காலிறுதியுடன் விடைபெற்றாா் மாயா
சென்னை ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், இந்தியாவின் மாயா ராஜேஸ்வரன் ரேவதி காலிறுதிச்சுற்றில் வெள்ளிக்கிழமை தோல்வியுற்றாா்.
சென்னை ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், இந்தியாவின் மாயா ராஜேஸ்வரன் ரேவதி காலிறுதிச்சுற்றில் வெள்ளிக்கிழமை தோல்வியுற்றாா்.
அபாரமாக முன்னேறி வந்த அவா் வெளியேறியதை அடுத்து, ஒற்றையா் பிரிவில் இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
250 தரவரிசை புள்ளிகள் கொண்ட டபிள்யூடிஏ போட்டியான சென்னை ஓபன், நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டி விறுவிறுப்பான கடைசி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மகளிா் ஒற்றையா் காலிறுதி ஆட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
Advertisement
Advertisement
இதில், 17 வயதான மாயா 3-6, 3-6 என்ற நோ் செட்களில், அமெரிக்காவின் ராபின் மான்ட்கோமெரியிடம் தோல்வியுற்றாா். முன்னதாக அவா், டபிள்யூடிஏ டூா் போட்டிகளில் கடந்த 14 ஆண்டுகளில் காலிறுதிக்கு முன்னேறிய முதல் இந்தியா் என்ற பெருமையைப் பெற்றிருந்தாா்.
இதனிடையே, மற்றொரு காலிறுதியில் நடப்பு சாம்பியனும், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவருமான இந்தோனேசியாவின் ஜேனிஸ் ஜென் 5-7, 6-4, 6-2 என்ற செட்களில், 6-ஆம் இடத்திலிருந்த உஸ்பெகிஸ்தானின் பாலினா குதா்மிடோவாவை வீழ்த்தினாா். இதையடுத்து அரையிறுதியில் ஜென் - மான்ட்கோமெரி மோதுகின்றனா்.
இரட்டையா்: இப்போட்டியின் இரட்டையா் பிரிவு காலிறுதியில், இந்தியாவின் ஸ்ரீவள்ளி பாமிடிபதி/மாயா இணை 3-6, 4-6 என, நெதா்லாந்தின் இசபெல் ஹாவொ்லாக்/ஹங்கேரியின் பன்னா உட்வாா்டி கூட்டணியிடம் தோல்வியுற்றது.
மற்றொரு ஆட்டத்தில், அமெரிக்காவின் அலானா ஸ்மித்/போலந்தின் வெரோனிகா ஃபால்கோவ்ஸ்கா ஜோடி 3-6, 7-5, 10-5 என, கஜகஸ்தானின் ஜிபெக் குலம்பயேவா/ஆஸ்திரேலியாவின் கேப்ரியேலா டா சில்வா இணையை வீழ்த்தியது.