லாபம் தரும் நிலக்கடலை விதை உற்பத்தி
நிலக்கடலை விதையைப் பயிரிட்டால் குறைந்த செலவில் அதிக லாபத்தை விவசாயிகள் பெறலாம்.
நிலக்கடலை விதையைப் பயிரிட்டால் குறைந்த செலவில் அதிக லாபத்தை விவசாயிகள் பெறலாம்.
தமிழ்நாட்டில் நிலக்கடலை சுமார் 22.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 6 லட்சம் டன் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதில் திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், நாமக்கல், தருமபுரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நிலக்கடலை அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இதற்குத் தேவையான தரமான விதைகள் உரிய காலத்தில் கிடைப்பது இல்லை.
Advertisement
Advertisement
ஆகையால், நிலக்கடலை விதை உற்பத்தி செய்வதின் மூலம் விவசாயிகள் அதிக வருமானம் பெறலாம்.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் பெ. முருகன் கூறியதாவது:
விதைப்பும், விளைநிலம் தேர்வு செய்தல்: நிலக்கடலை விதைப்புக்குச் சிறந்த பருவம் ஜுன் மாதம் முதல் ஜுலை வரையும் டிசம்பர் முதல் ஜனவரி வரையிலான மாதங்களே ஆகும். மேலும் இதற்கு நல்ல வளமான செம்மண்பாங்கான காற்றோட்டமும், வடிகால் வசதியும் உடைய நிலமாக இருக்க வேண்டும். மண்ணில் போரான், கால்சியம் குறைபாடு இல்லாமல் இருக்க வேண்டும்.
ரகம் மற்றும் விதைத் தேர்வு: டி.எம்.வி.-7, வி.ஆர்.ஐ.-2, டி.எம்.வி.-13, கோ - 6 விதைகளை வேளாண்மை பல்கலைக்கழகங்கள், மாநில விதை நிறுவனங்கள், மத்திய விதை நிறுவனங்கள், வேளாண்துறை இவைகளில் ஏதேனும் ஒன்றிலிருந்து பெற வேண்டும்.
விதைப்பதற்கு வெகுநாள் முன்னதாகவே விதைக்கடலையை தொலித்து வைக்கக்கூடாது. மேலும், கையினால் தொலிப்பது நல்லது. விதைப் பருப்புகளில் உடைந்த, நிறம் மாறிய, சுருங்கிய, சிறிய பருப்புகளை பிரித்து எடுத்து விட்டு நல்ல தரமான பருப்புகளையே விதைக்குப் பயன்படுத்த வேண்டும். விதைப்பதற்கு முன் முளைப்புத் திறனை சோதிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு சிறிய விதைகளை உடைய டி.எம்.வி.2, டி.எம்.வி.7, டி.எம்.வி.13 ஆகிய ரகங்கள் 50 கிலோ முதல் 55 கிலோ வரையும், பெரிய விதைகளை உடைய வி.ஆர்.ஐ.-2, ஜே.எல்.24, கோ - 6 ஆகிய ரகங்கள் 55 கிலோ முதல் 60 கிலோ வரையும் தேவைப்படும்.
விதை முளைகட்டுதல்: 2 கிலோ விதைக்கு 5 கிராம் கால்சியம் குளோரைடு எடுத்து இதனை 1 லிட்டர் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். அதுபோல 28 லிட்டர் கரைசல் தயார் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட கரைசலில் விதையை 6 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். பிறகு இக்கரைசலில் ஊற வைத்த விதைகளை ஈரச்சாக்கின் மீது பரப்ப வேண்டும்.
அதனை மற்றொரு ஈரச்சாக்குக் கொண்டு 12 மணி நேரம் மூடி வைக்க வேண்டும். அதற்குப் பிறகு விதையில் கருமுளை வெளிவந்திருக்கும். இவ்வாறு முளை கண்ட விதைகளை பிரித்தெடுத்து நிழலில் உலர்த்த வேண்டும். மிக நீளமாக முளைக்கரு வெளிவந்த விதைகளையும் இறந்த விதைகளையும் தனியே பிரித்து எடுத்து விடவும்.
விதை நேர்த்தி: நிலக்கடலையில் விதை மூலமும், மண்மூலமும் பரவும் வேர் அழுகல், தண்டு அழுகல், இலைப்புள்ளி நோய்களைக் கட்டுப்படுத்தவும், பயிர் எண்ணிக்கையைச் சீராகப் பராமரிக்கவும் உயிரியல் பூஞ்சாணக் கொல்லிகளான டிரைக்கோடெர்மா விரிடியைக் 1 கிலோ விதைக்கு 4 கிராம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
காற்றில் கரைந்துள்ள நைட்ரஜன் சத்தை பயிருக்கு அளிக்க டி.என்.ஏ.யூ.14 ரைசோபியம் (3 பாக்கெட் - 200 கிராம்) என்ற நுண்ணுயிரைக் கொண்டும் விதைக்கு, விதை நேர்த்தி செய்து பின்னர் விதைக்க வேண்டும்.
நிலம், பயிர் விலகு தூரம்: விதை உற்பத்திக்கு தேர்ந்தெடுத்த நிலத்தை 4 முதல் 5 முறை நன்கு உழவு செய்து மண் கட்டிகளை உடைக்க வேண்டும். கடைசி உழவுக்கு முன் ஒரு ஏக்கருக்கு 5 டன் மக்கிய தொழுஉரம் இடவேண்டும்.
மண்ணின் தன்மை, நீர்ப் பிடிப்பு ஆகியவற்றைப் பொருத்து பாத்திகள் அமைத்துக் கொள்ள வேண்டும். நிலக்கடலை ஒரு தன் மகரந்த சேர்க்கைப் பயிராகும்.
ஆகையால் ஒரு ரக நிலக்கடலை விதை பயிருக்கும், மற்றொரு ரக நிலக்கடலை விதை பயிருக்கும் குறைந்த பட்சம் 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.
பயிர் இடைவெளி: விதை விதைக்கும்போது வரிசைக்கு வரிசை 30 செ.மீ. செடிக்குச் செடி 10 செ.மீ. இடைவெளி இருக்குமாறு விதைக்க வேண்டும். விதைக்கப்படும் விதை 4 செ.மீ. ஆழத்துக்கு கீழே சென்றுவிடக் கூடாது. ஒரு சதுர அடிக்கு 33 செடிகள் இருக்குமாறு பயிர் எண்ணிக்கையை பராமரிக்க வேண்டும்.
உர நிர்வாகம்: ஒரு ஏக்கருக்கு ஜிப்சம் 80 கிலோ, தொழு உரம் 5 டன், அடியுரமாக தழைச்சத்து 10 கிலோ, மணிச்சத்து 20 கிலோ, சாம்பல் சத்து 30 கிலோ உரங்களை இடவேண்டும்.
இத்துடன் போராக்ஸ் 4 கிலோ, நுண்ணூட்டக் கலவை 5 கிலோவும் விதைப்பு முடிந்தவுடன் நிலத்தின் மேல் இடவேண்டும். செடிகள் நன்கு வளர்ந்து அதிக காய்கள் பிடித்து மகசூலை அதிகரிக்க விதைத்த 25-35 நாள்களில் பூக்கும் தருணத்தில் பசஅம நிலக்கடலை ரிச் 2.2 கிலோவுக்கு 200 லிட்டர் நீர் ஊட்டச்சத்து தெளிக்கவும்.
களை நிர்வாகம்: நிலத்தில் உள்ள பயிர்ச்சத்து வீணாகாமல் தவிர்க்கவும், களைகள் மூலம் மண், ஈரம் விரயமாவதைத் தவிர்க்கவும், பயிர்களுக்கு போதிய சூரிய ஒளி கிடைக்கவும், பூச்சி நோய்கள் பரவாமல் தடுத்து அதிக விளைச்சல் பெறுவதற்கும் ஒரு ஏக்கருக்கு புளுகுளோரலின் களைக் கொல்லியை 800 மில்லி என்ற அளவில் விதைத்த 3 நாள்களுக்குள் நிலத்தில் தெளித்து களைகளைக் கட்டுப்படுத்தலாம். விதைத்த 45-ஆம் நாள் மண் அணைக்க வேண்டும். மண் அணைப்பதால் விழுதுகள் எளிதில் மண்ணில் இறங்குவதற்கு ஏதுவாகி, செடியில் அதிக எண்ணிக்கையில் காய்கள் பிடிக்கும்.
ஜிப்சம் இடுதல்: ஒரு ஏக்கருக்கு 80 கிலோ ஜிப்சத்தை விதைக்க 40 முதல் 45-ஆம் நாள் கழித்து செடிகளைச் சுற்றி மண் அணைக்க வேண்டும். ஜிப்சத்தில் சுண்ணாம்புச் சத்தும், கந்தகச் சத்தும் அடங்கி உள்ளன. சுண்ணாம்புச் சத்து காய்கள் திறட்சியாகவும், அதிக எடை உடையதாகவும் உருவாக வழி செய்கிறது. கந்தகச் சத்து நிலக்கடலையில் எண்ணெய்ச் சத்தை அதிகரிக்கிறது.
நீர் நிர்வாகம்: விதை உற்பத்தியில் வயலில் களைகள் அதிகமாக பெருகுவதைத் தடுக்கவும், பூச்சி நோய் கட்டுப்பாட்டிற்கும் செடிகள் நன்கு வேரின்றி காய் உருவாகவும் நீர் நிர்வாகம் மிக முக்கியமாகும். நிலக்கடலை விதை உற்பத்தியில் நீர் பாய்ச்ச வேண்டிய முக்கிய நிலைகள் விதைக்கும் சமயம், உயிர்த் தண்ணீர் விதைத்த 4 முதல் 5-வது நாள், விதைத்த 20 முதல் 22-ஆம் நாள், விழுது இறங்கும் சமயம், காய்பிடிப்பு, முதிர்ச்சி தருணத்தில் நீர் பாய்ச்ச வேண்டும்.
பயிர்ப் பாதுகாப்பு: பூச்சி, நோய்களின் தாக்குதல் தென்பட்டவுடன் பூச்சி, பூஞ்சாணக் கொல்லி மருந்துகளை தெளித்துக் கட்டுப்படுத்துவதன் மூலம் மகசூல் இழப்பைத் தவிர்க்கலாம்.
பூச்சிக் கொல்லிகள், சாறு உறிஞ்சும் பூச்சிகள்: இலைப்பேன், தத்துப்பூச்சி, அசுவினி - இமிடாகுளோப்ரிட் - 100 மி.லி. (அ) டைமெத்தோயேட் - 1000 மி.லி. சுருள் பூச்சி -டைமெத்தோயேட் - 1000 மி.லி. இலைகளைக் கடித்து உண்ணும் பூச்சிகள் (புரோடினியா புழு, பச்சைப் புழு, சிகப்பு கம்பளிப்புழு) ஸ்பைனாசாட் - 150 மி.லி. (அ) இன்டாக்ஸாகார்ப் - 250 மி.லி. (அ) மெத்தோமில் - 100 கிராம்
துருநோய், இலைப்புள்ளி நோய் ஆகிய நோய்களுக்கு கார்பெண்டசிம் - 500 கிராம் (அ) மான்கோசெப் - 1000 கிராம் பூஞ்சாணக் கொல்லி ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும்.
கலவன் நீக்குதல்: 2 அல்லது 3 முறை கலவன் பயிர்களை நீக்க வேண்டும். மெலிந்த, நோய்கள் தாக்கிய, மாறுபட்ட குண அதிசயங்களைக் கொண்ட, வரிசையிலிருந்து தள்ளி முளைத்த செடிகளை அகற்ற வேண்டும்.
பூக்கும் தருணத்தில், மாறுபட்ட செடி அமைப்பு, மாறுபட்ட பூவிதழ்கள், மாறுபட்ட கிளை அமைப்பு கொண்ட செடிகளை அகற்ற வேண்டும். காலதாமதமாக பூக்கும் செடிகளையும் அகற்ற வேண்டும். அறுவடை செய்யும் போது, நோய்களினால் பாதிக்கப்பட்ட காய்கள் உள்ள செடிகள், மாறுபட்ட காய் அமைப்பு கொண்ட செடிகளை அகற்ற வேண்டும்.
விதை அறுவடை மற்றும் சேமிப்பு: சரியான தருணத்தில் அறுவடை செய்வது தரமான விதை உற்பத்தியில் மிக முக்கிமான பணியாகும். உரிய காலத்தில் திட்டமிட்டு அறுவடை செய்வதினால் நிலக்கடலையில் அறுவடை சேதாரத்தை கட்டுப்படுத்தலாம். நுனி இலை மஞ்சளாக மாறுதல், அடி இலைகள் காய்ந்து உதிர்வது பயிர் முதிர்ச்சி அடைந்தற்கு அறிகுறியாகும். சில செடிகளைப் பிடுங்கி காய்களை உடைத்துப் பார்த்தால் தோலின் உட்பாகம் கரும்பழுப்பு நிறமாக இருக்கும். பிறகு செடிகளை பிடுங்கி சேகரித்தவுடன், காய்களை செடியிலிருந்து பிரித்தெடுக்கவேண்டும்.
அறுவடையின்போது காய்களில் கிட்டத்தட்ட 35 சதவீதம் முதல் 40 சதவீத ஈரப்பதம் இருக்கும். காய்களை 2 அல்லது 3 நாட்கள் நன்கு வெயிலில் உலர்த்த வேண்டும். காய்களை 12 சதவீத ஈரப்பதம் வரும் வரை காய வைக்கலாம். இவ்வாறு உலர்த்திய காய்களை நல்ல பைகளில் சேமித்து வைக்க வேண்டும்.
விதை மகசூல்: இறவையில் ஒரு ஏக்கருக்கு நிலக்கடலை காய்கள் 900 கிலோ முதல் 1,100 கிலோ மகசூல் தரவல்லது. விதை உற்பத்திக்கு விதைச் சான்று, விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு உற்பத்தி செய்யப்படும் விதையின் இனத்தூய்மை பற்றியும் விதைத்தரம் பற்றியும் உத்தரவாதம் அளிப்பதே விதைச் சான்றளிப்பு ஆகும்.
மாநில விதைச்சான்று துறை அலுவலர்களைத் தொடர்பு கொண்டு விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும். பயிர் பூக்கும் பருவத்திலிருந்து அறுவடைக்குள் 2 முறை விதைச் சான்று அலுவலர்களால் வயல் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
ஆய்வின்போது பரிந்துரைக்கப்பட்ட வயல், விதைத் தரம் இருந்தால் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்ட விதைகளுக்கு சான்றளிக்கப்பட்டு அவை விற்பனைக்கு தயாராகும்.
எனவே உங்கள் விதை உற்பத்தி வயல்கள் விதைச் சான்றளிப்புக்கு உட்படுத்தி இனக்கலப்பற்ற தரமான விதைகளை உற்பத்தி செய்ய முடியும். விதைச்சான்று பெறுவதற்கு அருகாமையில் உள்ள விதைச் சான்றளிப்பு அலுவலர்களை அணுகி மேலும் விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலையத்தை 044 - 2745 2371 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.