வரலாற்றுச் சதம் விளாசிய ஷஃபாலி வர்மா; ஆசிய போட்டியின் இறுதிக்கு முன்னேறிய இந்தியா!
ஆசிய போட்டியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ஆசிய போட்டியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ஆசிய போட்டி மகளிர் கிரிக்கெட்டின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று (செப்டம்பர் 20) நடைபெற்றது. இந்தியா - வங்கதேசம் இடையேயான இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
ஷஃபாலி வர்மா சதம் விளாசல்!
Advertisement
Advertisement
டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியில் அதிரடியாக விளயாடிய தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா 49 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். சர்வதேச வெள்ளைப் பந்துப் போட்டிகளில் ஷஃபாலி வர்மாவின் முதல் சதம் இதுவாகும். மேலும், ஆசிய போட்டியில் சதம் விளாசிய முதல் வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையையும் அவர் படைத்தார். அதிரடியாக விளையாடிய அவர் 49 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் அடங்கும்.
அவரைத் தொடர்ந்து, கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 40 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 37 ரன்களும் எடுத்தனர்.
வங்கதேசம் தரப்பில் மரூஃபா அக்தர், அக்தர் மேக்லா, ரபேயா கான் மற்றும் நஹிதா அக்தர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி!
196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணி, 15.4 ஓவர்களில் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 81 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இந்திய அணி 114 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வங்கதேச அணியில் தொடக்க வீராங்கனை திலாரா அக்தர் அதிகபட்சமாக 23 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, சுல்தானா கட்டூன் 12* ரன்கள் மற்றும் ஷர்மின் அக்தர் 10 ரன்கள் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இந்தியா தரப்பில் நந்தனி சர்மா மற்றும் தீப்தி சர்மா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஸ்ரீ சரணி இரண்டு விக்கெட்டுகளையும், கிராந்தி கௌட் மற்றும் ஷ்ரேயங்கா பாட்டீல் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
வங்கதேசத்தை வீழ்த்தியதன் மூலம் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்த இந்திய அணி, தங்கப் பதக்கத்துக்கான இறுதிப்போட்டியில் நாளை மறுநாள் (செப்டம்பர் 22) இலங்கையை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
The Indian team advanced to the final of the Asian tournament by defeating Bangladesh in the second semi-final.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.