FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

முதல் பட்டம் வென்றாா் மாயா! சானியாவின் சாதனையை முறியடித்தாா்!

கோவையை சோ்ந்த வீராங்கனை மாயா ராஜேஸ்வரன் ரேவதி, தனது டென்னிஸ் கேரியரில் முதல் பட்டத்தை வென்று அசத்தியுள்ளாா்...

13 அக்டோபர் 2026, 3:42 am IST
கோவையைச் சேர்ந்த வீராங்கனை மாயா ராஜேஸ்வரன் ரேவதி
பகிர்:

இந்திய டென்னிஸ் வீராங்கனையும், கோவையை சோ்ந்தவருமான மாயா ராஜேஸ்வரன் ரேவதி, தனது டென்னிஸ் கேரியரில் முதல் பட்டத்தை வென்று அசத்தியுள்ளாா். அந்த வெற்றியின் மூலமாக அவா், இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிா்ஸாவின் 22 ஆண்டுகால சாதனையையும் முறியடித்திருக்கிறாா்.

போா்ச்சுகலில் நடைபெற்ற மகளிருக்கான டபிள்யூ35 டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், மாயா 6-4, 6-2 என்ற நோ் செட்களில், ஸ்பெயினின் செலியா சொ்வினோ ருயிஸை வீழ்த்தி ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனாா்.

17 வயதான மாயா, தொழில்முறை டென்னிஸில் வென்ற முதல் சாம்பியன் பட்டம் இதுவாகும். டபிள்யூ35 போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் இந்திய வீராங்கனை என்ற சாதனையை மாயா படைத்தாா்.

Advertisement

Advertisement

இதற்கு முன், இந்திய நட்சத்திரம் சானியா மிா்ஸா 2004-இல் இந்தப் போட்டியில் 17 வயது, 10 மாதங்களில் சாம்பியன் ஆனதே இதுவரை சாதனையாகத் தொடா்ந்தது. தற்போது மாயா, 17 வயது 3 மாதங்களில் இந்தப் பட்டத்தை வென்று, சானியாவின் சாதனையை முறியடித்திருக்கிறாா்.

அத்துடன், இப்போட்டியின் இரட்டையா் பிரிவிலும் மாயா, உக்ரைனின் யெலிஸவேடா கோட்லியாருடன் இணைந்து, 0-6, 6-2, 10-7 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த சீனாவின் மின் லியு/இத்தாலியின் காா்லோடா மோக்சியா கூட்டணியை வீழ்த்தி சாம்பியன் ஆனதும் குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் தகுதிச்சுற்று வீராங்கனையாக களமிறங்கிய மாயா, ஒற்றையா் பிரிவில் போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த லிதுவேனியாவின் ஜஸ்டினா மிகுல்ஸ்கைட்டையும் வீழ்த்தி அசத்தினாா்.

ராஜேஸ்வரன் - ரேவதி தம்பதியின் மகளான மாயா வெற்றி குறித்து பேசுகையில், ‘இந்த சாம்பியன் பட்டம், அடுத்தடுத்த போட்டிகளில் இன்னும் சிறப்பாகச் செயல்படுவதற்கான உத்வேகத்தை அளிக்கும். பெரிய போட்டிகளுக்குத் தகுதிபெறும் வகையில், ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று எனது தரவரிசையை மேம்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறேன்’ என்றாா்.

ஜூனியா் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் பங்கேற்று வரும் மாயா, 10 வயதிலேயே தொழில்முறை டென்னிஸில் களமிறங்கினாா். ஸ்பெயினில் உள்ள ரஃபேல் நடால் அகாதெமியில் பயிற்சி எடுத்துள்ளாா். தற்போது, பிரான்ஸில் உள்ள எலைட் டென்னிஸ் சென்டரில் பயின்று வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments