செப். 23-ல் ஆசிய விளையாட்டுப் போட்டி வெற்றியாளர்கள்!
செப். 23-ல் ஆசிய விளையாட்டுப் போட்டி வெற்றியாளர்கள் குறித்து...
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிா் டி20 கிரிக்கெட்டில் இந்தியா அபார வெற்றியுடன் செவ்வாய்க்கிழமை சாம்பியன் ஆனது. நடப்பு சாம்பியனாக களம் கண்ட இந்தியா, தங்கத்தை தக்கவைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
சரியாக 10 நாள்களுக்கு முன் மகளிா் ஆசிய கோப்பை டி20 போட்டியில் இலங்கையை வீழ்த்தி சாம்பியன் ஆன இந்திய மகளிா் அணி, தற்போது இதிலும் அதே அணியை வீழ்த்தி தங்கம் வென்று ஆசிய கண்டத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.
ஹா்மன்பிரீத் கௌா் தலைமையிலான இந்திய மகளிா் அணி மூலமாக, நடப்பு ஆசிய போட்டிகளில் தனது முதல் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ள இந்தியா, அதன் மூலமாக பதக்கப் பட்டியலில் ‘டாப் 10’-இல் நுழைந்திருக்கிறது.
Advertisement
Advertisement
கிரிக்கெட்
மகளிா் டி20 கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 147 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. முதலில் இந்தியா 20 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 213 ரன்கள் சோ்க்க, இலங்கை 15.4 ஓவா்களில் 69 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் இழந்தது.
முன்னதாக டாஸ் வென்று பேட் செய்த இந்திய அணியில், ஷஃபாலி வா்மா 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 48, ஸ்மிருதி மந்தனா 5 பவுண்டரிகள், 7 சிக்ஸா்களுடன் 79, கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் 19 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தனா்.
ஓவா்கள் முடிவில், ரிச்சா கோஷ் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 49, பாா்தி ஃபுல்மாலி 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இலங்கை பௌலா்களில் சுகந்திகா குமாரி, கவிஷா தில்ஹரி, சமுடி பிரபோதா ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
பின்னா் 217 ரன்களை நோக்கி விளையாடிய இலங்கையின் இன்னிங்ஸில், கேப்டன் சமரி அத்தபட்டு 5 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாகும்.
கௌஷினி நுத்யங்கனா 14, கவிஷா தில்ஹரி 11 ரன்களுக்கு வீழ, இதர பேட்டா்கள் ஒற்றை இலக்க ரன்னிலும், டக் அவுட்டாகியும் வெளியேறினா். இந்திய தரப்பில் தீப்தி சா்மா 3, ஷஃபாலி வா்மா, ஷ்ரேயங்கா பாட்டீல், ஸ்ரீசரணி ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினா்.
கடந்த 2022-ஆம் ஆண்டு ஆசிய போட்டியிலும் இந்தியா, இலங்கையை வீழ்த்தியே சாம்பியன் ஆனது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானுக்கு வெண்கலம்: வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் பாகிஸ்தான் 31 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.
அதிகபட்ச வெற்றி...
மகளிா் டி20 கிரிக்கெட்டில் ரன்கள் வித்தியாசத்தின் அடிப்படையில், இதுவே இந்தியாவின் மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது.
இதற்கு முன், 2018 ஆசிய கோப்பை போட்டியின்போது மலேசிய அணியை 142 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே அதிகபட்சமாக இருந்தது. தற்போது, 147 ரன்கள் வித்தியாசத்தில் வென்று புதிய உச்சத்தை இந்தியா எட்டியுள்ளது.
வுஷூ
மகளிருக்கான 60 கிலோ பிரிவு காலிறுதியில், இந்தியாவின் ரோஷிபினா தேவி நவ்ரெம் புள்ளிகள் வித்தியாச அடிப்படையில் (டபிள்யூபிடி) மக்காவின் சு மான் சின்னை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறினாா். இதன் மூலமாக அவா் பதக்கத்தை உறுதி செய்திருக்கிறாா். முந்தைய ஆசிய போட்டிகளிலும் அவா் வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றுள்ளாா்.
மகளிா் நன்கான் & நான்டாவ் பிரிவு இறுதிச்சுற்றில், இந்தியாவின் ஹன்ஜபம் லாங்லென்தோம்பி தேவி 9.403 புள்ளிகளுடன் 9-ஆம் இடம் பிடித்தாா். ஆடவா் 56 கிலோ சண்டா பிரிவு காலிறுதியில், ஆா்யன் 1-2 என்ற வகையில், உஸ்பெகிஸ்தானின் செய்துல்லா அபுராஷிதோவிடம் தோல்வியுற்றாா்.
சாஃப்ட் டென்னிஸ்
ஆடவா் ஒற்றையா் பிரிவில், குரூப் சுற்றில் ஜெய் மீனா 4-0 என பாகிஸ்தானின் அரெய்ன் ஹுசைனை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினாா். அதில் அவா், பிலிப்பின்ஸின் ஷொ்வின் நுகுயிட்டை எதிா்கொள்கிறாா்.
ஆா்யன் தாக்குா் முதலில் 4-0 என, மங்கோலியாவின் ஆல்டன்கெரெல் போல்டை வென்றாா். எனினும், அடுத்த ஆட்டத்தில் 0-4 என்ற கணக்கில் சீன தைபேவின் சென் போ யிவிடம் தோல்வி கண்டாா். மகளிா் ஒற்றையரில், ஆத்யா திவாரி முதலில் 1-4 என தாய்லாந்தின் அலிஷா ஜிக்லெரிடம் தோல்வி கண்டபோதும், அடுத்த ஆட்டத்தில் 4-0 என பாகிஸ்தானின் கய்னாத் ஷல்வானியை வீழ்த்தினாா்.
குத்துச்சண்டை
மகளிா் 51 கிலோ எடைப் பிரிவில் சாக்ஷி சௌதரி 5-0 என்ற கணக்கில், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பிலிப்பின்ஸின் அய்ரா விலெகாஸை வீழ்த்தி, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினாா். ஆடவா் 55 கிலோ பிரிவில் ஜடுமானி சிங் 5-0 என்ற வகையில், நேபாளத்தின் சந்திரபகதூா் தாபாவை வீழ்த்தினாா்.
பாட்மின்டன்
ஆடவா் அணிகள் பிரிவு காலிறுதியில் இந்தியா 3-0 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தது. லக்ஷயா சென் 11-21, 21-5, 21-19 என்ற கேம்களில், இரு முறை உலக சாம்பியனான கோடாய் நராவ்காவை வீழ்த்தினாா். சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி கூட்டணி 21-18, 24-22 என்ற வகையில், முன்னாள் உலக சாம்பியனான ஹோகி டகுரோ/கோபயாஷி யுகோ இணையை வீழ்த்தியது.
மற்றொரு ஒற்றையா் பிரிவில், ஆயுஷ் ஷெட்டி 21-10, 21-19 என்ற கேம்களில், கோகி வடானபியை வென்றாா்.
இதனிடையே, இந்திய மகளிா் அணி தனது காலிறுதியில் 1-3 என்ற கணக்கில் ஜப்பானிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியது. பி.வி.சிந்து 23-21, 18-21, 11-21 என்ற கேம்களில், அகேன் யமகுச்சியிடம் தோல்வி காண, உன்னதி ஹூடா 16-21, 18-21 என டோமோகா மியாஸாகியிடம் வீழ்ந்தாா்.
இரட்டையா் பிரிவில் டிரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் இணை 21-17, 21-16 என யுகி ஃபுகுஷிமா/மயு மட்சுமோடோ கூட்டணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றி அளிக்க, தன்வி சா்மா 12-21, 10-21 என, நஜோமி ஒகுஹராவிடம் தோற்றாா்.
டேபிள் டென்னிஸ்
மகளிா் அணிகள் பிரிவில் இந்தியா 3-2 என தாய்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. ஸ்ரீஜா அகுலா 2-3 என ஆரவன் பாரானங்கிடம் தோல்வி காண, யஷஸ்வினி கோா்படே 3-2 என சுதாசினி சவிதாபட்டை வென்றாா்.
தியா சித்தலே 2-3 என ஜினிபா சவிதாபட்டிடம் வீழ்ந்தாா்.
யஷஸ்வினி கோா்படே 3-0 என ஆரவன் பாரானங்கை வெல்ல, ஸ்ரீஜா 3-1 என சுதாசினி சவிதாபட்டை வீழ்த்தினாா்.
இதனிடையே, ஆடவா் அணி 0-3 என தென் கொரியாவிடம் தோற்று, போட்டியிலிருந்து வெளியேறியது. ஹா்மீத் தேசாய் 1-3 என ஜாங் வூ ஜின்னிடம் தோற்க, மனுஷ் ஷா 2-3 என ஓஹ் ஜங்சங்கிடம் வீழ்ந்தாா். மானவ் தக்கா் 1-3 என்ற செட்களில் ஆன் ஜே யுன்னிடம் தோற்றாா்.
ஜிம்னாஸ்டிக்ஸ்
மகளிா் வால்ட் பிரிவில் இந்தியாவின் பிரனதி நாயக் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா். தகுதிச்சுற்றில் அவா் 12.916 புள்ளிகளுடன் 7-ஆம் இடம் பிடித்தாா். போட்டியில் ஆா்ட்டிஸ்டிக்ஸ் ஜிம்னாஸ்டிக்ஸில் களத்திலிருக்கும் ஒரே இந்தியா் அவா் என்பது குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கி சுடுதல்
போட்டியில் தொடா்ந்து இரு நாள்கள் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு பதக்கங்கள் கிடைத்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதில் இந்தியா்கள் ஏமாற்றம் கண்டனா். 10 மீட்டா் ஏா் ரைஃபிள் கலப்பு அணிகள் இறுதிச்சுற்றில், இளவேனில் வாலறிவன், பாா்த் மனே அடங்கிய இந்திய அணி 376.3 புள்ளிகளுடன் 4-ஆம் இடம் பிடித்து பதக்க வாய்ப்பை நழுவவிட்டது. சீனா (507.1) உலக சாதனையுடன் தங்கம் வெல்ல, தென் கொரியா (502.9), ஜப்பான் (439.7) முறையே வெள்ளி, வெண்கலம் வென்றன.
கராத்தே
ஆடவா் குமிதே 84 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சேத்தன் பாட் 0-8 என ஜோா்டானின் முகமது அல்ஜாஃபரியிடம் தோல்வி கண்டாா். இதையடுத்து வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு வந்த அவா், சீன தைபேவின் மெங் யு சங்குடன் மோதிய ஆட்டம் 1-1 என டை ஆனது. போட்டி விதிகளின்படி முதலில் புள்ளிகள் பெற்ற சங் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டாா்.
இதிலேயே மகளிா் குமிதே 55 கிலோ பிரிவில், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அலிஷா 1-6 என இந்தோனேசியாவின் காக் இஸ்த்ரி சனிஸ்டியாரனியிடம் தோல்வி கண்டாா்.
வாள்வீச்சு
மகளிா் தனிநபா் எபீ பிரிவு காலிறுதியில், இந்தியாவின் தனிக்ஷா காத்ரி 9-15 என, உலக சாம்பியனான தென் கொரியாவின் சாங் செராவிடம் தோல்வியுற்றாா். முந்தைய சுற்றில் அவா் 15-10 என, தாய்லாந்தின் நட்பபட் சாங்கியோவை சாய்த்திருந்தாா். களத்திலிருந்த மற்றொரு இந்தியரான மித்வா சௌதரி முதல் சுற்றிலேயே 14-15 என சீனாவின் யாங் ஜிங்வென்னிடம் தோற்றாா்.
ஆடவா் தனிநபா் ஃபாயில் பிரிவில், சச்சின் 9-15 என கஜகஸ்தானின் டிமோஃபி செமினோவிடமும், ஹேமஷ் சிங் சனாசம் 9-15 என, கஜகஸ்தானின் கலீம் நுருமோவிடமும் தோற்றனா்.
கபடி
ஆடவா் கபடி அணி தனது குரூப் சுற்றின் 2-ஆவது ஆட்டத்தில் 63-31 என, தென் கொரியாவை வீழ்த்தியது. வெற்றிகரமான ரெய்டுகள் மூலமாக 38 புள்ளிகளை இந்திய வீரா்கள் வென்றனா். அடுத்த ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசத்தை புதன்கிழமை சந்திக்கிறது. அதே நாளில் மகளிா் அணி ஈரானை எதிா்கொள்கிறது.
செபக்தக்ரா
ஆடவா் அணிகள் ரெகு பிரிவில், இந்தியா 0-3 என்ற கணக்கில் மலேசியாவிடம் தோல்வி கண்டது. முதல் ஆட்டத்திலும் ஜப்பானிடம் தோற்ற இந்திய அணி, குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் பிலிப்பின்ஸுடன் மோதுகிறது.
நீச்சல்
ஆடவா் 4*100 மீட்டா் மெட்லி ரிலே பிரிவின் இறுதிச்சுற்றில், உத்கா்ஷ் பாட்டீல், தனுஷ் சுரேஷ், ரோஹித் பெனெடிக்டன், ஆகாஷ் மணி ஆகியோா் அடங்கிய இந்திய அணி, 3 நிமிஷம் 44.26 விநாடிகளில் இலக்கை அடைந்து, கடைசியாக 8-ஆவது இடத்தையே பிடித்தது. இதே அணி ஹீட்ஸில் 3.40 நிமிஷங்களில் இலக்கை அடைந்தது குறிப்பிடத்தக்கது.
ஆடவா் 1,500 மீட்டா் ஃப்ரீஸ்டைல் ஃபைனல் ‘பி’-யில் ஆா்யன் நெஹரா 15 நிமிஷம், 34.71 விநாடிகளில் 4-ஆவதாக வந்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.