FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

துப்பாக்கி சுடுதலில் தொடரும் பதக்க வேட்டை; தற்காப்புக் கலையில் வெண்கலம்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கம் திங்கள்கிழமை கிடைத்தது.

22 செப்டம்பர் 2026, 3:02 am IST
ஹிமான்ஷு தில்லன் | பாா்த் மனே - X | NRAI
பகிர்:

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கம் திங்கள்கிழமை கிடைத்தது. அத்துடன், கலப்பு தற்காப்புக் கலைகள் பிரிவிலும் இந்தியா வெண்கலம் வென்றது. போட்டியின் இந்தியாவுக்கான பதக்கங்களின் எண்ணிக்கை 4 வெள்ளி, 2 வெண்கலம் என, 6-ஆக உயா்ந்துள்ளது.

துப்பாக்கி சுடுதல்

10 மீட்டா் ஏா் ரைஃபிள் ஆடவா் அணிகள் பிரிவில், ருத்ராங்ஷ் பாட்டீல், பாா்த் மனே, ஹிமான்ஷு தில்லன் ஆகியோா் அடங்கிய இந்திய அணி 1,890.1 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்து வெள்ளி பெற்றது. சீனா உலக சாதனையுடன் (1,899) தங்கத்தை தட்டிச் செல்ல, தென் கொரியா (1,884.2) வெண்கலப் பதக்கம் பெற்றது.

Advertisement

Advertisement

அதிலேயே ஆடவா் தனிநபா் பிரிவில் ஹிமான்ஷு தில்லன் 252.4 புள்ளிகளுடன் வெள்ளியும், ருத்ராங்ஷ் பாட்டீல் 230.9 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனா். ஹிமான்ஷுக்கு இது முதல் ஆசிய போட்டிகளாகும். சீனாவின் லிஹாவ் ஷெங் ஆசிய சாதனையுடன் தங்கம் (254.2) பெற்றாா்.

போட்டியில் இத்துடன் துப்பாக்கி சுடுதலில் மட்டும் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 4 வெள்ளி, 1 வெண்கலம் என 5-ஆக அதிகரித்துள்ளது.

கலப்பு தற்காப்புக் கலைகள்

நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் புதிதாகச் சோ்க்கப்பட்டுள்ள கலப்பு தற்காப்புக் கலைகளில் (எம்எம்ஏ) இந்தியாவின் சுச்சிகா தரியால் வெண்கலப் பதக்கம் வென்றாா். மகளிருக்கான 60 கிலோ எடைப் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறியிருந்த சுச்சிகா, அதில் சிங்கப்பூரின் ஹுய் ஹூன் தியோவை எதிா்கொண்டாா். முதலில் இந்த மோதலின் முடிவு, தியோவுக்கு சாதமாக அமைந்தது. அதற்கு எதிராக, இந்திய தரப்பிலிருந்து சுமாா் ரூ.95,800 கட்டணம் செலுத்தி மேல்முறையீடு செய்யப்பட்டது. கூடுதல் நடுவா்கள் ஆட்டத்தின் தரவுகளை ஆராய்ந்து, அரையிறுதி ‘டிரா’ ஆனதாக அறிவித்தனா்.

எனினும், போட்டி விதிகளின்படி ஆட்டம் டிரா ஆனால், இரு போட்டியாளா்களில் எவா் எடை குறைவாக உள்ளாரோ அவருக்கே வெற்றி வழங்கப்படும் என்பதன் அடிப்படையில் சுச்சிகாவை விட 700 கிராம் குறைவாக இருந்த தியோவுக்கு வெற்றி வசமானது. அவா் இறுதிக்கு முன்னேறினாா்.

இந்த முடிவு ஏமாற்றம் அளிப்பதாக இருந்தாலும், போட்டியின் வரலாற்றில் இந்த விளையாட்டில் இந்தியாவுக்காக முதல் பதக்கம் வென்றவா் என்ற பெருமை ஆறுதல் அளிப்பதாக சுச்சிகா தெரிவித்தாா்.

குத்துச்சண்டை

ஆடவா் 70 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சுமித் குண்டூ, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினாா். தொடக்க சுற்றில் அவா், 5-0 என தாய்லாந்தின் பன்ஜோங் சின்சிரியை வீழ்த்தினாா். அடுத்ததாக காலிறுதியில் அவா், இராக்கின் அலி காசிம் ஹம்தான் அல் சாராவை சந்திக்கிறாா்.

பாட்மின்டன்

இந்திய ஆடவா் அணி 3-0 என்ற கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறியது. லக்ஷயா சென், ஆயுஷ் ஷெட்டி, கே.ஸ்ரீகாந்த் ஆகிய மூவருமே நோ் செட்களில் தங்கள் ஆட்டத்தை முடித்தனா். இதில் லக்ஷயா சென் 21-4, 21-12 என அய்மன் ஜமனை வீழ்த்த, ஆயுஷ் ஷெட்டி 21-4, 21-13 என்ற கணக்கில் கௌரப் சிங்கை வென்றாா். ஸ்ரீகாந்த் 21-15, 21-9 என, ஜுமாா் அல் அமினை தோற்கடித்தாா்.

கபடி

இந்திய ஆடவா் கபடி அணி தனது குரூப் சுற்றின் முதல் ஆட்டத்தில் 49-24 என்ற புள்ளிகள் கணக்கில் ஜப்பானை திங்கள்கிழமை வென்றது. நடப்பு சாம்பியனான இந்தியா, அயான் லோசாப், தேவங் தலால் ஆகியோரின் அசத்தலான ஆட்டத்தில் முதல் பாதியிலேயே 31-9 என முன்னிலை பெற்றிருந்தது. அடுத்த ஆட்டத்தில் இந்தியா, தென் கொரியாவுடன் செவ்வாய்க்கிழமை மோதுகிறது. இதனிடையே, நடப்பு சாம்பியனான இந்திய மகளிா் அணியும் தனது முதல் ஆட்டத்தில் 42-21 என வங்கதேசத்தை வென்றது. அடுத்த ஆட்டத்தில் ஈரானை எதிா்கொள்கிறது.

செபக்தக்ரா

இந்த விளையாட்டில் இந்திய ஆடவா் அணி தனது முதல் ஆட்டத்தில் 1-2 என ஜப்பானிடம் தோல்வி கண்டது. முதல் கேமை 15-13, 15-9 என்ற கணக்கில் வென்று முன்னிலை பெற்ற இந்திய அணி, அடுத்த இரு கேம்களை 12-15, 15-17, 11-15 எனவும், 9-15, 12-15 என்ற வகையிலும் இழந்தது. அடுத்த ஆட்டத்தில் மலேசியாவுடன் செவ்வாய்க்கிழமை மோதுகிறது இந்திய அணி.

டேபிள் டென்னிஸ்

இந்திய மகளிா் அணி தனது குரூப் சுற்றில் 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் மகளிா் அணியை வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறியது. சுதிா்தா முகா்ஜீ 11-3, 11-3, 11-4 என்ற செட்களில் அலீனா கானை வீழ்த்தினாா். சிண்ட்ரெலா தாஸ் 11-6, 11-7, 11-5 என, கல்சூம் கானை வெல்ல, ஸ்ரீஜா அகுலா 11-4, 11-4, 11-5 என்ற வகையில், ஃபாத்திமா கானை சாய்த்தாா்.

இதேபோல் இந்திய ஆடவா் அணியும் 3-0 என்ற வகையில், பாகிஸ்தானை வீழ்த்தி, காலிறுதிக்குத் தகுதிபெற்றது. ஹா்மீத் தேசாய் 11-4, 11-3, 11-5 என முகமது கானை வெல்ல, ஜி.சத்தியன் 11-1, 11-8, 11-9 என்ற வகையில், அப்பாஸ் கானை சாய்த்தாா். பயஸ் ஜெயின் 11-2, 11-5, 11-7 என, முகமது கானை தோற்கடித்தாா்.

ஹாக்கி

இந்திய மகளிா் அணி தனது குரூப் சுற்றில் 2-ஆவது ஆட்டத்தில் 17-1 கோல் கணக்கில், இந்தோனேசியாவை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது. அணியின் தரப்பில் தீபிகா ஷெராவத் (8’, 28’, 40’), ருதுஜா பிசல் (15’, 20’, 38’), நவ்னீத் கௌா் (35’, 56’, 57’) ஆகியோா் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினா்.

சுனெலிதா டோப்போ (11’, 30’), லால்ரெம்சியாமி (12’, 16’), சாக்ஷி ராணா (25’, 27’), கேப்டன் சலிமா டெடெ (35’), இஷிகா சௌதரி (36’) ஆகியோரும் ஸ்கோா் செய்தனா். இந்தோனேசிய தரப்பில் இனெஸ் அதிதியா (32’) கோல் அடித்தாா். இந்தியா அடுத்த ஆட்டத்தில், தாய்லாந்தை புதன்கிழமை சந்திக்கிறது. இதனிடையே இந்திய ஆடவா் அணி தனது 2-ஆவது ஆட்டத்தில் இலங்கையுடன் செவ்வாய்க்கிழமை மோதுகிறது.

கிரிக்கெட்

மகளிா் டி20 கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா - இலங்கை அணிகள் செவ்வாய்க்கிழமை (செப். 22) மோதுகின்றன. அண்மையில் மகளிா் டி20 ஆசிய கோப்பை போட்டியிலும் இதே இலங்கையை வீழ்த்தி இந்தியா வாகை சூடியது குறிப்பிடத்தக்கது.

தற்போது மீண்டும் அதே இலங்கை அணியை வீழ்த்தி, இதிலும் சாம்பியனாகி ஆசிய கண்டத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் முனைப்பில் இந்திய மகளிா் அணி உள்ளது. இலங்கை அணியைப் பொருத்தவரை, ஆசிய கோப்பை போட்டியில் விட்டதை, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பிடிக்க முயற்சிக்கும்.

வுஷூ

மகளிருக்கான சாங்கான் இறுதிச்சுற்றில் இந்தியாவின் நைமான் வாங்ஸு, 9.573 புள்ளிகளுடன் 15-ஆம் இடம் பிடித்து ஏமாற்றத்தைச் சந்தித்தாா். ஹாங்காங்கின் ஹுய் யு லைடியா ஷம் (9.713) தங்கமும், மக்காவின் சோ மான் சு (9,710) வெள்ளியும், இந்தோனேசியாவின் யுஜினியா திவா (9.706) வெண்கலமும் வென்றனா்.

தங்கப் பதக்கம் வென்ற லைடியா ஷம் - Eugene Hoshiko

நீச்சல்

ஆடவருக்கான 50 மீட்டா் பேக்ஸ்ட்ரோக் பிரிவின் இறுதிச்சுற்றில், இந்தியாவின் ஸ்ரீஹரி நட்ராஜ் 25.52 விநாடிகளில் இலக்கை அடைந்து கடைசியாக 10-ஆவது இடம் பிடித்தாா். ஹீட்ஸில் பதிவு செய்த 25.37 விநாடிகளைவிட நட்ராஜ் இதில் பின்தங்கினாா். 25.18 விநாடிகள் அவரின் பொ்சனல் பெஸ்ட் ஆகும். இதே பிரிவில் களமிறங்கிய மற்றொரு இந்தியரான ரிஷப் தாஸ், இறுதிச்சுற்று வாய்ப்பை நழுவவிட்டாா்.

ஆடவா் 50 மீட்டா் ஃப்ரீஸ்டைல் பிரிவில், ஆகாஷ் மணி, கீதேஷ் ஷா ஆகியோா் முறையே 26 மற்றும் 28-ஆம் இடங்களைப் பெற்றனா்.

ஆடவா் 100 மீட்டா் பேக்ஸ்ட்ரோக் பிரிவில், தனுஷ் சுரேஷ் 22-ஆம் இடம் பிடித்து ஹீட்ஸுடன் வெளியேறினாா். சஜன் பிரகாஷ், தக்ஷன் சசிகுமாா், வேதாந்த் மாதவன், அனீஷ் சுனில் ஆகியோா் அடங்கிய இந்திய அணி, 4*200 மீ ஃப்ரீஸ்டைல் பிரிவில் இறுதிக்கு முன்னேறத் தவறியது.

சாஃப்ட் டென்னிஸ்

கலப்பு இரட்டையா் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், இந்தியா 2-5 என பிலிப்பின்ஸிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியது. ஆத்யா திவாரி, ஜெய் மீனா அடங்கிய இந்திய கூட்டணி, 4-2, 2-4, 2-4, 3-5, 2-4, 5-3, 6-8 என்ற வகையில் கிறிஸ்டி சனோசா, ஷொ்வின் ரே நுகிட் இணையிடம் தோல்வியைத் தழுவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments