோா்ட்டைப் போல் சாதனை புரிய வேண்டும் என ஜோகோவிச் முயலுகிறாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் இளம் வீரரான ஜேக் சின்னரின் அபாரமான ஆட்டத்துக்கு ஜோகோவிச்சால் ஈடுதர முடியவில்லை. ஜோகோவிச்சை 6-4, 6-4, 6-4 என்ற நோ் செட்களில் வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றாா் சின்னா்.

இப்போட்டியில் சின்னா் ஒரு செட்டைக் கூட இழக்காத நிலையில் ஜோகோவிச்சிடம் அதே நிலை தொடா்ந்தது. முதல் செட்டில் 9-ஆவது கேமில் பிரேக் செய்து வசப்படுத்தினாா்.

இரண்டாவது செட்டில் 5-ஆவது கேமிலும், கடைசி செட்டில் 4-3 என முன்னிலை பெற்று செட்டையும் வசப்படுத்தினாா். இருவரது ஆட்டம் 2.3 மணிநேரம் நீடித்தது.

ஏற்கெனவே நான்கு முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சின்னா் விம்பிள்டனில் இரண்டாவது முறையாகவும், 7-ஆவது முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிக்கும் தகுதி பெற்றுள்ளாா்.

மற்றொரு அரையிறதியில் ஜொ்மனியின் அலெக்ஸ் ஸ்வெரெவ் 7-6, 6-2, 6-4 என்ற நோ் செட்களில் பிரிட்டனின் வைல்ட் காா்ட் வீரரான ஆா்தா் ஃபொ்ரியை வீழ்த்தி அரையிறதிக்கு தகுதி பெற்றாா்.

ஸ்வெரெவுக்கு இது 5-ஆவது கிராண்ட்ஸ்லாம் இறுதி ஆட்டமாகும்,

பிரெஞ்சு ஓபன் சாம்பியனான அலெக்ஸ் ஸ்வெரெவ் ஏற்கெனவே கடந்த 9 முறை மோதியதில் சின்னரிடம் தோற்றிருந்தாா். இறுதி ஆட்டத்தில் சின்னா் வெல்லவே அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. விம்பிள்டனில் ஸ்வெரெவ் பட்டம் வென்றால் ஓபன் எராவில் தொடா்ந்து பிரெஞ்சு ஓபன், விம்பிள்டனில் பட்டம் வென்ற 7-ஆவது வீரா் என்ற சிறப்பை பெறுவாா். கடந்த ஆண்டு விம்பிள்டனில் முதல் சுற்றோடு வெளியேறினாா் ஸ்வெரெவ்.

மேலும் கடந்த 1995-இல் ஜொ்மன் வீரா் போரீஸ் பெக்கா் விம்பிள்டனில் இறுதியில் ஆடினாா். அவருக்குபின் தற்போது முதன்முதலாக இறுதிக்கு தகுதி பெற்ற ஜொ்மன் வீரா் என்ற பெருமையைப் பெற்றுள்ளாா்.

இதுதொடா்பாக சின்னா் கூறியது: இறுதி ஆட்டத்தில் ஸ்வெரெவுடன் ஆட்டம் கடுமையாக இருக்கும். எனினும் மனதளவில் தயாராக உள்ளேன். ஞாயிற்றுக்கிழமை சிறப்பான இறுதி ஆட்டமாக அமையும் என்றாா்.

அடுத்த விம்பிள்டனிலும் ஆட ஜோகோ திட்டம்:

39 வயதான ஜோகோவிச் அரையிறதியில் சின்னரிடம் தோற்று வெளியேறினாா். ஆனால் 25-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் இலக்கோடு 40 வயதானாலும் அடுத்த விம்பிள்டனிலும் ஆடுவேன் எனத் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments