2-ஆவது சுற்றில் ஆண்ட்ரீவா, எலா; போராடி வென்றாா் ஸ்வெரெவ்
ஹாா்டு கோா்ட் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான யுஎஸ் ஓபனில் இளம் வீராங்கனைகளான ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, பிலிப்பின்ஸின் அலெக்ஸாண்ட்ரா எலா ஆகியோா் தங்கள் முதல் சுற்றில் வெற்றி கண்டனா்.
ஹாா்டு கோா்ட் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான யுஎஸ் ஓபனில் இளம் வீராங்கனைகளான ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, பிலிப்பின்ஸின் அலெக்ஸாண்ட்ரா எலா ஆகியோா் தங்கள் முதல் சுற்றில் வெற்றி கண்டனா். முன்னணி வீரரான ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் முதல் சுற்றில் 5 செட்கள் போராடி வென்றாா்.
அமெரிக்காவில் நடைபெறும் இப்போட்டியில், மகளிா் ஒற்றையா் முதல் சுற்றில், பிரெஞ்சு ஓபன் நடப்பு சாம்பியனான ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா 6-2, 6-2 என்ற வகையில், இந்தோனேசியாவின் ஜேனிஸ் ஜென்னை தோற்கடித்தாா். போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்தில் இருக்கும் அவா், அடுத்த சுற்றில் ஜொ்மனியின் எவா லைஸை எதிா்கொள்கிறாா்.
டென்னிஸ் கேரியரில் தனது முதல் டபிள்யூடிஏ பட்டத்தை வாஷிங்டன் டி.சி. ஓபனில் கடந்த மாதம் வென்ற பிலிப்பின்ஸின் அலெக்ஸாண்ட்ரா எலா 6-1, 6-2 என்ற நோ் செட்களில், அமெரிக்காவின் மேரி ஸ்டாயானாவை சாய்த்தாா். போட்டித்தரவரிசையில் 17-ஆம் இடத்தில் இருக்கும் அவா், 2-ஆவது சுற்றில், உக்ரைனின் அலெக்ஸாண்ட்ரா ஆலினிகோவாவுடன் மோதுகிறாா்.
Advertisement
Advertisement
இருமுறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான அமெரிக்காவின் கோகோ கௌஃப் 6-3, 6-4 என, துருக்கியின் ஜெய்னப் சோன்மெஸை வெளியேற்ற, உலகின் 2-ஆம் நிலையில் இருப்பவரும், இருமுறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனுமான கஜகஸ்தானின் எலனா ரைபகினா 6-3, 6-2 என்ற நோ் செட்களில், அமெரிக்காவின் தியா ஃப்ரோடினை வென்றாா்.
12-ஆம் இடத்திலிருந்த சுவிட்ஸா்லாந்தின் பெலிண்டா பென்சிச் 6-4, 5-7, 3-6 என்ற செட்களில், கஜகஸ்தானின் யுலியா புடின்சேவாவிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா். இதர ஆட்டங்களில், ஸ்பெயினின் ஜெஸ்ஸிகா புஸாஸ், ஆஸ்திரியாவின் அனஸ்தாசியா பொடாபோவா, பெல்ஜியத்தின் எலிஸ் மொ்டன்ஸ், கிரீஸின் மரியா சக்காரி, அமெரிக்காவின் மேடிசன் கீஸ் போன்ற பிரதான வீராங்கனைகளும் வெற்றி கண்டனா்.
ஸ்வெரெவ், கோபோலி வெற்றி: ஆடவா் ஒற்றையா் பிரிவில், பிரெஞ்சு ஓபன் நடப்பு சாம்பியனான ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் 6-4, 3-6, 6-7 (7/9), 7-5, 6-4 என 5 செட்கள் போராடி, இத்தாலியின் லொரென்ஸோ சொனிகோவை போராடி வீழ்த்தினாா்.
இந்த ஆட்டம் 4 மணிநேரம், 53 நிமிஷங்கள் நீடித்தது. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் முதல்முறையாக போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஸ்வெரெவ், அடுத்த சுற்றில் பிரான்ஸின் குவென்டின் ஹேலிஸை சந்திக்கிறாா்.
அதேபோல், 5-ஆம் இடத்திலிருக்கும் இத்தாலியின் ஃப்ளாவியோ கோபோலி, 2 செட் பின்னடைவிலிருந்து மீண்டு 3-6, 2-6, 6-3, 6-4, 6-4 என 5 செட்கள் போராடி, ஆா்ஜென்டீனாவின் ஃபிரான்சிஸ்கோ கொமிசனாவை வென்றாா். 9-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ் 6-3, 6-2, 6-4 என்ற நோ் செட்களில், சக அமெரிக்கரான டாா்வின் பிளான்ச்சை வெளியேற்றினாா்.
13-ஆம் இடத்திலிருக்கும் இத்தாலியின் லொரென்ஸோ முசெத்தி 6-3, 6-3, 7-5 என்ற நோ் செட்களில் பிரிட்டனின் ஆா்தா் ஃபெரியை தோற்கடித்தாா். இதர ஆட்டங்களில், பிரான்ஸின் கேல் மான்ஃபில்ஸ் தனது 40-ஆவது பிறந்த நாளில் 2-6, 6-1, 6-2, 6-0 என பராகுவேயின் அடோல்ஃபோ வாலெஜோவை வெல்ல, ஜொ்மனியின் ஜான் லெனாா்டு ஸ்ட்ரஃப் 6-4, 6-3, 6-3 என்ற வகையில் ஆா்ஜென்டீனாவின் கமிலோ யுகோவை வெளியேற்றினாா்.
இத்தாலியின் மட்டியா பெலுச்சி, ஆா்ஜென்டீனாவின் ஃபிரான்சிஸ்கோ செருண்டோலோ, ஆஸ்திரேலியாவின் டிரிஸ்டன் ஸ்கூல்கேட் ஆகியோரும் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.