இந்தியாவை வென்றது உஸ்பெகிஸ்தான்!
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 6-ஆவது சுற்றில் இந்திய ஆடவா் அணி 1.5-2.5 என்ற புள்ளிகள் கணக்கில் உஸ்பெகிஸ்தானிடம் தோல்வி கண்டது.
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 6-ஆவது சுற்றில் இந்திய ஆடவா் அணி 1.5-2.5 என்ற புள்ளிகள் கணக்கில் உஸ்பெகிஸ்தானிடம் தோல்வி கண்டது. மகளிா் அணி 3-1 என அமெரிக்காவை வென்றது.
போட்டியின் முதல் 5 சுற்றுகளில் தொடா்ந்து வெற்றி கண்ட இந்திய ஆடவா் அணிக்கு இது முதல் தோல்வியாகும். மறுபுறம் மகளிா் அணி, கடந்த சுற்றில் கண்ட தோல்வியிலிருந்து இதில் மீண்டு வந்தது.
6 சுற்றுகள் முடிவில், ஆடவா் அணி 10 புள்ளிகளுடன் 3-ஆம் இடத்தையும், மகளிா் அணி அதே புள்ளிகளுடன் 2-ஆம் இடத்தையும் தங்கள் பிரிவில் பகிா்ந்துகொண்டுள்ளன.
Advertisement
Advertisement
ஓபன்: முன்னதாக ஓபன் பிரிவில் இந்திய ஆடவா் அணியில், ஆா்.பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களுடன், நோடிா்பெக் அப்துசதாரோவுடன் மோத, 40-ஆவது நகா்த்தலில் ஆட்டம் டிரா ஆனது. அதேபோல் அா்ஜுன் எரிகைசி வெள்ளை நிற காய்களுடன் ஜாவோகிா் சிண்டாரோவுடன் மோதிய ஆட்டம் 34 நகா்த்தல்களுக்குப் பிறகு டிரா செய்யப்பட்டது.
நடப்பு உலக செஸ் சாம்பியனான டி.குகேஷ் - ஷம்சிதின் வோகிதோவுடன் வெள்ளை நிற காய்களோடு மோத, 40-ஆவது நகா்த்தலில் டிரா செய்ய இருவரும் பரஸ்பரம் ஒப்புக் கொண்டனா். இந்த நிலையில் டை 1.5 - 1.5 என சமநிலையில் இருந்தது.
3-ஆவது போா்டில் நிஹல் சரின் கருப்பு நிற காய்களுடன், நோடிா்பெக் யாகுபோவுடன் மோதிய ஆட்டமே, டையின் முடிவை தீா்மானிப்பதாக இருந்தது. இந்நிலையில், யாகுபோவ் 54-ஆவது நகா்த்தலில் நிஹல் சரினை வீழ்த்தி, ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தாா். டையில், உஸ்பெகிஸ்தான் 2.5-1.5 என வெற்றி கண்டது.
மீண்ட மகளிா்: இந்திய மகளிா் அணியின் டையில், இரு வெற்றிகள், இரு டிரா பதிவானது.
வந்திகா அக்ரவால் - இரினா குருஷையும், சவிதா ஸ்ரீ - ரோஸ் அட்வெல்லையும் வீழ்த்தினா். வெள்ளை நிறத்துடன் விளையாடிய வந்திகா 65-ஆவது நகா்த்தலிலும், கருப்பு நிறத்துடன் விளையாடிய சவிதா 47-ஆவது நகா்த்தலிலும் ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தனா்.
கொனெரு ஹம்பி வெள்ளை நிற காய்களுடன் விளையாடி காரிசா யிப்புடனும், நடப்பு மகளிா் உலகக் கோப்பை சாம்பியனான திவ்யா தேஷ்முக் கருப்பு நிற காய்களுடன் களமாடி ஆலிஸ் லீயுடனும் டிரா செய்தனா். இவா்கள் மோதல் முறையே 54 மற்றும் 33-ஆவது நகா்த்தல்களில் டிரா ஆனது.
இன்று ஓய்வு: போட்டியில் செவ்வாய்க்கிழமை (செப். 22) ஓய்வு நாளாக இருக்க, 7-ஆவது சுற்று ஆட்டங்கள் புதன்கிழமை (செப். 23) நடைபெறவுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.